காரைக்கால் அம்மையார் – எப்போதும் இறையடியில் பாடும் பேறு பெற்றவர்

காரைக்கால் அம்மையார் எப்போதும் இறைவனின் திருவடியின் அருகில் இருந்து அவரைப் பாடும் அரும்பேற்றினைப் பெற்றவர். இறையருளால் மாய மாங்கனியை இருமுறை பெற்றவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூன்று பெண் நாயன்மார்கள் அடங்குவர். அவர்கள் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆவர். இம்மூவருள்ளும் காரைக்கால் அம்மையாரே மூத்தவர்.

சிவாலயங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை வைத்திருப்பதைக் காணலாம். அவர்களுள் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த கோலத்திலும் ஏனையோர் நின்ற கோலத்திலும் அருளுவர்.

இறைவனைக் காண கயிலை சென்ற இவ்வம்மையாரை வரவேற்ற சிவபெருமான் ‘அம்மை’ என்றழைத்ததோடு ‘அமர்க’ என்று உபசரித்தார். ஆகவே இவரை அமர்ந்த கோலத்தில் சிலை வடிப்பது வழக்கமாக உள்ளது.

இறைவனால் இவர் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டதாலும், காரைக்கால் என்னும் ஊரில் பிறந்ததாலும் இவர் காரைக்கால் அம்மையார் என்று போற்றப்படுகிறார்.

காரைக்கால் அம்மையார் இளமைப் பருவம்

சோழநாட்டின் பகுதியான கடற்கரை பட்டினமாகத் திகழ்ந்த காரைக்காலில் தனதத்தன் – தர்மவதி என்னும் வணிகத் தம்பதியர் வசித்து வந்தனர்.

அவர்களுக்கு இறையருளால் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு புனிதவதி என்று பெயரிட்டனர்.

புனிதவதி சிறுவயதிலேயே சிவனாரிடத்தில் பேரன்பு கொண்டிருந்தாள். சிவவழிபாடும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யும் வழிபாட்டினையும் தவறாது செய்து வந்தாள்.

அவள் வளர்ந்து குமரிப் பருவம் எய்தியதும் தனதத்தன் நாகபட்டிணத்தைச் சார்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை திருமணம் செய்வித்தார்.

ஓரே பெண்ணாதலால் பரமதத்தனையும் புனிதவதியையும் காரைக்காலிலேயே குடி வைத்தார் தனதத்தன்.

அவ்விருவரும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். பரமதத்தனும் சிறப்பாக வணிகத்தை மேற்கொண்டான்.

புனிதவதி இல்வாழ்க்கையில் இருந்த போதிலும் சிவனாரை வழிபடுவதையோ, சிவனடியாருக்கு திருவமுது அளிப்பதையோ நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

மாய மாங்கனி பெறுதல்

அப்போது ஒருநாள், பரமதத்தனின் கடைக்கு வந்த வணிகர் ஒருவர் இரு மாங்கனிகளை பரமதத்தனுக்கு பரிசாகக் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன் ஏவலாள் மூலம் வீட்டிற்கு கொடுத்தனுப்பினான்.

ஏவலாள் கொடுத்த மாங்கனிகளைப் பெற்றுக் கொண்ட புனிதவதி மதிய உணவினை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.

அப்போது சிவனடியார் ஒருவர் புனிதவதியின் இல்லத்திற்கு வந்தார்.

அவருடைய முகம் பசியால் வாடியிருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள் புனிதவதி. அப்போது மதிய உணவிற்கான அன்னம் மட்டுமே தயாராகி இருந்தது. கறியமுது தயராகவில்லை.

எனினும் சிவனடியாரின் பசியைப் போக்கும் பொருட்டு அவருக்கு தகுந்த ஆசனம் இட்டு அமரச் செய்து, தயிர் அன்னத்துடன் பரமதத்தன் கொடுத்தனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றினை அரிந்து பரிமாறினாள்.
வயிறு நிரம்பிய சிவனடியார் புனிதவதியை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அவர் சென்ற பின் மதிய வேளைக்கான கறியமுதுடன் தேவையான உணவுகளைத் தயார் செய்தாள் புனிதவதி.

நண்பகல் வேளையில் உணவு உண்ண பரமதத்தன் வீட்டிற்கு வந்தான்.

அவனுக்கு அன்னத்துடன் கறியமுது மற்றும் செய்த உணவுப் பதார்த்தங்களை படைத்தாள். இறுதியாக மீதம் இருந்த ஒரு மாங்கனியை அரிந்து பரிமாறினாள்.

