கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி

கிராமம் என்பது சிலர் கூடி வாழும் இடம் என்பதல்ல. கிராமம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாத மகிழ்ச்சியினை வழங்கும் ஓர் உயிர்ச் சூழல்.

இன்றைய வேகமான வளர்ச்சியின் காரணமாக, நமது இளம் தலைமுறையினர் கிராம வாழ்க்கை பற்றி அறியாமல் இருக்கின்றனர். நகரத்தில் இருந்தாலும் கிராம வாழ்க்கையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கை எப்படி இன்பமயமாக இருந்தது என்பதை நமக்கு விளக்கும் விதமாகத் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

எங்கள் கிராமம் சிறியது. திருவள்ளூர் மாவட்டம், வட்டம் பாக்கம் அடுத்த நத்தமேடு எங்கள் ஊர்.

எங்கள் ஊரில் பலதரப்பட்ட மக்கள் ஒற்றுமையாக இருந்தோம். பங்காளிகளுக்குள் சண்டை வரும்; சமயத்தில் ஒன்றுபட்டு விடுவர். மற்ற கிராமங்களின் செய்திகளைச் சேர்த்தே இங்கே சொல்லுகின்றேன்.

ஆடு மாடுகள் நிறைந்த கிராமம். 'காக்கை, குருவிகள் எங்கள் ஜாதி' எண்ணும்படி குலாவியிருந்த கிராமம். மூன்று ஏரிகள், ஐந்து குளங்களுடன் நன்செய்யும் புன்செய்யும் செழித்திருந்தன.

பெரும்பாலான வீடுகளின் புழக்கடையில் புளி, வேம்பு, புங்கன், கொடுக்காபுளி போன்ற மரங்கள் குறைவின்றி இருந்தன.

குளக்கரைகளில் அரசமரம் செழித்திருக்கும். அதனால் காக்கைகள் சுமார் 10 மைல் தொலைவிலிருந்தும் இரவில் இங்கு வந்துதான் தங்கும்.

விடியற்காலையில் பறவைகளின் ‘கா, கூ’ என்று பேசும் சத்தம் கேட்க அளவிலா ஆனந்தமாக இருக்கும்.

விடியற்காலையில் பறவைகள் கொடுக்காப்புளி மரங்களில் கொத்திப் போடும் பழச்சுளைகளை, நாங்கள் பொறுக்கித் தின்ற அக்காலம் இனி கிடைக்குமா?

இரவில் ஆந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஆளோ, அரவமோ, மாடுகளோ வந்ததாக அறிந்து விரட்டப் போகும் காலம் இனி பார்ப்போமா?

வீடுகளின் சுவர்களில் கிளிகள் தங்க மாடம் அமைத்ததால், அவைகளில் குஞ்சு பொரித்து குலாவும் காட்சி இனி எப்போது காண்போம்.?

வீட்டின் பின்புறம் வைக்கோல் போரில் கோழிகள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கும். அவைகளுக்கு உணவளித்து மகிழ்வோம்.

ஏரிக்கரையில் களாக்காயினை பறித்து தின்போம்.

நாகதாளிப் பழங்களை உண்டு களிப்போம்.

காரைப் பழங்களை பறித்து பழுக்கவைத்து தின்போம்.

காலையும் மாலையும் பால்காரர் வந்து பசுக்கள் எருமைகளிடம் பால் கறந்து அளந்து கொள்வர். மீதியிருக்கும் கொஞ்சம் பாலை வாங்கி குடிப்பதில் சிறுவர்கள் பேரானந்தம் கொள்வோம்.

மேய்ச்சலுக்கு போகும் காக்கைகள் மாலையில் தன் இருப்பிடம் நோக்கி வரும்போது, வயல்வெளிகளின் வரப்புகளில் வரிசையாக அமர்ந்து வயல் நீரில் குளியல் போடும் அக்காட்சியை இனி எப்போது காண்போம்?

மீன்கள் வயல்களில் புரளும். வாய்கால்களில் எதிர்த்து வரும். குரவை, உளுவை, அசரை, கெண்டை, கெளுத்தி, ஆரால் போன்ற மீன்கள் குறைவின்றி இருக்கும்.

