கீரை வகைகளும் அவற்றின் பயன்பாடும்

சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளும் அவற்றின் பயன்பாடும் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

அகத்திக்கீரை

அகத்தீயை (அகம் + தீ) குணப்படுத்தக் கூடியது. ஆகவே மாதத்தில் இரண்டு முறை பருப்புடன் சேர்த்து கீரையைக் கடைந்து சாப்பிடலாம். இது அக உறுப்புகளுக்கு மிகவும் நல்லது.

 

பொன்னாங்கண்ணி கீரை

(பொன் + ஆம் + கண் +  நீ ) இந்தக் கீரையை வாரம் ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டால் கண் நோய் குணமாகும்; உடல் பொன் நிறம் ஆகும்; (இதில் தங்கச் சத்து அடங்கி உள்ளது) இதன் இலைகளை சூப் வைத்தும் சாப்பிடலாம்.

 

குப்பைக் கீரை

இது சாதாரணமாக மிக எளிதில் இயற்கையாகவே கிடைக்கக் கூடியது. இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியன அடங்கி உள்ளது. இதை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது நல்ல மல மிளக்கியாக செயல்படும்.

 

முடக்கறுத்தான்

(முடக்கு + அறுத்தான்) உடலில் ஏற்படக் கூடிய முடக்கை நீக்க வல்லது. முடக்கு வாதத்திற்கு இதை வாரத்தில் இரு முறை துவையல் செய்து உணவுடன் சாப்பிடத் தீரும். இது வேலி ஓரங்களில் இயற்கையாகவே படர்ந்து வளரக் கூடியது.

 

பசலைக் கீரை

பெண்களின் கர்ப்ப காலத்தில் பாதங்களில் நீர் கோர்த்து வீக்கம் போல் காணும் நிலையில் இது நல்ல பயன் தரும். பசலைக் கீரையைப் பருப்போடு சமைத்து உண்ண வேண்டும்.

 

தூதுவேளை

இது சாதாரணமாக வேலி ஓரங்களில் வளரச் கூடியது. ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற நோய்களைக் குணப்படுத்த வல்லது.

 

பிரண்டை

பிரண்டையின் கொழுந்து இலைகளைப் பறித்து நார் உரித்து துவையல் செய்து சாப்பிட பசியைத் தூண்டும். வயிற்றில் ஏற்படக் கூடிய நோய்கள் நீங்கும்.

 

காசினிக் கீரை

காசினிக் கீரையை துவையல் செய்து சாப்பிட நீர் எரிச்சல் தீரும். சிறுநீர்ப்பையில் ஏற்படக் கூடிய கற்கள் கரையும் (இதை வாரம் ஒரு முறை சாப்பிடலாம்)

 

வல்லாரை

வல்லாரைக் கீரை வயல் வெளிகளிலும் நீர் நிலை இருக்கும் இடங்களிலும் வளரக் கூடியது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும்; மூளையில் செல்களை வளர்ச்சி அடையச் செய்யும்; குழந்தைகளின் புத்தி கூர்மையை அதிகரிக்கும் (இந்த கீரையை வாரத்தில் இரண்டு முறை துவையல் செய்து சாப்பிடலாம்.)

 

கரிசாலை

இதில் இரும்புச் சத்து உள்ளது. இளைத்தவன் இரும்பைத் தின்பான் என்று கூறியது கரிசாலையைத் தான். எனவே கரிசாலையைத் துவையல் செய்து சாப்பிட இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிக்கும்; ஈரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.