கிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்

கொண்டாட்டம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இயந்திரத்தனமான வாழ்க்கையை இனிதாக்குவது கொண்டாட்டம்.

இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அடுத்ததாக திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள். கூடவே வேலை செய்யும் இடத்திலான கேளிக்கைகள்.

தனி மனிதர்களைச் சார்ந்த விழாக்களையே நாம் இன்று பெரிதும் காண்கிறோம். அவை சிலரை மகிழ்விக்கும்; சிலரை சோர்வாக்கும்.

அப்படி இல்லாமல் எல்லோரும் எப்போதும் கொண்டாட்டத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும்?

வாருங்கள்! காலச் சக்கரத்தில் நமது பழைய கிராமத்திற்கு சென்று வருவோம். நம்மை அழைத்துச் செல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

தமிழ் மாத அட்டவணைப்படி எப்படி கிராம விழாக்கள் இருந்தன என்று அவர் சொல்லக் கேட்போம்.

வசந்தகாலக் கொண்டாட்டம்

சித்திரை மாதத்தில் வயல்களுக்கு மாட்டு வண்டியில், வீட்டின் புழக்கடையில் உள்ள மக்கிய எருவை (தொழு உரம்) ஓட்டுவார்கள்.

அந்த வண்டியின் பின்னால் ஓடுவதும் ஏறிக்கொள்வதும் ஆனந்தமாக இருக்கும்.

வசந்தகால திருவிழாவாக ஜாத்திரை விழா களைகட்டும். கூழ் வார்த்து, வேப்பிலை தோரணம் கட்டி, ஊர்கூடி பொங்கலிட்டு அம்மன் புறப்பாடு நடக்கும்.

கிராமத்தில் பெரிய பணக்காரர்கள் இருந்தாலும், தலைவர்கள் இருந்தாலும், கரகம் சிங்காரித்தும் அம்மன் சிலை சிங்காரித்தும் சலவைத் தொழிலாளி வீட்டிலிருந்துதான் ஊர்வலம் தொடங்கும்.

விழா நடக்கும் நாட்களில் அவர் அக்குளில் எப்போதும் வேப்பிலையை வைத்திருப்பார். எதிர்ப்பட்டவரிடம் வேப்பிலையை கொடுத்து ‘சுபோ ஜெயம்’ என்று சொல்வது வழக்கமாக இருந்தது.

அந்த கிராம ‘ஜாத்திரை விழா’ சலவைத் தொழிலாளியின் தலைமையில்தான் நடக்கும். கிராம ஒருமைப்பாட்டு விழாவாகத் அந்நாளில் அவ்விழா திகழ்ந்தது.

கோடையில் நரிக்குறவர் கூட்டம் வந்து மரத்தடியில் தங்குவார்கள். சுமார் இரண்டு மாத காலம் இருப்பர். அவர்கள் இரவில் வீடுகளில் சென்று உணவை சேகரித்துக் கொள்வர்.

மனம் கோணாது அனைவரும் உணவளிப்பார்கள். சிறுமியர்கள் அவர்களிடம் பாசி மணி, பவழமணி, கீரைமணி போன்றவைகளை வாங்கி மகிழ்வர்.

அவர்கள் ஆடு வெட்டி, ரொட்டி சுட்டு இறைவனுக்கு படையலிட்டு ஆடுகின்ற ஆட்டத்தையும், பாடுகின்ற பாட்டையும், மொழி தெரியவில்லையாயினும் இரசித்துப் பார்த்திருப்பர் மக்கள்.

அவர்கள் எத்திசையில் வியாபாரத்திற்கு செல்ல வேண்டுமென ஒருவித சிவந்த மரக்கொட்டைகளைக் கொண்டு ஒத்தையா? ரெட்டையா? பார்த்து அவர்களின் வேண்டுதல்படி நடந்துகொள்வர்.

நேரம் போவதே தெரியாமல் இக்காட்சிகளைக் கண்டுகளித்த காலமெல்லாம் பொற்காலமே.

