குட்டி தேவதை – சிறுகதை

அமுதரசி அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போட்டு அரக்க பரக்க வீட்டு வேலைகளை பார்த்து முடித்துவிட்டு வீடு முழுவதும் குழந்தை அஞ்சலியை தேடினார்.

அஞ்சலியை காணவில்லை. ‘இவள் எங்க போனாள்? ஸ்கூலுக்கு வேற நேரமாச்சு.’ என்று எண்ணினார்.

“அஞ்சலி அஞ்சலி” என்று அழைத்தவாறே கொல்லைப்புறத்துக்கு சென்றார்.

“என்னம்மா?” என்று கேட்டுக்கொண்டே, பூத்துக் குலுங்கும் செடிகளுக்கு நடுவே இருந்து தலையை தூக்கி எட்டி பார்த்தாள் அஞ்சலி.

பூக்களின் நடுவே அஞ்சலியும் ஒரு மலர் போல அழகாக இருந்தாள்.

“எங்க போன அஞ்சலி காலையிலேயே?” என்றார் அமுதரசி.

“அம்மா இங்க பாரும்மா எவ்வளவு பூ! அழகா இருக்குல்ல.” என்றபடி ஒரு கிண்ணத்தில் பூக்களுடன் வந்தாள் அஞ்சலி.

“ஆமாம், ஆமாம். வா, ஸ்கூலுக்கு நேரமாச்சு. தலை சீவி வெச்சுடறேன்” என்று அழைத்துக் கொண்டு சென்றார் அமுதரசி.

அதற்குள் அஞ்சலியின் அப்பா ராஜேஷ் குளித்துமுடித்து விட்டு வந்தார்.

“என்னங்க சீக்கிரம் கிளம்பி வாங்க. இதோ இவளும் ரெடி ஆயிட்டா. ரெண்டு பேரும் டிஃபன் முடிச்சுட்டு இவளை கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு அப்படியே நீங்கள் ஆபீசுக்கு போங்க.” என்றார் அமுதரசி.

” சரி, சரி. இன்னைக்கு என்ன டிபன்?”

“வழக்கம் போல இட்லி தான். அஞ்சலிக்கும் உங்களுக்கும் டிபன் பாக்ஸ்ல சாப்பாடு வச்சிருக்கேன்.” என்றபடி இருவருக்கும் காலை உணவைப் பரிமாறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வந்து தன் வீட்டு வேலையை தொடங்கினார் அமுதரசி.

சாயங்காலம் நாலு மணி ஸ்கூல் பெல் அடித்தவுடன் குழந்தைகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்ப அஞ்சலியும் வெளியே வந்தாள்.

அமுதரசி அஞ்சலியை பார்த்தவுடன் பையை வாங்கிக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

அஞ்சலி வீட்டிற்கு வந்ததும் டிரஸ் மாற்றி இயல்புக்கு திருப்பினாள். ஸ்னாக்ஸ் முடித்ததும் டிவி ஸ்விட்ச்சை ஆன் பண்ணி சுட்டி டிவி பார்க்கத் தொடங்கினாள்.

யூனிபார்ம்மை துவைத்து காய போட்டுவிட்டு வந்த அமுதரசி, அஞ்சலி டிவி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

“அஞ்சலி எப்ப பார்த்தாலும் டிவி பார்த்துகிட்டு இருக்காதன்னு பல தடவ சொல்லியிருக்கேன்.”

“அம்மா, இல்லம்மா கொஞ்ச நேரம் தான்”

அமுதரசி “அப்பா வர்ற நேரமாச்சு. அவர் வர்ற நேரத்துல டிவி பார்த்துட்டு இருக்காத. ஆமா சொல்லிபுட்டேன்” என்று சொல்லிவிட்டு வீட்டு வேலையில் மூழ்கினார்.

வேலையை முடித்துவிட்டு வந்தார் அமுதரசி. அப்போதும் அஞ்சலி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அமுதரசிக்கு கோபம் தலைக்கு ஏறியது.
அஞ்சலியின் முதுகில் ஒன்று வைத்தார்.

“நானும் எப்போ புடிச்சு சொல்லிக்கிட்டு இருக்கேன். டிவி பார்க்காத! டிவி பார்க்காதன்னு” என்று சொல்லிவிட்டு டிவி சுவிட்சை அடக்கினார்.

அஞ்சலி அழுது கொண்டே, பூச்செடிகள் இருக்கும் தோட்டத்திற்குள் சென்றாள். சிறிது நேரம் அழுதுவிட்டு பூக்களை கவனிக்கத் தொடங்கினாள்.

பூக்கள் எல்லாம் இவளைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றவே சட்டென்று எழுந்து வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு உட்கார்ந்து கொண்டாள் .

அப்போது வீட்டின் சுவற்றில் குளவி ஒன்று களிமண்ணால் வீடு கட்டிக் கொண்டிருந்தது. அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் அஞ்சலி.

குளவி வீட்டைக் கட்டி முடித்து விட்டு எங்கோ பறந்து சென்றது. சிறிது நேரத்தில் மீண்டும் குளவி அதன் வீட்டிற்கு வந்தது. அதன் கால்களில் ‘பச்சைப்பசேல்’ என்று ஒரு புழு தொங்கிக் கொண்டிருந்தது.

அதை தன் வாயால் கூட்டிற்குள் தள்ளி கொட்டத் தொடங்கியது. குளவி புழுவை கொட்ட கொட்ட புழு குளவி ஆகும் என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறாள்.

இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு மனதில் ஓர் எண்ணம் தோன்றியது.

‘இந்தக் குளவி ஏன் நம்மை கொட்டக் கூடாது? நம்மை கொட்டினால் நமக்கும் ரெக்கை முளைக்கும். ரெக்கை முளைத்தால் சுட்டி டிவியில் வரும் தேவதை போல் ஆகி விடுவோம்.

நாம் தேவதை ஆகிவிட்டால் நினைத்த இடத்திற்கெல்லாம் பறந்து செல்லலாம். பூக்கள் மீது உட்கார்ந்து இருக்கலாம்.

இயற்கை எழிலை கொஞ்சி ரசிக்கலாம். ரொம்ப சந்தோசமாக இருக்கும். இந்த சிடுமூஞ்சி அம்மாவிடம் அடி வாங்க வேண்டாம்.’ என்று நினைத்து குளவி கூட்டின் அருகே விரலைக் கொண்டு சென்றாள்.

குளவி தன் கூட்டின் அருகே விரல் வந்ததை கவனித்ததும் ‘நறுக்’கென்று ஒரு கொட்டு கொட்டி விட்டு பறந்து சென்றது.

“ஆ!” என்று அலறிய அஞ்சலி அம்மா வந்து விடுவார் என்று பயந்து வாயைப் பொத்திக் கொண்டாள்.

சிறிது நேரம் சென்றதும் குளவி தன் கூட்டிற்கு வந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அஞ்சலி திரும்பவும் கூட்டின் அருகே விரலை கொண்டு சென்றாள். ‘நறுக்’கென்று கொட்டி விட்டு மீண்டும் பறந்தது குளவி.

இம்முறையும் வலியால் துடித்தாள் அஞ்சலி. வாயைப் பொத்திக் கொண்டாள். ஆனால் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இதே போல் இரண்டு மூன்று முறை நடந்ததும் குளவியாகவே மாறிப் போனாள் அஞ்சலி.

உருவம் சிறிதாக மாறியது. பூச்செடிகள் எல்லாம் பெரிய மரங்களாக தெரிந்தன. அவள் உடம்பு தேவதை போல் இல்லை; குளவி போலவே மாறினாள்.

குளவி கூட்டை விட்டு விரட்டி விட்டது. பறந்து சென்ற அஞ்சலி யோசித்தாள்.

‘என்ன இது இப்படி ஆயிடுச்சே!’

அப்போது காற்று வேகமாக அடித்தது. புயல் அடிப்பது போல் உணர்ந்தாள். காற்றின் வேகத்தில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தாள்.

விழுந்த இடத்தில் காலில் அடிபட்டு விட, வலியால் துடித்தாள் அஞ்சலி. சிறிது நேரம் அழுதுவிட்டு எழுந்து நொண்டி நொண்டி நகர்ந்தாள்.

அப்போது பக்கத்தில் இருந்த பூச்செடி ஒன்று பேசியது.

“என்ன அஞ்சலி வலிக்குதா? நீ குழந்தையா இருந்தப்போ எங்களை எல்லாம் எவ்வளவு அடிச்சி இருப்ப. எங்கள் பூக்களை எல்லாம் பறித்து தினமும் தலையில் வைத்து கொள்வாயே. இப்போ எங்கே வைத்து கொள்வாய்?

இதுதான் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பார்கள். நாங்கள் இப்போது நினைத்தாலும் உன்னை நசிக்கி விடுவோம். இங்கிருந்து ஓடிவிடு” என்றது.

அழுதுகொண்டே அஞ்சலி பறக்க எத்தனித்தாள். அப்போது ஒரு சிட்டுக்குருவி அஞ்லியைப் பார்த்து துரத்தியது.

பயத்தில் ‘உயிர் தப்பினால் போதும்’ என்று அங்குமிங்குமாக சிட்டுக்குருவியை அலைக்கழித்து பறந்து ஓடினாள் அஞ்சலி.

எதிரே அஞ்சலியின் தந்தை ராஜேஷ் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

ராஜேசுக்குஎதிரே அஞ்சலி பறந்து வந்தாள். “அப்பா, அப்பா இங்க பாருங்கப்பா. இந்த குருவி என்னை துரத்துதுப்பா” என்று சொன்னாள்.

ராஜேசுக்கு முகத்தருகே குளவி சத்தம் போட்டுக்கொண்டு பறப்பது தான் தெரிந்தது. உடனே ராஜேஷ் கையால் குளவியைத் தட்டினார்.

அஞ்சலி அடிபட்டு கீழே விழுந்தாள். அவளால் எழுந்து பறக்க முடியவில்லை. இறக்கைகள் முறிந்துவிட்டன. காலிலும் அடிபட்டுவிட்டது. அழுது கொண்டே நகர்ந்தாள்.

எதிரே சாமி பூஜை ரூம் தென்பட்டது. நகர்ந்து நகர்ந்து பூஜை ரூமுக்குள் சென்றாள். சாமியை பார்த்து வணங்கினாள்.

“என்னுடைய ஆசையினால் இப்படி ஆகி விட்டேனே” என்று அழுது புலம்பி கொண்டு அமுதரசி ஏற்றி வைத்திருந்த விளக்கின் மீது கால் பட்டுவிட, விளக்கின் தீ சுரீரென்று சுட்டது.

தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலி அலறிக் கொண்டு எழுந்தாள்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.