கார சீடை செய்வது எப்படி?

கார சீடை அருமையான நொறுக்குத் தீனியாகும். இதனைத் தயாரிக்கத் தேவையான பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்து தயார் செய்யும் போது இதனுடைய சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

பொதுவாக சீடை என்றதும் அது வெடிக்கும் என்பதே பலருடைய பயமாகும். வெடிக்காமல் சீடை செய்ய சிலவற்றை பின்பற்றி மாவினைத் தயார் செய்தால் வெடிக்காமல் அதே சமயம் சுவையான சீடையைச் செய்ய இயலும்.

இதனை மாலை நேர நொறுக்குத் தீனியாகவும், தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளிலும் செய்து அசத்தலாம்.

நான் இந்த சீடை தயார் செய்ய புழுங்கல் அரிசியைப் பயன்படுத்தியுள்ளேன்.

நீங்கள் வழிபாட்டிற்கு படைக்க சீடையைச் செய்வதாக இருந்தால் புழுங்கல் அசிரிக்குப் பதில் பச்சரியைப் பயன்படுத்தி கீழ்கண்ட முறையில் சீடையைத் தயார் செய்யலாம்.

இனி சுவையான கார சீடை முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி மாவு – 1 கப்

உளுந்தம் மாவு – 2 டேபிள் ஸ்பூன்

பொரிகடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

கறுப்பு எள் – 1 ஸ்பூன்

பெருங்காயப் பொடி – ‍ 1/2 ஸ்பூன்

மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

நான் புழுங்கல் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி அரிசி மாவு மற்றும் உளுந்தம் மாவு தயார் செய்துள்ளேன்.

நீங்கள் கடையில் அரிசி மாவு மற்றும் உளுந்தம் மாவு வாங்கி உபயோகிப்பதாக இருந்தால், அவற்றை சூடு ஏறும் வரை வறுத்து சலித்து உபயோகிக்கவும்.

அரிசி மாவு தயார் செய்யும் முறை

கடையில் வாங்கும் மாவுகளின் விலை அதிகம் இருக்கும். ஆதலாலும் ஆரோக்கியத்தைக் கருதியும் அரிசி மற்றும் பருப்பினை உபயோகித்து மாவினைத் தயார் செய்துள்ளேன்.

மாவு வகைகளைத் தயார் செய்யும் முறை

புழுங்கல் அரிசியை சுமார் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

அரிசி நன்கு ஊறியதும் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, உலர்ந்த துணியினை விரித்து அதில் அரிசியைக் கொட்டி விரித்து விடவும்.

அரிசியினை தொடும்போது கையில் ஈரப்பதம் படாமல் இருக்கும்போது மிசினில் கொடுத்து இடித்துக் கொள்ளவும்.

புழுங்கல் அரிசி மிக்ஸியில் அரைபடாது. மிசினில் கொடுத்து மட்டுமே இடிக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் இடித்த மாவினைச் சேர்த்து வறுக்கவும். இடித்த மாவில் ஈரப்பதம் முழுவதும் போய் கோல மாவு போல பொடிப் பதத்திற்கு வறுக்கவும்.

வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும்.

சலித்த மாவினை மட்டுமே பயன்படுத்தவும்.

உளுந்தம் பயறினை வெறும் வாணலியில் போட்டு சிவக்கும் வரை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளவும்.

பொரிகடலையை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல் பொடியை சலித்துக் கொள்ளவும்.

சீடை தயார் செய்தல்

வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்தம் மாவு, பொரிகடலை மாவு, உப்பு, மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயப் பொடி, வெண்ணெய், சீரகம், எள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கலந்து கொள்ளவும்.

தேவையான பொருட்களைச் சேர்த்ததும்
ஒருசேரக் கலந்ததும்

அதனுடன் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து ஒருசேரத் திரட்டவும்.

தண்ணீரைச் சேர்த்து திரட்டும் போது
மாவினைத் திரட்டியதும்

சிறிதளவு மாவினை எடுத்து பெருவிரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலுக்கு இடையே வைத்து சின்ன உருண்டையாக மெதுவாக உருட்டவும்.

உருண்டைகளாகத் திரட்டியதும்

உருண்டை உருட்டும் போது அழுத்தி உருட்டவோ, உள்ளங்கைகளுக்கிடையே வைத்து உருட்டவோ கூடாது. உருட்டும்போது சிறிய கீறல் இருந்தாலும் பரவாயில்லை.

எல்லா மாவினையும் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளைத் திரட்டியதும் ஓரிரு நிமிடங்கள் உருண்டையின் மேற்புறம் சிறிது உலருமாறு விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய விடவும்.

அதில் தயார் செய்த உருண்டைகளை எண்ணையில் மூழ்கும்வரை சேர்க்கவும். அவ்வப்போது உருண்டைகளைக் கிளறி விடவும்.

உருண்டைகள் வேகும்போது

எண்ணெய் குமிழி அடங்கியதும் உருண்டைகளை வெளியே எடுத்து எண்ணெயை வடித்து எடுத்துக் கொள்ளவும். சுவையான கார சீடை தயார்.

காரச்சீடைகள் நன்கு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தவும்.

தேங்காய் எண்ணெயில் சீடை செய்யும்போது மணமும் சுவையும் அதிகரிப்பதோடு சீக்கிரம் சிக்கு வாடை வராமல் இருக்கும்.

சீடையைப் பொரிக்கும்போது வெடிக்காமல் இருக்க

மாவு வகைகளை வறுத்து சலித்துப் பயன்படுத்தவும்.

உருண்டைகளைத் திரட்டும்போது அழுத்தாமல் மெதுவாக உருட்டவும்.

உருண்டைகளின் மேற்புறத்தைத் தொடும்போது ஈரப்பதம் இல்லாதளவுக்கு காய்ந்ததும் எண்ணெயில் போடவும்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருண்டைகளைப் போடவும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேங்காயைத் துருவி வறுத்து மாவில் சேர்த்து உருண்டைகள் தயார் செய்யலாம்.

சீரகம் மற்றும் எள்ளிற்குப் பதிலாக ஓமத்தைச் சேர்த்தும் கார உருண்டை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.