அவர்கள் ஊரைவிட்டு தொழில் நிமித்தம் வெளியூர்களுக்கு புறப்படும் முன்னர் அந்த ஊரில் அவர்களுக்கு பழக்கமானவர்களின் இல்லத்தில் அவர்கள் வணங்கும் இறைவியை பதப்படுத்திய தோலில் வைத்து மூட்டையாகக் கட்டி வைத்துவிடுவர். மறு ஆண்டு வந்து எடுத்து திரும்பவும் பூஜை செய்வார்கள். இன்றும் எங்கள் இல்லத்தில் அவர்களின் இறைவியை வைத்துள்ளார்கள்.

தெருக்கூத்து கொண்டாட்டம்

கிராமத்தார்கள் சிலர் கூத்து வாத்தியாரை வைத்து இரவில் கூத்து கற்றுக் கொள்வார்கள். ஒத்திகையாக ஓராண்டு காலம் கற்ற பிறகு அரங்கேற்றம் நடக்கும். அன்று கற்றுக் கொண்டவர்களின் உறவினர்கள் மரியாதைகள் செய்வார்கள்.

பெரும்பாலும் மகாபாரதம் மற்றும் இராமாயணம் சார்ந்ததாகவே கூத்துகள் இருக்கும். பெரும்பாலும் கிராமத்தின் தெருவில்தான் ஒத்திகை நடக்கும். முக்கிய தெருவில்தான் அரங்கேற்றம் நடக்கும். ஆகவேதான் ‘தெருக்கூத்து’ என்று அழைத்தனர்.

கூத்து வாத்தியார்கள் தமிழ் ஆர்வம் மிக்கவர்களாகவும் உடனுக்குடன் பாட்டுப் புனையும் திறன் மிக்கவர்களாயும் இருந்தனர்.

திருத்தணிக்கு அருகில் வேலஞ்சேரி கிராமத்தில் இராவண சின்னசாமி என்பவர் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே தெருக்கூத்து வாத்தியாராக புகழ்பெற்று விளங்கியவர். கிராம பெரியோர்கள் சொல்லக் கேட்டதையே குறிப்பிடுகின்றேன்.

அவரிடம் பத்துபேர் கிருஷ்ண வேடத்திற்கான‌ பாடம் கேட்டாலும், பத்து பேருக்கும் தனித்தனி பாடல்களாக புனைந்து சொல்லுவாராம். அருகிலிருப்பவர்கள் அப்பாடல்களை எழுதி வைப்பார்களாம்.

அப்படிப்பட்ட மகான்களை எல்லாம் நாகரீக மோகத்தால் இன்று கிராமங்கள் இழந்துவிட்டன. தெருக்கூத்து ஆராய்ச்சியாளர்கள் இவரைப் பற்றியெல்லாம் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அவரிடம் துரியோதன வேடத்திற்கு படித்தவர் சொன்னதால் எமக்கும் தெரிந்தது. இன்று சொல்லுவாருமில்லை.

திருவள்ளுர் மாவட்டம் மேற்கு பகுதியிலும், வட ஆற்காடு மாவட்டத்திலும் பெரும்பாலான கிராமங்களில் திரௌபதி அம்மன் கோவில்களில், பகலில் பாரதம் படிப்பதையும் இரவில் அக்கதையை கூத்தாக நடத்துவதையும் ஆண்டுதோறும் நடத்துகின்றனர்.

அர்ச்சுனன் தபசு பார்க்க மக்கள் பெருமளவில் கூடுவார்கள்.

பீமன் வேடமிட்டு மாட்டு வண்டியில் கிராமத்தில் ஊர்வலமாக வந்து உணவு சேகரிப்பதை கண்டு களித்த காலம்.

இன்றும் சிலகிராமங்களில் நடக்கின்றன. இவையெல்லாம் மக்கள் என்றும் நினைவில் வைத்திருக்கவே நடத்தப்பட்டது. இன்று இவைகளை திட்டமிட்டு மறக்கச் செய்கின்றார்கள்.

கூத்து நடக்கையில் துகில் உரியும் காட்சி வரும் போது கதாபாத்திரங்களில் வருபவர்கள், இறைவனை தூப தீபங்கள் காட்டி வணங்கி, ‘வேடத்திற்காக நாங்கள் இந்த துயரக்காட்சியில் நடிக்கின்றோம். எங்களை மன்னித்து அருள் செய்ய வேண்டும்’ என‌ பிரார்த்தனை செய்துவிட்டே அக்காட்சியைத் தொடங்குவார்கள்.

