குடசப்பாலை – மருத்துவ பயன்கள்

குடசப்பாலை முழுத்தாவரம் துவர்ப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. பட்டை, பசியைத் தூண்டும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கழிச்சல், நீரிழிவு, வெள்ளை, கரப்பான், சிரங்கு இவைகளைக் குணமாக்கும்; காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.

இந்தியா முழுவதும் 1200மீ. உயரமான காடுகளில் பொதுவாக வளரும் தாவரம், சில நேரங்களில் 10 மீ. வரை உயரமுள்ள மரமாகவோ, குத்துச்செடிபோலவோ காணப்படும். இலைகள் 20-30 செ.மீ. நீளத்தில், நீள்வட்ட வடிவத்தில், மெல்லிய, தெளிவாகத் தெரியும் நரம்புகளுடன் காணப்படும்.

இலைக் காம்புகள் சிறியவை. பூக்கள், வெள்ளையானவை, நறுமணத்துடன் கூடியவை. நுனியில், தொகுப்பாக காணப்படும். காய்கள் 20-25 செ.மீ. வரை நீளமானவை, மெல்லியவை, உருளை வடிவானவை. கனிகள், சாம்பல் நிறத்தில், வெள்ளைப் புள்ளிகளுடன் காணப்படும். விதைகள், 1 செ.மீ. வரை நீளமானவை பழுப்பான, பறக்கும் ரோமங்களுடன் பொருந்தியிருக்கும்.

தாவரத்தை எங்கு கீறினாலும் வெண்மை நிறமான பால் வடியும். தமிழகத்தின் சில காட்டுப்பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. அலங்காரத் தாவரமாக பூங்காக்களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது.

குடசப்பாலைக்கு, கருப்பாலை, கசப்பு வெட்பாலை, குளப்பாலை என்ற பெயர்களும் உண்டு. பட்டை, விதைகள், இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. குடசப்பாலை பட்டை, விதைகள் ஆகியவற்றை நாட்டு மருந்துக் கடையில் இருந்து வாங்கியும் உபயோகப்படுத்தலாம்.

சீதக் கழிச்சல் குணமாக விதை அல்லது பட்டை ½ முதல்1 கிராம் அளவு, 1 டம்ளர் தண்ணீரில் இட்டு, கொதிக்கவைத்து, இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு குணமாக வேரின் பட்டைகளைச் சேகரித்துக் கொண்டு, கழுவி, இடித்து, இரசம் செய்ய வேண்டும. வேளைக்கு அரைக் கோப்பை அளவு ரசத்தை காலை, மாலை இரண்டு வேளைகள் குணமாகும் வரை குடிக்க வேண்டும்.

குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில், சிறிதளவு வெல்லத்தை உட்கொண்டு, பிறகு ஒரு சிட்டிகை அளவு குடசப்பாலை விதைத் தூளை உட்கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு இவ்வாறு செய்து வரவேண்டும்.

எரிச்சல் உணர்வுடன் தோன்றும் வயிற்று வலியைக் குணப்படுத்த விதைகளை நிழலில் உலர்த்தி, வறுத்து, தூள் (விதைத் தூள்) செய்து கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை தூள் வீதம், தினமும் இரண்டு வேளைகள், 3 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.

பல் வலி தீர பட்டையிலிருந்து குடிநீர் செய்து வாய் கொப்புளிக்க வேண்டும்.

தோல் நோய்கள் குணமாக பச்சையான பட்டையை மைய அரைத்து, நெல்லிக்காய் அளவு பசையை 2 டம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சி, கசாயம் செய்து குடித்துவர வேண்டும். மேலும், பட்டைச் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெயில் இட்டு, நீர் வற்றும் வரை காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும்.

வெட்பாலை செதில் உதிர்படை என்கிற தோல் வியாதியைக் குணப்படுத்தப்ப பயன்படும் தைலமாகப் பயன்படுகிறது. துடைத்து சுத்தம் செய்த இலைகளை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூழ்க வைத்து மூன்று நாட்கள் வெயிலில் வைத்து, அந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துக் கொண்டு, மேலே தடவி வரவேண்டும்.