மாங்கனியுடன் உணவினை உண்ட பரமதத்தன் அதன் சுவையில் மயங்கி மற்றொரு மாங்கனியையும் பரிமாறுமாறு புனிதவதியைக் கேட்டான்.

அதனைக் கேட்டதும் புனிதவதி திகைத்தவாறே உள்ளே சென்று இறைவனிடம் “கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளுள் ஒன்றினை அடியாருக்கு திருவமுது செய்து விட்டேன். மற்றொன்றை கணவருக்கு கொடுத்து விட்டேன். இப்போது அவர் மற்றொரு மாங்கனிக் கேட்கிறார். இச்சூழ்நிலையில் எனக்கு தாங்கள் தான் உதவ வேண்டும்” என்று உருகி வேண்டினாள்.

அப்போது இறையருளால் மாங்கனி ஒன்று புனிதவதியின் கைகளில் வந்து சேர்ந்தது. இறைவனின் கருணையைப் போற்றியபடி கணவனிடம் சென்று அக்கனியைக் கொடுத்தாள்.

அதனைப் புசித்த பரமதத்தன் முதலில் உண்டதைவிட, இக்கனி மிகவும் சுவையாக இருப்பதைக் கண்டு வியந்தான்.

புனிதவதியிடம் ‘முதலில் உண்டதைவிட இக்கனி மிகவும் சுவையாக உள்ளதே. இதை யார் கொடுத்தார்கள்?” என்று வினவினான் பரமதத்தன்.

இறையருளால் கிடைத்தது என்பதைக் கூற வேண்டாம் என்று எண்ணினாள். பின்னர் கணவனிடத்தில் மறைப்பது நன்றன்று என்று நினைத்து நடந்தவைகளை விவரித்து, இறையருளால் பழத்தைப் பெற்றதைக் கூறினாள்.

“உலகத்தில் இறையருளால் யாராவது மாங்கனியைப் பெற முடியாமா?” என்று சிரித்தவாறே “அப்படியானால் இன்னொரு மாங்கனியையும் இறைவனிடம் பெற்றுத் தா” என்று கூறினான் பரமதத்தன்.

இதனைக் கேட்டதும் புனிதவதி உள்ளே சென்று “இறைவா, இவருடைய விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் நான் சொன்னது பொய்யாகி விடுமே. என் மீது கருணை காட்டுங்கள்” என்று மனமுருகி வேண்டினாள் புனிதவதி.

அப்போதும் இறையருளால் புனிதவதியின் கையில் மாங்கனி ஒன்று தோன்றியது. அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு இறைவனை மனதிற்குள் துதித்தபடி பரமதத்தனின் கையில் கொடுத்தாள்.

பரமதத்தனின் கைக்குச் சென்றதும் மாங்கனி மறைந்தது. நடந்தவைகளைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற பரமதத்தன் ‘இவள் சாதாரணப் பெண் அல்ல. தெய்வப்பிறவி. இனி இவளுடன் குடும்பம் நடத்த இயலாது’ என்று மனதிற்குள் எண்ணினான்.

பேயுரு பெறுதல்

தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தாமல், குல வழக்கப்படி கடல் கடந்து வாணிபம் செய்ய விரும்புவதாக புனிதவதியிடம், சுற்றத்தாரிடம் கூறி, தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு காரைக்காலை விட்டு நீங்கினான் பரமதத்தன்.

வெளிநாட்டிற்குச் சென்று பெருஞ்செல்வம் ஈட்டி பின்பு காரைக்கால் செல்லாமல் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினான் பரமதத்தன். அங்கே மற்றொரு வணிகப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

இரண்டாவது மனைவியால் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, ‘தெய்வப்பிறவி’ எனக் கருதிய முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்ற பெயரையே இட்டு பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்தான் பரமதத்தன்.

கணவன் கடல் வாணிகத்திற்குச் சென்ற பின்பு புனிதவதியார் கணவனின் நினைவாக அறவழியில் வாழ்ந்து சிவ வழிபாட்டையும், சிவனடியார் திருவமுது வழிபாட்டினையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

புனிதவதியின் சுற்றத்தார்கள் பரமதத்தன் பாண்டிய நாட்டில் தங்கியிருப்பதைக் கேட்டறிந்தனர்.

கணவனுடன் புனிதவதியை சேர்த்து வைப்பதே முறை என்று எண்ணி அவளை சிவிகையில் (பல்லக்கில்) ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டு எல்லையை அடைந்தனர்.

ஆட்கள் மூலம் பரமதத்தனுக்கு புனிதவதியின் வருகையை சொல்லி அனுப்பினர். புனிதவதி பாண்டிய நாட்டிற்கு வந்திருப்பதை அறிந்ததும், பரமதத்தன் இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் புறப்பட்டு புனிதவதி இருந்த இடத்திற்கு வந்தான்.