பார்ப்பவர்கள் சிலர் அக்காட்சியை பார்க்கமல் போய்விடுவர். இதன் மூலம் மக்கள் நம் பண்பாட்டையும் கலாசாரத்தையும் எவ்வாறு போற்றி மதித்தார்கள் என்று அறிகின்றோம்.

பதினெட்டாம் நாள் போர் காட்சியில் துரியோதனனை படுகளத்தில் பீமன் வதம் செய்த காட்சியைக் கண்டவர்கள் வீட்டிற்கு சென்று தலை முழுகுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

என்றோ நடந்த சம்பவமாயினும் அன்றே நடந்ததாக எண்ணும் அளவிற்கு நம் பண்டைய கலாசாரத்தில் ஒன்றி இருந்தனர். அந்நிலையெல்லாம் இன்று மறந்து நம் பண்பாட்டைத் தொலைத்தோம்.

மறுநாள் தீமிதி விழா. திரௌபதி அம்மன் எதிரில் காப்பு கட்டியவர் தலைமையில் சிறப்பாக நடக்கும்.

பாரதம் படிக்கும்போது பெரும்பாலும் நல்லாபிள்ளை இயற்றிய பாரதத்தைதான் படிப்பார்கள். காரணம் எளிய தமிழில் இருக்கும். இன்றைக்கு அப்பதிப்பெல்லாம் கிடைப்பதற்கு அரிதாகி விட்டது.

ஆடி, ஆவணி, புரட்டாசி விழாக்கள்

ஆடி மாதம் வாரந் தோறும் வீடு தோறும் பொங்கலிட்டு கூழ் வார்த்து கொழுக்கட்டை அவித்து அம்மன் வழிபாடு நடக்கும்.

ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா உறி அடித்து கொண்டாடுவார்கள். களிமண்ணால் விநாயகர் சிலை செய்து வணங்கி மூன்றாம் நாள் ஏரி, குளங்களில் அச்சிலைகளை கரைத்து விடுவர்.

கிராமந்தோறும் கிருஷ்ணர் படம் வைத்த பஜனைக் கோயில் கிராமத்தின் நடுவில் கண்டிப்பாக இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் பஜனைக் கோயில்களில் திருவிழா நடக்கும். வீடுகளில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தளிகைப் போடுவதும் ஒரு விழாவாக இருக்கும்.

சனிக்கிழமைத் தளிகைப் போடும்போது தட்சினாயண சூரியனை வணங்கி பூசிப்பார்கள்.

சனிக்கிழமை மாலையில் பஜனைக் கோயிலில் இருந்து சிறுவர்கள் கருட தீபஸ்தம்பம்பத்தில் விளக்கேற்றிக் கொண்டு ஊரைச் சுற்றி வருவார்கள்.

வீடுகள் தோறும் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி விடுவர். சிலர் சில்லரைப் பணம் போடுவார்கள்.

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி விழாக்கள்

ஐப்பசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகை கறிக்குழம்பு தோசையோடு தொடங்கும். மறுநாள் அதிரசம், ஓட்ட வடை, முறுக்கு பணியாரங்கள் என செய்து கௌரி நோன்பு நோற்பார்கள்.

நோன்பு கயிற்றை, வீட்டில் பிறந்த பெண்களுக்கு பணியாரங்களோடு கொண்டு சென்று மரியாதை செய்வார்கள். தங்களோடு உழைத்த மக்களுக்கும் வழங்குவார்கள். அவையெல்லாம் உறவு முறையை மதித்து பேணிக் காத்தன.

நோன்பிற்கு நான்காவது நாள் நாக சதுர்த்தியாக கம்பை முளைக்கட்டி மாவிளக்கிட்டு புற்றுகளின் அருகில் வைத்து புற்றில் பால் முட்டைகளை வைத்து வணங்குவார்கள்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருவிழா விளக்கேற்றி கொண்டாடுவர். மறுநாள் விஷ்ணு கார்த்திகை அன்று கொழுக்கட்டை அவித்து வணங்குவர்.

