கீரனைக் கரையேற்றிய படலம்

கீரனைக் கரையேற்றிய படலம் சொக்கநாதரின் நெற்றிக் கண்ணால் எரிபட்டு பொற்றாமரைக் குளத்தில் அழுந்திய நக்கீரனின் மீது கருணை கொண்டு பொற்றாமரைக்குளத்தில் இருந்து கரையேற்றியதைக் குறிப்பிடுகிறது.

நக்கீரனுக்காக ஏனைய சங்கப்புலவர்கள் இறைவனிடம் மன்றாடுதல், நக்கீரனின் மீது கருணை கொண்டு இறைவனார் கரையேற்றுதல், தருமிக்கு பொற்கிழி அளித்தல் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

கீரனைக் கரையேற்றிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து மூன்றாவது படலமாக அமைந்துள்ளது.

சங்கப் புலவர்களின் வேண்டுதல்

இறைவனான புலவனார் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியபோதும் “இறைவனே ஆயினும் உமது பாடல் குற்றமுடையதே” என்று வாதிட்ட நக்கீரனை சொக்கநாதர் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார்.

வெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் சென்று அழுந்தினான். நக்கீரனைக் காணாமல் ஏனைய சங்கப் புலவர்களும், சண்பகப் பாண்டியனும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

நக்கீரன் இல்லாத இச்சபை அரசன் இல்லாத நாடு போன்றும், நடுநாயக மணி இல்லாத கண்டிகை போன்றும், ஞானம் இல்லாத கல்வி போன்றும் இருப்பதாக சங்கப் புலவர்கள் கருதினர்.

‘இறைவன் என்று தெரிந்தும் அவருடன் வாதிட்டதால் இந்நிகழ்வு நேர்ந்தோ?. இதனை தீர்ப்பது எப்படி?’ என்று அவையோர் மனம் கலங்கினர்.

வெள்ளிமலையான கயிலையை தூக்க முயன்ற இராவணனின் தோள்கள் வருந்தும்படி தன்காலால் அழுத்தி, பின் அவனிடம் அன்பு கொண்டு வாளும், தேரும் பரிசளித்தவர் இறைவனான சிவபெருமான்.

ஆதலால் சொக்கநாதரைச் சரணடைந்தால் நக்கீரரை திரும்பப் பெறலாம் என்று எண்ணி அனைவரும் சோமசுந்சுரக் கடவுளை வழிபாடு செய்ய கோவிலுக்குச் சென்றனர்.

 

கீரனைக் கரையேற்றுதல்

சோமசுந்தரக் கடவுளை பலவாறு போற்றி வழிபாடு நடத்தினர். “ஐயனே, செருக்கினால் அறிவிழந்த நக்கீரனின் பிழையைப் பொறுத்தருளுக.” என்று வேண்டினர்.

சொக்கநாதர் அங்கையற்கண்ணி அம்மையுடன் பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளினார். முன்னர் அழல் கண்ணால் நோக்கிய இறைவனார் தற்போது அருட்கண்ணால் நோக்க, நீரில் அழுந்திக் கிடந்த நக்கீரன் மீண்டு எழுந்தான்.

பின்னர் நக்கீரர் இறைவனார் மீது கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி பாடலைப் பாடினார். கோபப்பிரசாதம் மற்றும் திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளை இறைவனார் மீது பாடினார். ஏனைய புலவர்களும் இறைவனார் மீது கவிதாஞ்சலி பாடினர்.

இவற்றை எல்லாம் செவிமடுத்த இறைவனார் கீரனை கைபிடித்து பொற்றாமரைக் குளத்தில் இருந்து கரையேற்றினார். “நீ முன் போலவே உன்னை மதித்த புலவர் கூட்டத்திற்கு நடுவிலே தங்குவாயாக” என்று கூறி மறைந்தருளினார்.

தருமிக்கு பொற்கிழி அளித்தல்

நக்கீரன் மற்றைய புலவர்களும் சங்க மண்டபத்தின் முன் கட்டித் தொங்கியிருந்த பொற்கிழியை அறுத்து தருமியிடம் கொடுத்தனர். மேலும் பாண்டியனைக் கொண்டு மேலும் பல வரிசைகள் கொடுக்கச் செய்தனர்.

சண்பகப் பாண்டியன் நாள்தோறும் சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டுப் பல திருப்பணிகள் செய்து சிவமே பொருள் எனத் துணிந்த உள்ளன்பினோடு இனிது வாழ்ந்து நல்லாட்சி செய்து வந்தான்.

கீரனைக் கரையேற்றிய படலம் கூறும் கருத்து

இறைவனேயானாலும் தவறை சுட்டிக் காட்டத் தயங்கக் கூடாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பக்தனை இறைவன் சோதனை செய்வார்; இறுதியில் சாதனையாளனாக மிளிரச் செய்வார்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம்: தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் 

 

அடுத்த படலம்: கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.