குடை – சிறுகதை

இப்போதே மணி ஆறரை. நன்றாக இருட்டி விட்டது.

சோதனை போல டோல்கேட் பஸ் இன்னும் வந்தபாடில்லை. தடுக்கி விழுந்தால் ஏர்போர்ட், டோல்கேட் பஸ் மீதுதான் விழ வேண்டியிருக்கும்.

இப்போதுள்ள நிலைமையோ தலைகீழ். நம் அவசரத்திற்கு ரொம்ப எதிர்பார்க்கும்போது தான் இப்படி காலை வாரிவிடும்.

ஏழு மணிக்கு காஜாமியான் உயர்நிலைப்பள்ளியில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கக் கூட்டம். ஆண்டு விழா நடத்துவது பற்றிய மிக முக்கியமான கூட்டம்.

செயற்குழு உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் தவறாமல் கூட்டத்திற்கு வரும்படி செயலாளர் சரஸ்வதிபஞ்சு தகவல் தெரிவித்திருந்தார். பஸ் வரவில்லை.

பொறுமையிழந்தவனாக வாரப் பத்திரிக்கை ஒன்றை வாங்க ஓர் கடையை நோக்கிச் சென்றபோதுதான் மண்டையூர் செல்லும் பஸ் வந்தது.

பஸ் நுழையும்போதே டிபன் பாக்ஸ், கர்சீப், புத்தகம், பை போன்றவைகளை ஜன்னல் வழியாக தூதனுப்பி சீட் ரிசர்வேஷன் செய்திருந்த பயணிகள் காலரைத் தூக்கி விட்டபடி கீழே நின்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, பஸ்ஸினுள் நின்று கொண்டிருப்பவர்களை எச்சரிக்கையுடன் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

“பெரியவரே! மண்டையூரா? குடையைக் கையில் எடுத்து வச்சுக்குங்க. பின்னால இருக்கிறவங்க மேல குத்திடப் போகுது!” – கக்கத்தில் குடையை இடுக்கிக் கொண்டிருந்த கிராமத்து ஆசாமியிடம் கண்டக்டர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் எனக்கு ‘பக்’ என்றது.

“எங்கே என் குடை?”

“ஐயய்யோ! ரெஸ்டாரண்ட்டிலேயே குடையை விட்டு விட்டேன் போலிருக்கே.”

நினைவை ரிவர்ஸில் செலுத்தியபோது, நந்தி கோயில் தெரு ரெஸ்டாரண்டில் டிபன் சாப்பிட்டபோது, உட்கார்ந்திருந்த டேபிள் மூலையில் சுவரோரம் சாத்தி வைத்திருந்தது மனக்கண் முன் தோன்றியது.

‘அடக்கடவுளே! இப்ப என்ன செய்யலாம்? அடுத்த ஸ்டாப்பில் இறங்கி திரும்பப் போய் குடையை எடுத்து வரலாமா?’ தீர்மானம் செய்யும்முன் கண்டக்டர் டபுள் விசில் கொடுத்தார்.

மணியைப் பார்த்தேன். ஏழடிக்க ஐந்து நிமிடங்கள்.

குடையை எடுத்துக் கொண்டு மறுபடியும் பஸ் பிடித்து இ.பி. ஸ்டாப்பை அடைந்து காஜாமியான் பள்ளிக்குச் செல்வதற்குள் மீட்டிங் பாதி முடிந்துவிடும்.

‘குடையா? மீட்டிங்கா?

இரண்டுமே முக்கியம்.

என்ன செய்வது?’ எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் போதே ஜங்சன் வந்து விட, இறங்குபவர்களை இறங்க விடாமல் ஏறுபவர்கள் வெளவால்களாக மாறி ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டனர்.

‘இவர்களைத் தாண்டிக் கொண்டு எப்படி இறங்குவது? மீறி இறங்கி, எதிர்சாரி போய், மெயின் காட்கேட் பஸ் பிடித்து ரெஸ்ட்டாரண்ட் சென்று குடை இருந்தால்தான் ஆச்சு. இல்லாவிட்டால், ஏமாற்றத்துடன் திரும்ப பஸ் பிடித்துச் செல்வதற்குள் மீட்டிங் முடிந்து விடும்.’

இறங்கி குடையை போய் எடுத்து வரும் யோசனையை அரை மனதுடன் கை விட்டேன்.

எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் ஆள் ஆளாளுக்கு என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தனர்.

என் கவனம் எதிலும் ஈடுபடாமல் அந்தக் குடையையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

‘எவ்வளவு அழகான புத்தம் புதிய குடை?

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வழவழப்பான சிகப்பு நிற டிரான்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் கைப்பிடி.

எவ்வளவு கவனத்துடன் ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டு போய் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

ராசியான குடையும் கூட!

பாழாய் போன ஞாபக மறதியால் வந்த வினை!’

மனம் புழுங்கிக் கொண்டிருந்தது.

கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்தனர்.

