கால் மாறி ஆடிய படலம்

கால் மாறி ஆடிய படலம் இறைவனான வெள்ளியம்பலவாணன்,  பாண்டிய மன்னன் இராசசேகரப் பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க ஊன்றிய திருவடியை தூக்கியும், தூக்கிய திருவடியை ஊன்றியும் கால் மாறி ஆடியதை விளக்குகிறது.

இராசசேகர பாண்டியன் பரதக்கலையைக் கற்றது, பரதக்கலை கற்கும்போது இராசசேகரப் பாண்டியனுக்கு ஏற்பட்ட உடல்வலி, திருக்கூத்தினை நிகழ்த்தும் இறைவனுக்கும் தன்னைப் போலவே உடல்வலி ஏற்படும் என்ற இராசசேகரனின் வருத்தம் ஆகியவை இப்படலத்தில் கூறப்பட்டுள்ளன.

கால் மாறிய ஆடிய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடற்காண்டத்தில் 24 படலமாக அமைந்துள்ளது.

இராசசேகர பாண்டியனின் சிறப்பு

விக்கிரம பாண்டியன் தனது மகனான இராசசேகர பாண்டியனுக்கு ஆட்சி உரிமையை அளித்து சிவப்பேறு பெற்றான். இராசசேகர பாண்டியன் சொக்கேசரிடம் பேரன்பு கொண்டு நல்வழியில் மதுரையை ஆட்சி செய்து வந்தான்.

அவன் ஆயகலைகள் 64-கில் பரதக்கலையைத் தவிர்த்து ஏனையவற்றில் தேர்ச்சி பெற்று சிறப்புற விளங்கினான்.

வெள்ளியம்பலத்தில் நடனம் புரியும் வெள்ளியம்பலவாணனிடம் அன்பு கொண்டு ‘இறைவன் திருநடனத்தினால் இவ்வுயிர்களின் இயக்கம் உள்ளது. அந்த உன்னதமான பரதக்கலையைக் கற்று இறைவனுக்கு இணையாக ஆடவிரும்பவில்லை’ என்று எண்ணி பரதக்கலையை இராசசேகரபாண்டியன் கற்கவில்லை.

இராசசேகர பாண்டியன் பரதக்கலையை கற்க விரும்புதல்

இராசசேகர பாண்டியன் காலத்தில் சோழநாட்டை கரிகால் பெருவளத்தான் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆயகலைகள் 64-கிலும் சிறந்து விளங்கிய அவன் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேசரிடம் பேரன்பு கொண்டவன்.

ஒருசமயம் சோழ நாட்டைச் சார்ந்த புலவன் ஒருவன் இராசசேகர பாண்டியனின் அவைக்கு வந்தான். அப்புலவனை வரவேற்று தனக்கு இணையான ஆசனம் அளித்து அவனை கௌரவித்தான் இராசசேகரபாண்டியன்.

அப்புலவன் இராசசேகர பாண்டியனிடம் “எங்கள் அரசர் ஆயகலைகள் 64-கினையும் நன்கு பயின்றவர். தங்களுக்கோ 63 கலைகள் மட்டும் தெரியும். பரதக்கலை வராது” என்று கூறினான்.

இதனைக் கேட்ட இராசசேகர பாண்டியன் மிகுந்த வருத்தம் கொண்டான். தன் குறையைச் சுட்டிக் காட்டிய புலவனிடம் கோபம் கொள்ளாது அவனுக்கு பரிசுகள் பல கொடுத்து அனுப்பி வைத்தான்.

பின் ‘தான் பரதக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும்’ என்று எண்ணி பரதக் கலையை கற்க விரும்பினான்.

இராசசேகர பாண்டியனின் வேண்டுகோள்

இராசசேகர பாண்டியன் பரதக்கலையை கற்றுணர்ந்தவர்களிடம் பரதக்கலையைக் கற்றத் தொடங்கினான். இராசசேகரபாண்டியன் பரதக் கலையைக் கற்கும்போது உடல்வலி ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்தான்.

வெள்ளியம்பலத்தில் தினமும் திருக்கூத்தினை நிகழ்த்தும் வெள்ளியம்பலவாணனுக்கும் உடல்வலியும், கால்வலியும், சோர்வும் ஏற்படுமே என்று எண்ணி மிக்க வருத்தம் கொண்டான். இறைவன் கால் மாறி ஆடினால் வலி நீங்குமே என்று கருதினான்.

வெள்ளியம்பலவாணர் கால் மாறி திருநடனம் புரிதல்

அப்பொழுது சிவராத்திரி வந்தது. இராசசேகர பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து சிறப்பு வழிபாடு நடத்தினான்.

பின் வெள்ளியம்பலவாணனிடம் “இறைவா, தாங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும், ஊன்றிய திருவடியைத் தூக்கியும் மாறி நடனமாட வேண்டும்.

அப்பொழுதுதான் என்னுடைய வருத்தம் நீங்கும். அவ்வாறு செய்யாவிடில் நான் என்னை மாய்த்துக் கொள்வேன்” என்று மனமுருக வேண்டி தன் வாளினை நட்டு வைத்து அதில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்ள திட்டமிட்டான்.

இராசசேகர பாண்டியன் வாளில் பாயும் சமயம் வெள்ளியம்பலவாணர் இடது காலை தூக்கியும், வலது காலை ஊன்றியும் நடனமாடி இராசசேகரபாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார்.

இராசசேகர பாண்டியனின் வேண்டுகோள்

வெள்ளியம்பலவாணன் கால் மாறி நடனம் ஆடியதைக் கண்டதும் இராசசேகர பாண்டியன் இறைவனை பலவாறு போற்றித் துதித்தான்.

பின் வெள்ளியம்பலவாணனிடம் “வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே, எக்காலத்துக்கும் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரமாகும்” என்று மனமுருக பிராத்தித்தான்.

அன்று முதல் இன்றைக்கும் வெள்ளியம்பலத்தில் கூத்தர் பெருமான் கால் மாறிய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார்.

இப்படலம் கூறும் கருத்து

இறைவன் தன்மேல் மாறாத அன்பு பூண்டவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பதே கால் மாறி ஆடிய படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் விருத்த குமார பாலரான படலம்

அடுத்த படலம் பழி அஞ்சின படலம்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.