சிறுவர்கள் ஆணங்காயை மூட்டுபோட்டு தூளாக்கி, கோணிகளை கிழித்து சிறிய பைகளாக தைத்து, ஆணங்காய்த் தூளை நிரப்பி சாணியால் மெழுகி தீவைத்து மாவளி சுற்றுவார்கள்.

பெருமாள் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி கொண்டாடுவார்கள்.

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து இறைவழிபாடு செய்வார்கள்.

அம்மாதத்தில் உழைக்கும் மக்கள் இரவில் அயர்ந்து தூங்கும் போது ஏதேனும் திருடுகள் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில், நள்ளிரவில் ஒருவர் மணிகளை தன் உடலில் கட்டிக்கொண்டு, ‘டங் டங்’கென்று சத்தத்துடன் ஊரை வலம் வருவார்.

அவர்களைக் காட்டி சிறுவர்களை பயமுறுத்தி வைப்பர். அவருக்கு மாதக் கடைசியில் மக்கள் தகுந்த சன்மானம் வழங்குவார்கள். நாகரீக மோகத்தால் இக்காட்சிகள் இன்று கனவாகி விட்டன.

தினமும் ஒரு வேடமிட்டுக் கொண்டு, ஒருவர் பாட்டுப் பாடிக் கொண்டு அந்த மாதம் முழுவதும் சிறுவர்களையும் பெரியவர்களையும் மகிழ்விப்பார்.

அவருக்கும் மாதக்கடைசியில் அவரவர்களுக்கு ஏற்றவாறு சன்மானம் வழங்குவார்கள். அப்படியெல்லாம் இன்று வருவாருமில்லை; வரவேற்பாருமில்லை ; கொண்டாட்டம் நம் வாழ்வில் இல்லை.

அறுவடைக் காலங்களில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் கூட்டம் வரும். அவர்களும் வீடுதோறும் உணவை சேகரித்துக் கொள்வார்கள். பழக்கிய மாடுகளை வைத்து ஆட்டம் காட்டி உழைத்து சோர்ந்த மக்களை மகிழ்வூட்டுவார்கள்.

தை மாதத்தில் புதுப்பானையில் பொங்கலிட்டும் உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியனை வணங்குவோம்.

மறுநாள் உழவிற்கு உதவிய மாடுகளுக்கும் பசுக்களுக்கும் கொம்புகள் சீவி வண்ணம் பூசிவார்கள்.

மாவிலை வேப்பிலை பிரண்டை, ஆவாரம்பூ, கரும்பு இவைகளால் மாலைக்கட்டி மாட்டிற்கு சூட்டி அழகு பார்ப்பார்கள். காலை நேரத்தில் பூசனை இலையில் பொங்கிய சாதத்தை வைத்து மாடு கன்றுகளுக்கு வழங்குவார்கள்.

தங்களுக்காக உழைத்த மக்களுக்கும் புதுத் துணிமணிகள் வழங்கி கௌரவிப்பார்கள்.

மாசி, பங்குனி விழாக்கள்

மாசி மாதத்தில் சிவராத்திரியன்று சுண்டல் செய்து வழிபடுவார்கள். அன்று இரவும் கண் விழித்து வழிபடுவார்கள். ‘சிவ சிவ’ என்று அன்றோடு குளிர் காலம் போய்விடும் என்பது கிராமத்தார் நம்பிக்கை.

இந்த மாதத்தில் பயிருக்கு சிலநேரம் தண்ணீர் தட்டுப்பாடு வரும். அப்போது சிலர் ஏற்றம் வைத்து நீர் இறைப்பார்கள். அப்படி ஏற்றம் இறைப்பவர்களும் தமிழார்வம் கொண்டிருந்தனர்.

அவர்கள் களைப்பு தெரியாமல் இருக்க பாடும் பாடல்களும் நமது பண்பாட்டை ஒட்டியே இராமாயண மகாபாரதத்தை விளக்குவதாக இருக்கும்.

மணிபதக்க மாலை துளசி திருமாலை உனக்கே பெருமானே

இராமனை நான் பாட ரெண்டுடனே வாரும்!