பரமத்தத்தன் மகள் மற்றும் இரண்டாவது மனைவியுடன் புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்கினான். அதனைக் கண்டதும் புனிதவதியும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

“உன்னுடைய மனைவியின் கால்களில் ஏன் விழுந்து வணங்குகிறாய்?” என்று அவர்கள் அவனிடம் வினவினர்.

அதற்கு பரமதத்தன் புனிதவதி இறைவனிடம் மாங்கனிகளைப் பெற்றதைக் கூறி “இவர்கள் தெய்வப்பிறவி. ஆதலால் தான் இவர்களை விட்டு நீங்கி கடல் வாணிபம் செய்து இப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். இதோ, குழந்தைக்கும் தெய்வப்பிறவி நினைவாக புனிதவதி என்ற பெயரையே சூட்டியுள்ளேன். நீங்களும் இத்தெய்வப்பிறவியை வணங்குங்கள்.” என்று கூறினான்.

கணவன் தன்னை நிராகரித்ததைக் கண்ட புனிதவதி இறைவனிடம் “ஐயனே, கணவனுக்காக கொண்ட அழகு இனி தேவையில்லை. ஆகையால் எலும்புகளால் ஆன பேய் உருவத்தை எனக்கு வழங்குங்கள்.” என்று உருகி வேண்டினார்.

அம்மையாரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கி இருமறை மாய மாங்கனிகளை அளித்த இறைவனார், புனிதவதியாரின் உடலில் இருந்த புறஅழகுக்குக் காரணமான தசைகளை நீக்கி, எலும்புகளாலாகிய பேயுருவை தந்தருளினார்.

அதனைக் கண்டதும், பரமதத்தனும், உறவினர்களும் அஞ்சி அம்மையாரை வணங்கி அவ்விடம் விட்டு நீங்கினர்.

இறைவனை இசைத்தமிழால் போற்றுதல்

இறையருளால் அம்மையாருக்கு தமிழில் புலமையும் கிடைத்தது. அவர் அற்புத திருவந்தாதி (101 பாடல்கள்) மற்றும் திருவிரட்டை மணிமாலை (20 பாடல்கள்) ஆகிய பாடல்களை இறைவனைப் போற்றிப் பாடினார்.

(அந்தாதி, மாலை ஆகிய பிரபந்த வகைச் சிற்றிலயங்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும்.

அந்தாதி வகைப் பாடல்களில் முதல் பாடலில் உள்ள எழுத்து, அசை, சீர் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும்.

இரட்டை மணிமாலை என்னும் பாடல் அமைப்பில், கழுத்தில் அணியும் மாலைக்கு இருவேறு வண்ண மணிகளை அடுத்தடுத்து கோர்ப்பது போல் வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகள் அல்லது வெண்பா, விருத்தப்பா என்னும் பாவகைகளால் அந்தாதியாகவும் காணப்படும். இது இருபது பாடல்களைக் கொண்டிருக்கும்.)

பின்பு திருக்கயிலாயமலை சென்று உமையம்மையுடன் இருக்கும் சிவனாரைக் காணும் ஆவல் அம்மையாருக்குப் பிறந்தது. ஆகவே அவர் வடதிசை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். அவருடைய உருவத்தைக் கண்டோர் அஞ்சி ‘பேய், பேய்’ என்று அலறியபடி ஓடினர்.

‘எம்பெருமானுக்கு என்னை அடையாளம் தெரிந்தால் போதும். மற்றவர்களுக்கு நான் எப்படி இருந்தால் என்ன?’ என்று எண்ணியபடி கயிலையை நோக்கி முன்னேறினார்.

கயிலை இருக்கும் இமயமலையில் ஏறும்போது, ‘எம் பெருமான் இருக்கும் இடத்தில் காலால் நடக்கலாகாது’ என்று எண்ணி தலைகீழாக கையால் நடக்கலானார்.

இதனைக் கண்ட உமையம்மை இறைவனாரிடம் “என்புருக் கொண்டு தலைகீழாய் நடந்து வருபவது யாரோ?” என்று வினவினார்.

இறைவனார் “இப்பெண்மணி நம்முடைய அம்மை. நம்மிடம் விரும்பியே இவ்என்புருவைப் பிரார்த்தித்துப் பெற்றார்.” என்றார்.

அம்மையார் கயிலையை அடைந்ததும் இறைவனார் “அம்மையே, வருக. அமர்க” என்று கருணையோடு வரவேற்றார்.

