கார தேங்காய் பால் செய்வது எப்படி?

கார தேங்காய் பால் வித்தியானமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

பொதுவாக தேங்காய் பால் இனிப்பாக இருக்கும். நாம் ஆப்பம், தோசை போன்றவற்றிற்கு தேங்காய் பாலுடன் மண்டை வெல்லம் அல்லது சர்க்கரை (சீனி) சேர்த்து இனிப்பாக பயன்படுத்துவோம்.

சர்க்கரை சத்து உள்ளவர்கள் இந்த இனிப்பு தேங்காய் பாலை பயன்படுத்த யோசிப்பர். ஆனால் கார தேங்காய் பால் சர்க்கரை நோயாளிகளும் உண்ணக் கூடியது.

இனி சுவையான கார தேங்காய் பால் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – 2 – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)

இஞ்சி – சுண்டு விரலில் பாதியளவு

கல் உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 2 எண்ணம்

கறிவேப்பிலை – 3 கீற்று

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்

 

செய்முறை

முதலில் தேங்காயை உடைத்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

இஞ்சியை தோல் சீவி சிறு சதுரத் துண்டுகளாக்காவும்.

முதலில் மிக்ஸியில் தேங்காய் துண்டுகளைப் போட்டு அடித்துக் கொள்ளவும்.

துருவலாக்கிய தேங்காய்
துருவலாக்கிய தேங்காய்

 

பின் அதனுடன் துண்டுகளாக்கிய பச்சை மிளகாய், சதுரக்களாக்கிய இஞ்சித் துண்டுகள், சிறிதளவு கல் உப்பு, தேவையான தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த தேங்காய் கலவை
அரைத்த தேங்காய் கலவை

 

பின்னர் தேங்காய் கலவையுடன் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டியில் வடிகட்டவும்.

தேங்காய் கலவையை வடிகட்டும்போது
தேங்காய் கலவையை வடிகட்டும்போது

 

வடிகட்டியின் மேல் உள்ள தேங்காய் கலவையை நன்கு பிழிந்து விட்டு வடிகட்டியில் வடிகட்டவும்.

இறுக்கமாக உள்ள தேங்காய் கலவையை மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

வடிகட்டிய தேங்காய் பால்
வடிகட்டிய தேங்காய் பால்

 

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்.

அதில் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

 

கடுகு வெடித்ததும் தாளிதத்தை தேங்காய் பாலில் கொட்டி விடவும்.

சுவையான கார தேங்காய் பால் தயார்.

சுவையான கார தேங்காய் பால்
சுவையான கார தேங்காய் பால்

 

இதனை ஆப்பம், தோசை, இடியாப்பம் போன்றவுடன் சேர்த்து உண்ணலாம்.

 

குறிப்பு

தேங்காய் பால் தயார் செய்யும்போது முற்றிய தேங்காயை பயன்படுத்துதல் வேண்டும்.

முற்றிய தேங்காயில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் பாலின் சுவை அதிகமாக இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் வற்றலைப் பயன்படுத்தி கார தேங்காய் பாலைத் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.