ராட்சசன் பயத்தால் தேவர்கள் பயந்து யோசனை செய்து

ஆதி விஷ்ணு இராமராய் ஆதிசேஷன் லக்குவனாய்

சங்கு சக்கரங்கள் பரத சத்ருக்ன‌ராய்

தசரதன் வயிற்றில் நால்வரும் பிறப்போம்

அஞ்சவேண்டாம் அபய ஹஸ்தம்

என்று அழகுபட எளிய தமிழில் இராமாயணத்தையே ஆரம்பிக்கின்றார்கள்.

தருமரும் கெலிப்பார் தரணியும் ஆள்வார்

பாவி துரியோதன‌ன் பண்ணின சூதிலே

பதினெட்டுநாள் சண்டை பாரதம் முடிவு

துரோபதை கெலித்து கூந்தலை முடித்து

பட்டணத்தே வென்றாள்

மாயவன் பகவான் மன்னருடை…

என்று பாரதக் கதையையும் சொல்வார்கள்.

இதன் மூலம் அறிவது என்னவென்றால், நம்மோடு வாழ்க்கையிலும் மனத்திலும் ஒன்றிணைந்திருந்த கலாசாரத்தையும் தமிழ் பண்பாட்டையும் இன்று வேரோடு கெடுத்துள்ள‌னர்.

எங்கள் பகுதிக்கு திருவள்ளுர் அருகில் இருக்கின்றது. அமாவாசைக்கு அக்கோயிலுக்கு சென்று வழிபடுதல் காலம் காலமாக இருந்தது. அன்றைக்கு ஏர் கட்ட மாட்டார்கள்.

பெற்றோருக்காக அமாவாசை ஒரு பொழுது கண்டிப்பாக விரதம் இருப்பார்கள். எல்லா நாட்களில் இல்லையென்றாலும் அன்றக்கு காக்கைக்கு அன்ன‌மிட்ட பின்பே உண்பார்கள். சிலர் அன்றைக்கு தட்டில் சாப்பிட மாட்டார்கள். இலையில்தான் உண்பர்.

அமாவாசைக்கு செல்லும் வழக்கத்தினை ஏற்றப் பாட்டும் கொட்டுகின்றது.

அன்னையாக மலடி அமாவாசைக்கு நடந்தாள்

சேனநாள் மலடி திருவள்ளுர் நடந்தாள்

அமாவாசை நடந்து அதிக பலன் பெற்றாள்

ஆண்பிள்ளையும் பெற்றாள்.

இது போன்றே அரிச்சந்திரன் வரலாறும், வள்ளி முருகன் வரலாறும் ஏற்றப் பாடல்களாகப் பாடப்பட்டு வந்தன.

இவ்வாறு அன்றைக்கு வரலாறு மறக்காமல், வாழையடி வாழையாக சொல்லி வந்ததால் கலாசாரம் தழைத்தோங்கியது. இன்று யாவையும் மறக்கடிக்கப்பட்டது. ஆகவே பழகு தமிழில் இனிய இசையில் இருந்ததை இழந்து விட்டோம்.

பங்குனி மாதத்தில் கார்பட்டம் அறுவடை நடக்கும். தேவையானவர்கள் செங்கல் அறுத்து சூலை போடுவார்கள். இவ்வேலைகளுக்கிடையில் மழை பெய்தால் பெருத்த நஷ்டம் ஏற்படும். அதனால் பங்குனியில் மழை பெய்தால் ‘பத்துக்கும் நஷ்டம்’ என்பது பழமொழியாகும்.

வாழ்வே ஒரு மாபெரும் கொண்டாட்டம் என, இன்று நமக்கு மேலாண்மை வல்லுநர்கள் சொல்லித் தருகின்றார்கள்.

உண்மை என்ன என்றால், கடந்த தலைமுறை வரை அப்படி ஒரு வாழ்க்கை முறை நம்மிடையே இருந்தது.

பணமே குறிக்கோள் என்ற மனநிலை, இன்று நம்மை வாழ்வின் எளிய இன்பங்களை இழக்க வைத்து விட்டது.

அனுபவமே வாழ்க்கை என்ற வரி உங்களுக்குப் புரியுமென்றால், கிராமத்துக் கொண்டாட்ட மனநிலையை உங்களால் உணர முடியுமென்றால், உங்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

(கிராம வாழ்க்கை இன்னும் தொடரும்)

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

முந்தையது  கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.