மணி இரவு ஒன்பதரை. பள்ளியின் எதிர்ப்புறமாகப் போய் நின்று துப்பாக்கித் தொழிற்சாலை பஸ்ஸூக்காக ‘குடை பற்றிய நினைவு’களுடன் காத்திருந்தேன்.

அவ்வளவு நேரமாகியும்கூட, அங்கிருந்து ‘மெயின் காட்கேட் போய் ரெஸ்ட்டாரண்ட்டில் குடையைக் கேட்டுப் பார்க்கலாமா?’ என்ற நப்பாசைத் தலைதூக்க, ‘துப்பாக்கித் தொழிற்சாலைக்குச் செல்ல பிறகு பஸ் இருக்காது’ என்ற நினைவு போட்டியாக தலை தூக்கியதும் நப்பாசை அடங்கிப் போனது.

துப்பாக்கித் தொழிற்சாலை செல்லும் எஸ்ஜே.டி 63-ம் நம்பர் பஸ் உள்ளேயும், வெளியேயுமாகப் பயணிகளைச் சுமக்க முடியாமல் ஒரு பக்கம் சாய்ந்தவாறே இ.பி.ஸ்டாப் முன் வந்து நிற்க, இறங்குபவர்களை இறங்க விடாமல் ஃபுட்போட்டில் வெளவால்களாக மாறித் தொங்கிக் கொண்டிருந்தவர்களுடன் நானும் சேர்ந்து வெளவாலாக மாறினேன்.

ஏர்ப்போர்ட்டில் பாதி பஸ் காலியாகி உட்கார இடம் கிடைத்ததும், அதுவரை தொலைந்து போயிருந்த ‘குடைப் பற்றிய நினைவு’ மீண்டும் மனதில் தோன்றி என்னைச் சங்கடப்படுத்தியது.

‘ஒரு ஓட்டைக் குடையாக இருந்தாலாவது தொலைந்து போகட்டும் என விட்டு விடலாம். கைக்கு அடக்கமான சின்னஞ்சிறிய சிங்காரமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வழவழப்பான சிகப்பு நிற டிரான்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் கைப்பிடியையுடைய அழகான குடை! அப்படிப்பட்ட எனக்குப் பிரியமான அந்தக் குடையைத் தொலைத்து விட்டு’ அக்குடையைப் பற்றிய நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடையின் ‘பின்னணி’ ரொம்ப வேடிக்கையானது!

அது ஓர் அக்டோபர் மாதத்திய மழைக்கால நாளின் பிற்பகல்.

‘ப்ளஸ் டூ’ வகுப்புக்கான பிராட்டிகல் முடிந்து மாணவர்கள் சென்று விட்டிருந்தனர்.

லேபாரட்டரி முழுவதும் ‘ஹைட்ரஜன் சல்பைடு காஸ்’ நாற்றம் வயிற்றைக் குமட்ட, ரிலாக்ஸூக்காக லேப் வெளியே வந்து நின்ற போதுதான் அந்தக் குடையைக் கவனித்தேன்.

தண்ணீர் வடிவதற்காகக் குடையைப் பிரித்த நிலையில் யாரோ வெளியே வைத்திருக்க வேண்டும்.

மாணவனோ, மாணவியோ மறந்து போய் குடையை விட்டு சென்று விட்டான்/ள் என நினைத்து குடையை எடுத்து மடக்கி ஸ்டோர் ரூம் பீரோவில் கொண்டு போய் வைத்தேன்.

அடுத்த நாள் காலை பள்ளி சென்றதும் முதல் வேலையாக அந்த வகுப்புக்குச் சென்று குடையை மறந்து விட்டுச் சென்றது யார் என விசாரித்ததில் எவரும் வந்து குடையைப் பெற்றுச் செல்லவில்லை.

திரும்பத் திரும்பக் கேட்டு குடைக்குரியவரைக் கண்டு பிடிக்க முயற்சித்தும் யாரும் வராததால், ‘பிற வகுப்பு மாணவர்களில் யாராவது லேப் வந்து தவறுதலாக விட்டுச் சென்றிருக்கக் கூடும்’ என்ற எண்ணத்தில் குடையை ‘மார்னிங் ப்ரெயர் அசெம்பிளி’யில் காண்பித்துக் கேட்க ஏற்பாடு செய்தேன்.

பயனில்லை!

‘கெமிஸ்ட்ரி லேப் அருகேயிருக்கும் பிரைமரி வகுப்பிலிருந்து பள்ளி முடிந்து குழந்தையைக் கூட்டிச் செல்ல வந்த பெற்றோர்களில் யாராவது தவறுதலாகக் குடையை லேப் முன்பு விட்டுச் சென்றிருக்கலாமோ?’ என்று தோன்றியது.

அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ச்சியாக ஓரிரு மாதங்கள் வரை வருவோர் போவோரிடமெல்லாம் அக்குடையைக் காண்பித்தும் விசாரித்தும் யாரும் வந்து பெற்றுக் கொள்ளவில்லை.

