காயமே இது பொய்யடா – ஒர் பார்வை

உடலின் வெளிப்புறத்தில் தாக்குதல் ஏற்படுவதால் வரும் பாதிப்பே ‘ட்ரௌமா’ என்று சொல்லப்படுகிறது. ‘ட்ரௌமா’ என்றால் காயம் என்று பொருள்.

வன்முறைத் தாக்குதல் மூலம் உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களைப் பற்றி விரிவாக அலசப்படும் ஓர் அறிவியல் பாடம்தான் ‘ட்ரௌமடாலஜி’ (Traumatology).

விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து இதில் விரிவாக விளக்கப்படுகிறது.

பலவித விபத்துக்களான சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள், ரயில் மற்றும் விமான விபத்துக்கள், கப்பல் தரை தட்டுவதால் ஏற்படும் விபத்து, சர்க்கஸ் விபத்து, துப்பாக்கிச் சூடு, நீரில் மூழ்கச் செய்து மூச்சை அமுக்கிக் கொல்ல முயற்சிக்கும் போது ஏற்படும் பாதிப்பு, தற்கொலை முயற்சியில் ஏற்படும் காயங்கள், வீடுகளுக்குத் தீ மூலம் ஏற்படும் பாதிப்பு – இப்படி எவ்வளவோ விபத்துக்களுக்கு இந்த ‘ட்ரௌமா’ விளக்கம் தருகிறது.

‘ட்ரௌமடாலஜி’ என்பது தற்காலத்தில் ஏற்பட்ட புதிய பாடமல்ல.

போர்க்காலங்களில் போரின் போது பாதிக்கப்பட்ட போர் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையே, இதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறது.

பர்மிங்காம் பல்கலைகழகத்திலிருந்து வில்லியம் ஜிஸ்ஸோன், ஆக்ஸ்போர்டு பள்ளிக்கூட ஆஸ்பத்திரியைச் சார்ந்த ஜே.சி.ஸ்காட், வாக்ஸ்ஹால் மோட்டார் கம்பெனியைச் சார்ந்த எல்.டபிள்யூ.ப்ளுவெஸ் ஆகியோர் விபத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிப்பதில் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள்.

பல்வேறு விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு – காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர், உடல் ரீதியில் ஏற்படும் காயங்கள் பற்றியும், அவைகளுக்கு முறையாக அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மிக நுணுக்கமாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

நரம்பியல் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்றவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும், காயங்களைப் பற்றிய மிக நுணுக்கமான விவரங்களை, ஆய்வுகளை, தரப்பட்டிருக்கும் சிகிச்சை போன்றவைகளையும் முறையாகக் குறிப்பெடுத்து பதிவு செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் சாலை விபத்தினால் பாதிப்படைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க தயங்குவதைப் பார்க்கிறோம்.

சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கவே இப்படி தயக்கம் காட்டுகின்றனர்.

அரசாங்க மருத்துவரோ, மருத்துமனையோ விபத்து நடந்த இடத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் பட்சத்தில், அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையோ, மருத்துவரோ சிகிச்சையளிக்கத் தயங்குவதின் மூலம் பாதிப்படைந்தவர்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

உடனடி சிகிச்சை அளிக்காததால் நேர விரயம் ஏற்பட்டு மரணமே சம்பவிக்கிறது.

விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் அரசாங்க மருத்துவரோ, மருத்துவமனையோதான் சிகிச்சையளிக்க வேண்டும் என எந்த ஒரு சட்டத்திலும் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.

சட்டரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய ஒருசில முறைகளைத்தான் வலியுறுத்துகின்றன.

நீதிமன்ற வழக்கின்போது சிகிச்சையளிக்கும் மருத்துவர் வந்து ஆதார பூர்வமாக விபத்து நிகழ்வைப் பற்றிய குறிப்புகளை, உண்மைகளை வழங்கவே சட்டத்தில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் அடங்கிய பதிவேடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

உச்சி முதல் பாதம் வரையிலான ஏற்பட்ட காயங்களைப் பற்றிய முழுவிவரங்களும், விபத்துக்குள்ளனவரின் அங்க அடையாளங்களுடன் இதில் பதிவு செய்யப்படவேண்டும்.

அதுமட்டுமின்றி, விபத்துக்குள்ளானவரின் வாக்குமூலமும் இரண்டுபேர் சாட்சியங்களுடன் தரப்பட வேண்டும்.

மிக மோசமான நிலையில் விபத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவலர்கள் மூலம் விபத்துக்குள்ளானவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும்.

விபத்துப் பதிவேட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும் முறை, அவ்வப்போது சிகிச்சையளிக்கும் மருத்துவர் பற்றிய விவரங்கள், நோயாளியின் உடல்நல முன்னேற்றம், சிகிச்சை முடிவில் நோயாளியின் உடல்நல அபிவிருத்தி போன்றவைகள் அவசியம் குறிப்பிடப்பட வேண்டும்.

விபத்துப் பதிவேட்டின் பிரதான அசல் பிரதியை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தை, சிகிச்சை அளிக்கபட வேண்டிய ‘பொன்னான நேரமாகக்’ கருத வேண்டும்.

அப்படிப்பட்ட அந்த ‘பொன்னான நேரத்தில்’ தாமதமின்றி உடன் செய்யப்பட வேண்டியவைகள்

விபத்துக்குள்ளான நபரை மிகத்துரிதமாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டும்.

அங்குள்ள மருத்துவரிடம் பாதிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்சம் முதலுதவியாவது செய்யக் கேட்டுக் கொள்ளலாம்.

குளுக்கோஸ் ஏற்றுதல், நோயாளியின் அறையில் காற்றோட்ட வசதியை ஏற்படுத்துதல், வெளியாகும் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துதல், எலும்பு முறிந்திருக்கும் பட்சத்தில் தாமதமின்றி அவை ஒன்று சேர, முறையான சிகிச்சை ஏற்பாடு போன்றவைகளை உடனடியாகச் செய்தல்

விபத்துக்களின் தன்மையைப் பொறுத்து மிக மோசமான நிலையிலிருக்கும் நபருக்கு சிகிச்சையளிப்பதில் முக்கியத்துவம் அளித்தல்

மிக அவசியமான மருத்துவ பரிசோதனைகளை மட்டுமே உடனடியாகச் செய்தல்

ஆம்புலன்ஸ் வண்டியிலுள்ள மருத்துவமனை உதவியாளர்களை மருத்துவ ரீதியாகவும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் செயல்படச் செய்தல்

விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் எந்த அளவுக்குத் துரிதமாகச் செயல்பட்டு முறையாக சிகிச்சையளிக்கிறமோ, அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவரின் நிலை அபிவிருத்தியடையும்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.