குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

குடைமிளகாய் பொரியல் குடைமிளகாயைக் கொண்டு செய்யப்படும் எளிதான உணவு வகை ஆகும்.

குடைமிளகாயில் விட்டமின் ஏ,சி உள்ளிட்டவைகளும் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும், நார்சத்தும் உள்ளன. இது கண் சம்பந்தமான பிரச்சினைகள் வராமலும் , உடல் எடைக் குறைக்கவும்  உதவுகிறது. எனவே இதனை நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தி பயன் பெறலாம்.

இனி எளிதான முறையில் சுவையான குடைமிளகாய் பொரியல் செய்முறை பற்றி பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

குடைமிளகாய் – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 150 கிராம்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (சிறியது)

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

கறிவேப்பிலை – இரண்டு கீற்று

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

 

செய்முறை

முதலில் குடைமிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் அதனை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். அதனையும் சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய குடைமிளகாய் மற்றும் வெங்காயம்
வெட்டிய குடைமிளகாய் மற்றும் வெங்காயம்

 

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கழுவி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய், கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

 

பின் அதில் சதுரத் துண்டுகளாக வெட்டிய சின்ன வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

 

வெங்காயம் பாதி வெந்த நிலையில் சதுரத் துண்டுகளாக வெட்டியுள்ள குடைமிளகாயினைச் சேர்க்கவும்.

குடைமிளகாய் சேர்த்ததும்
குடைமிளகாய் சேர்த்ததும்

 

5 நிமிடங்கள் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான மணமான குடைமிளகாய் பொரியல் தயார்.

சுவையான குடைமிளகாய் பொரியல்
சுவையான குடைமிளகாய் பொரியல்

 

இதனை எல்லோரும் விரும்பி சாப்பிடுவர். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், பழைய சாதம், கம்மங்கூழ் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

குறிப்பு

குடைமிளகாயை குழைய வதக்கக் கூடாது.

குடைமிளகாய் பொரியல் தயார் செய்யும் போது குடைமிளகாய் சேர்த்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். தீயை வேகமாக வைத்தால் குடைமிளகாயில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.