‘யாருக்கும் பிரயோஜனமின்றி அதை வெறுமனே பீரோவினுள் வைத்துப் பூச்சி அரித்துக் கெட்டுப் போவதைவிட உபயோகிக்கவாவது செய்யலாம்’ என்ற எண்ணத்தில் கடந்த பத்து வருடங்களாக அக்குடையைப் போற்றிப் பாதுகாத்து உபயோகித்து வந்தேன்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பத்து வருடங்களாகியும், அந்தக் குடையை யார் மறந்து விட்டுச் சென்றார்கள்? ஏன் அவர்கள் வந்து குடையைப் பெற்றுச் செல்லவில்லை? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், மிகப்பெரிய புதிராக இருப்பதுதான்!

துப்பாக்கித் தொழிற்சாலை வந்ததுகூடத் தெரியாமல் கண்களை மூடிக் கொண்டு சிந்தனையில் இருந்த என்னை கண்டக்டர் உசுப்ப, திடுக்கிட்டு எழுந்து பஸ்ஸைவிட்டு இறங்கி ஏதோ பெற்ற குழந்தையைப் பறி கொடுத்துவிட்ட நிலையில் யந்திரமாகக் குவார்ட்டர்ஸை நோக்கி நடந்தேன்.

இரவு முழுவதும் தூக்கமில்லை.

நிம்மதியற்ற அரைத்தூக்கத்தில் குடை கிடைத்து விட்டாற்போல் ஓர் பிரமை. கண் விழித்துப் பார்த்தால் வெறும் கனவு.

பொழுது விடிந்தது.

மீண்டும் இரவு வந்தது.

இப்படியே பத்து நாட்கள் ஓடி விட்டன.

ஒருமுறை அந்த ரெஸ்ட்டாரண்ட் சென்று குடையைப் பற்றி விசாரிக்கலாம் என்றால் செல்ல முடியாத அளவுக்கு ஒன்று மாற்றி ஒன்று ஏதாவது வேலை இருந்து தட்டிக் கொண்டே போயிற்று. குடையைப் பற்றிய நினைவுகள் மட்டும் மனதைவிட்டு அகலவில்லை.

இனிபோய் விசாரிப்பதும் ஒன்றுதான். விசாரிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்.

ஒரு நாளைக்கு ஆயிரமாயிரம் பேர் வந்து, சாப்பிட்டுப் போய் கொண்டிருக்கிற அந்த ரெஸ்ட்டாரண்டில் இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்தக் குடை இருக்கவா போகிறது? யாராவது எடுத்திருந்தாலும் போய்க் கேட்டால் கொடுக்கவா போகிறார்கள்?

ரெஸ்ட்டாரண்ட் சென்று குடையைப் பற்றி விசாரிக்கும் எண்ணமும் கைவிடப்பட்டது.

ஒருநாள் மாலை.

பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரே நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து புன்முறுவலுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவர் கையில் ஓர் குடை. என்னை நெருங்கியதும் அவரிடம், “எங்க போறீங்க? இவ்வளவு அவசரமா?” என்றேன்.

“நேற்று இரவு எங்க செக்ஷன் ஃபோர்மேன் வீட்டில் அவருடன் பேசிக்கிட்டிருந்திட்டு வீடு திரும்பறப்போ சரியான மழைப் பிடிச்சுகிடுச்சு. அவர் வீட்ல இருந்து குடையை வாங்கிட்டுப் போயிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுத்துட்டு வரலாம்னு போய்க்கிட்டிருக்கேன்.”

நண்பர் சென்று விட்டார்.

‘நண்பர் என்ன சொன்னார்?

வாங்கிட்டுப் போன குடையைத் திருப்பிக் கொடுக்கப் போவதாக. எஸ்! கரெக்ட்!!’

என் மனதிலும் ‘பளிச்’சென்று ஆனால் தெளிவாக ஓர் எண்ணம் உதித்தது.

‘யாரோ விட்டுச் சென்ற குடை தானே அது?

இன்று வரை யாருடைய குடை என்றே எனக்குத் தெரியாது.

அந்தக் குடை கையை விட்டுச் சென்று விட்டது. தொலைந்து போய் விட்டது.

நோ!

தொலையவில்லை.

யாரிடமிருந்தோ வாங்கி வந்த ஒரு குடையை உரியவரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்’ இப்போது. இப்படி உறுதியாக நினைக்க ஆரம்பித்தேன்.

‘வாங்கி வந்த குடையை நானும் திருப்பிக் கொடுத்து விட்டேன்! ஆம்! யார் குடையையோ உபயோகித்துக் கொண்டிருந்தேன். யாரிடமோ திருப்பிக் கொடுத்து விட்டேன் இப்போது. நிம்மதி!’

மனம் என்ற வானத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்த சஞ்சலம் என்ற கருமேகம் விலகி உள்ளம் தெளிந்த நீரோடையானது.

‘தொலைந்து போன குடை’யைப் பற்றிய எண்ணம் இப்போதெல்லாம் ஏற்படுவதேயில்லை.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.