மழைக்காலத்தில் வடிகால்களில் கச்சால், பறி போன்றவற்றால் மீன் பிடித்து விற்பார்கள். வீடுதோறும் மீன் வாடை அதிகம் இருக்கும் காலமது. நண்டு பிடித்தும் உண்பர். நத்தைகைளையும் சேகரித்து உண்ட காலம் அது.

கார்த்திகை மாதத்தில் சோதி மின்னலில் பூத்த இயற்கை காளான்களை, ஏரிகளில் சென்று எடுத்து வந்த காலமும் போச்சு.

மார்கழி மாதம் தெருவில், வயல்களில் குளிர்காய்வதற்கு நெருப்பு மூட்டி, சுற்றியும் அமர்ந்து இதமாக இருந்த காலம் இனி கிடைக்காது.

நீர் நிரம்பிய ஏரிகளின் எதுவாயில் அறுவடைசெய்வது மிகப் பெரும் பணியாக இருக்கும்.

வயல்வெளியில் இருக்கும்போது நீர்காக்கை, நீர்கோழி, கிளுவை, நாமக் கோழி, கொக்கு, உள்ளான், நாரை போன்ற பறவையினங்கள் வானத்தில் பறப்பதைப் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருந்தோம் அன்று.

பழுத்த நெல்லை கிளுவைகள் (பறவைகள்) சாப்பிடாமல் இருக்க, இரவெல்லாம் தகர டப்பியை வைத்து தட்டிக் கொண்டிருப்போம்.

அறுவடை காலங்களில் வலியன் குருவிகள் சுற்றித் திரிந்து தலைமேல்கூட அமர்ந்து கொள்ளும் அக்காட்சி இனி கிடைக்குமா?

வரப்புகளில் சட்டியில் ஈர வைக்கோலை வைத்து புகைப் போட்டு, எலிகளைப் பிடித்து உணவாக பயன்படுத்துவார்கள்.

இன்று நஞ்சை வைத்து எலிகளைக் கொல்வதால் இவற்றுடன் மற்ற உயிர்களும் சேர்ந்து மடிகின்றன.

வீடுகளில் சிட்டுக் குருவிகளுக்கு உணவாக நெல் கதிர்களை கட்டிவைப்போம். உண்டு களித்து அவைகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் அக்காலம் இனி நமக்கும் கிடைக்காது. குருவிகளுக்கும் கிடைக்குமா?

இன்று ஊரை வேலிக்காத்தான் செடிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. ஏரிகளில் கடற்பாலைச் செடிகள் சூழ்ந்துக் கொண்டுள்ளன. இதனால் பறவைகளுக்கும் மக்களுக்கும் பெரும் இடைஞ்சல்கள் ஆகிவிட்டன.

வயல்களில் பார்த்தீனியச் செடிகள் பெருகிவிட்டன. அவற்றை அழிக்க படாதபாடு பாடுகின்றோம். அவற்றின் அசுர வளர்ச்சி நம்மை அழ வைக்கின்றது.

குளங்களில் எருமைகள் இறங்கி படுத்து விட்டால் குளமே கருமையாகத் தெரியும். அவ்வெருமைகளின் முதுகில் ஏறி விளையாடிய அனுபவம் இக்காலத்தில் யாருக்குக் கிடைக்கும்?

இஸ்நாப், வக்கா, அறிகாடை போன்ற பறவை இனங்கள் இன்று பார்பதற்கு அரிதாகிவிட்டன.

(கிராம வாழ்க்கை இன்னும் தொடரும்)

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

2 Replies to “கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி”

  1. மிக அருமையான தொடர்.

    கிராமத்தின் நாடி பிடித்து மக்களின் இல்வாழ்க்கையின் அற்புதத்தை அழகாகப் படம் பிடித்து யதார்த்த நடையில் அழகாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

    வாழ்க்கை, அதை எப்படி வாழ்வது?

    அந்த வாழ்வின் மையம் இயற்கையோடு இணைந்தது. இயற்கையும் நாமும் வேறு வேறு அல்ல என்பதை இந்தத்தொடர் நமக்கு விளக்கும் . அதன் ஆழத்தை உணர்ந்து கொண்டவர்கள் அதற்காக ஏங்குவர்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.