கார்த்திகை மாத சிறப்புக்கள்

கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான்.

ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது பழமொழி. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

 

அடைமழையில் அன்பு சகோதரர்கள்
அடைமழையில் அன்பு சகோதரர்கள்

 

கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

 

ஐயப்பனை வேண்டி சபரிமலை பயணம் செய்ய இருமுடி கட்டுதல்
ஐயப்பனை வேண்டி சபரிமலை பயணம் செய்ய இருமுடி கட்டுதல்

 

இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடத்தப்பெறுவதால் இது திருமண மாதம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

திருமால் துளசியை இம்மாத வளர்பிறை துவாதசியில் திருமணம் செய்து கொண்டார். எனவே இம்மாதம் முழுவதும் துளசித் தளங்களால் அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசித் தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

 

கார்த்திகை தீபம்

 

கார்த்திகை தீபம் தமிழர்களின் பராம்பரிய திருவிழாவாகும். கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

கார்த்திகை தீப வழிபாடு பற்றி சங்கநூலான புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. ஒளவையார் மற்றும் திருஞானசம்பந்தர் கார்த்திகை தீப வழிபாடு பற்றி தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது.

முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

திருக்கார்த்திகை அன்று எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அன்றைய தினம் விரதமுறை பின்பற்றப்படுகிறது.

வழிபாட்டில் பொரி உருண்டை அல்லது கார்த்திகைப் பொரி இடம் பெறுகிறது.

இன்றைய தினம் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உள்ளது.

 

சொக்கப்பனை ஏற்றும் காட்சி
சொக்கப்பனை ஏற்றும் காட்சி

 

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றி வழிபட கண்நோய் தீரும். மனக்கவலைகள் நீங்கும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

 

சோமாவார விரதம்

சிவன்
சிவன்

 

சோமாவார விரதம் என்பது கார்த்திகை திங்கள் கிழமைகளில் சிவபெருமானை நினைத்து கடைப்பிடிக்கும் விரத முறையாகும்.

தனது மனைவியர்களிடம் பராபட்சமற்ற அன்பு காட்ட தவறிய சந்திரனை தட்சன் ஒளி இழக்குமாறு சபித்தான். ஒளி இழந்த சந்திரன் சோமாவார விரதமுறையைப் பின்பற்றி இறைவனின் திருவருளால் தேய்ந்து வளரும் நிலையைப் பெற்றான்.

மேலும் பிறைச்சந்திரனாக சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியத்தையும் கார்த்திகை சோமாவாரத்தில் பெற்றான். சந்திரனை சூடிய சிவபெருமான் சந்திரசேகரன் என்று அழைக்கப்படுகிறார்.

இவ்விரத முறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலையில் சிவாலயம் சென்று வழிபட்டு இரவில் உண்ண வேண்டும். இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் திருமணம் ஆகாதவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையோடு வளமான வாழ்வு பெறுவர்.

திருமணம் ஆனவர்கள் நல்ல வாழ்க்கை கிடைக்கப் பெறுவர். இவ்விரத முறையில் கணவன் மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது சிறப்பான பலனைத் தரும்.

 

உமாமகேஸ்வர விரதம்

கேதார கௌரி விரதம்

 

கடுமையான விரதம் மேற்கொண்டே உமையம்மை கார்த்திகை பௌர்ணமி அன்று இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். அவ்வாறாக அம்மையும் அப்பனும் இணைந்து உமையொரு பாகனாக அர்த்தநாரீஸ்வராக காட்சியருளிய தலம் திருவண்ணாமலை என்று அருணாசல புராணம் குறிப்பிடுகிறது.

எனவே கார்த்திகை பௌர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்விரத்தில் காலையில் மட்டும் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத முறை மேற்கொள்ளுவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் தீரும்.

 

கார்த்திகை ஞாயிறு விரதம்

இவ்விரத முறை கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி அம்மை, அப்பரின் பேரருள் கிடைக்கும்.

ஸ்ரீவாஞ்சியம் என்னும் இடத்தில் சிவபெருமானை வணங்கி  திருமால் தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேர்ந்தார். இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் கார்த்திகை நீராடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உமையோடு இறைவன் குப்தகங்கையின் கிழக்கு கரையில் ஆசிவழங்குவதாக் கருதப்படுகிறது. எனவே கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோசம், பாவங்கள் நீங்கும்.

 

கார்த்திகை விரதம்

முருகன்
முருகன்

 

கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வின் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

 

விநாயகர் சஷ்டி விரதம்

மருதமலை விநாயகர்
மருதமலை விநாயகர்

 

இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

 

முடவன் முழுக்கு

காவிரி ஆறு
காவிரி ஆறு

 

முடவன் முழுக்கு என்பது கார்த்திகை முதல் நாள் காவிரியில் நீராடுவதைக் குறிக்கும்.

முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு அருகில் வசித்து வந்தான். ஐப்பசியில் காவிரியில் நீராடுவதற்காக மயிலாடுதுறைக்கு செல்ல தீர்மானித்து பயணத்தைத் துவங்கினான்.

மயிலாடுதுறையில் காவிரியை நீராட அணுகியபோது கார்த்திகை மாதம் முதல்நாள் வந்துவிட்டது.

துலா மாதத்தில் நீராட முடியாததை நினைத்து முடவன் வருந்தி இறைவனிடம் பிரார்த்தித்தான்.

இறைவனும் “இன்றைய தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு. உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்.”

“இனி யார் கார்த்திகை முதல் தேதி அன்று காவிரியில் நீராடினாலும், ஐப்பசி மாத முழுவதும் நீராடிய பலன் கிடைக்கும்” என்று அருளினார். இந்நிகழ்வே முடவன் முழுக்கு என்று அழைக்கப்படுகிறது.

இன்றைக்கும் காவிரியில் கார்த்திகை மாதம் முதல் நாளன்று நீராடல் சிறப்பாக நடைபெறுகிறது.

 

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி

துளசி
துளசி

 

கார்த்திகை மாத வளர்பிறை துவாதச நாளில் திருமால் துளசியை திருமணம் செய்து கொண்டார். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் திருமாலை துளசி தளத்தால் அர்ச்சனை செய்ய ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

கார்த்திகை மாத துவாதசி நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கங்கைக்கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

இம்மாதத்தில் திருமாலை கஸ்தூரியால் அலங்கரித்து தாமரை மலர்களால் வழிபட பெரும் பாக்கியத்தைப் பெறலாம்.

 

ப்ரமோதினி ஏகாதசி

பெருமாள்
பெருமாள்

 

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

 

ரமா ஏகாதசி

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி எனப்படும். இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். இருபத்தியோரு தான பலன்களைக் கொடுக்கும்.

 

கார்த்திகை மாதத்தினை சிறப்பு செய்தவர்கள்

கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை மாதத்தில் விரதமுறையைக் கடைப்பிடித்து வழிபாடுகள் மேற்கொண்டு வாழ்வின் கவலைகள் நீங்கி உயர் வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 

One Reply to “கார்த்திகை மாத சிறப்புக்கள்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.