தமக்கு அம்மையே இல்லாதவனும், உலக உயிர்களுக்கு அம்மையாக விளங்குபவனுமாகிய இறைவன் கூறியதைக் கேட்டதும் அம்மையார் “அப்பா” என்றழைத்து அவருடைய திருவடி நிழலில் வீழ்ந்தார்.

அப்போது இறைவனார் “நீ வேண்டும் வரம் யாது?’ என்று வினவினார்.

அம்மையார் “அப்பா என்றும் உன்னை மறவாத இன்ப அன்பு வேண்டும். பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால் என்றும் உன்னை மறவாமை வேண்டும். என்றும் உன் தாமரைத் திருவடிக்கீழ் உன் புகழைப் பாடி உறையும்படி திருவருள் புரிய வேண்டும்.” என்று மனமுருகி வேண்டினார்.

இறைவனார் “அவ்வாறே ஆகுக. தென்னாட்டின் திருவாலங்காட்டில் யாம் புரியும் ஊர்த்துவ நடனத்தைக் கண்டு இன்புற்று அங்கிருந்து நம்மைப் பாடுவாயாக.” என்று அருள்புரிந்தார்.

இறைவனாரின் திருவருளை எண்ணி மகிழ்ந்த அம்மையார் அங்கிருந்து புறப்பட்டு தலையாலே நடந்து திருவாலங்காட்டை அடைந்தார்.

அங்கு இறைவனாரின் திருநடனத்தைக் கண்டு ‘கொங்கை திரங்கி’ என்ற திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 1 மற்றும் ‘எட்டியிலவம்’ எனத் தொடங்கும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்2 ஆகியவற்றைப் பாடினார்.

பின்னர் ஆடலரசனின் திருவடிகளில் என்றும் பாடிப் பரவசமடையும் பிறவாப் பெருவாழ்வைப் பெற்றார்.

தமிழில் பதிகம் எனப்படும் 11 பாடல்கள் கொண்ட தொகுப்பை முதலில் பாடியவர் காரைக்கால் அம்மையார்.

பதிகத்தின் முதல் பத்துபாடல்கள் இறைவனைப் புகழ்ந்து பாடப்படும். இப்பாடல்களைப் பாடுவதால் கிடைக்கும் பலன்களை கடைசிப் பாடல் விளக்கிக் கூறும்.

இவருடைய பதிக முறையைப் பின்பற்றியே தேவாரப் பதிகங்கள் பிற்காலத்தில் பாடப் பெற்றன.

காரைக்கால் அம்மையாரின் சிறப்புகள்

தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவனாரைப் போற்றிப் பாடியதால் இவர் இசைத்தமிழின் அன்னை எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

அந்தாதி, மாலை என்னும் பிரபந்த வகை சிற்றிலக்கியத்தைத் தமிழுக்கு முதலில் அருளியவர்.

நடராஜப் பெருமானின் நடன உருவத்தில் கீழே காரைக்கால் அம்மையார் இசைத்தபடி அமர்ந்திருப்பார்.

ஆதியும், அந்தமுமாகிய இறைவனால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் அருளும் ஒரே நபர்.

காரைக்காலில் இவருக்கு தனிக்கோயில் உள்ளது.

இவரைப் போற்றும் விதமாக காரைக்கால் சோமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பௌர்ணமி அன்று மாங்கனித் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது சுவாமி தேரில் வீதி உலா வரும் போது பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவனார் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காரைக்கால் அம்மையார் தமிழ்த் தொண்டு

முதன் முதலில் அந்தாதி முறையில் இவர் பாடிய ‘அற்புத திருவந்தாதி’ பன்னிரு திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்தாதி அமைப்பில் முதலில் பாடப்பட்டுள்ள நூல். ஆதலால் இது ‘ஆதி அந்தாதி’ ‘திருவந்தாதி’ என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

இரட்டை மணிமாலை என்னும் பிரபந்த வகைச் சிற்றிலக்கியத்தை முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியால், காரைக்கால் அம்மையார் இயற்றிய இரட்டை மணிமாலை ‘திருவிரட்டை மணிமாலை’ என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை முதன் முதலில் பதிக முறையில் பாடப்பெற்ற இரு பாடல்களின் தொகுப்பு திருவாலாங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைப் பதிகம் முறையில் முதலில் பாடப்பட்டதால் மூத்த பதிகங்கள் என்றும் திருப்பதிகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

காரைக்கால் அம்மையார் குருபூஜை பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இறையருளால் பேயுருக் கொண்டு இசைத்தமிழால் இறையடியில் இருந்து இறைவனை எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் காரைக்கால் அம்மையாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘பேயார்க்கும் அடியேன்’ என்று கொண்டாடுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.