குட்டி யானை அப்பு

பசுஞ்சோலை என்றொரு அழகிய காடு இருந்தது. அக்காட்டில் குட்டி யானை அப்பு ஒன்று இருந்தது. அது மிகவும் சந்தோசமாக ஆடிப் பாடி காட்டில் திரிந்தது.

அக்காட்டில் உள்ள எல்லா விலங்குகள் மற்றும் பறவைகள் குட்டி யானை அப்புவை நேசித்தன. இது நரிக்குட்டி நஞ்சப்பனுக்கு பிடிக்கவில்லை.

ஆதலால் அது எப்போதும் குட்டி யானை அப்புவிடம் வம்பிழுத்துக் கொண்டே இருந்தது. அதனிடம் உன் காது பெரிதாக உள்ளது என்றும், உன்னுடைய தும்பிக்கை நீளமாக உள்ளது என்றும் கேலி செய்து கொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டது. 

 

ஒருநாள் நரிக்குட்டி நஞ்சப்பன் குட்டியானை அப்புவிடம் “நீ மிகவும் கருப்பாக இருக்கிறாய். உன்னுடைய இந்த கருமை நிறத்தால் நீ அசிங்கமாக இருக்கிறாய்” என்றது.

இதனைக் கேட்டதும் குட்டி யானை அப்புவிற்கு அழுகை வந்தது. அந்த இடத்தைவிட்டு மௌனமாகச் சென்றது. தன் நண்பர்களைச் சந்திக்கும் இடமான மரத்தடிக்கு வந்து குட்டியானை அப்பு அழுது கொண்டிருந்தது.

 

அப்புவைப் பார்க்க அதனுடைய நண்பர்களான புலிக்குட்டி புண்ணியகோடி, மான்குட்டி மல்லிகா, மயில்குஞ்சு மங்கா ஆகியோர் மரத்தடிக்கு வந்தனர்.

குட்டியானை அப்பு அழுது கொண்டிருப்பதைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மான் மல்லிகா அப்புவிடம் “அப்பு நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய். நீ அழுது நாங்கள் பார்த்ததே இல்லையே.” என்று கேட்டது.

அப்பு பதில் ஏதும் கூறாமல் அழுது கொண்டே இருந்தது. மயில் மங்கா “அப்பு நீ சொன்னால் தானே அழுவதற்கான காரணம் தெரியும்” என்றது. பின் குட்டி யானை அப்புவின் நண்பர்கள் அப்புவை சமாதானப்படுத்தி பேச வைத்தன.

அப்பு அவர்களிடம் “நரிக்குட்டி நஞ்சப்பன் என்னுடைய கருமை நிறத்தால் நான் அசிங்கமாக இருப்பதாக் கூறினான். ஆதலால்தான் நான் அழுது கொண்டிருக்கிறேன்.” என்றது.

அதனைக் கேட்டதும் புலிக்குட்டி புண்ணியகோடி “அப்பு அழுகாதே, நீ என்னுடைய அழகான வரிகளை பெற்றுக்கொள்.” என்றது.

மான்குட்டி மல்லிகா “அப்பு என்னுடைய புள்ளிகளை வைத்துக் கொள்” என்றது.

மயில்குஞ்சு மங்கா “உனக்கு பிடித்த வண்ணங்களை நீ என்னிடமிருந்து எடுத்துக் கொள்” என்றது.

யானைக் குட்டி அப்புவும் புலியிடமிருந்து வரிகளையும், மானிடமிருந்து புள்ளிகளையும், மயிலிடமிருந்து அழகான நிறங்களையும் எடுத்து தன்னுடைய உடலில் ஒட்டிக் கொண்டது.

தான் மிக அழகாக மாறி விட்டதாக அப்பு நினைத்தது. ஆனால் மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாததாக மாறிவிட்டது.

 

மறுநாள் காலையில் வரிக்குதிரை வனிதா அப்புவிடம் “நீ யார்; புதிதாக இங்கே வந்திருக்கிறாயா?” என்று கேட்டது.

குயில் குப்பம்மா “நம்முடைய காட்டிற்கு யாரோ புதிதாக வந்துருக்கிறார்களே” என்றது.

அங்கே வந்த நரிக்குட்டி நஞ்சப்பன் “யாராவது யானைக்குட்டி அப்புவைப் பார்த்தீர்களா?” என்றது.

இதனை எல்லாம் கேட்ட யானைக் குட்டி அப்புவிற்கு வருத்தமாகப் போய்விட்டது. அழகாய் இருப்பதைவிட எல்லோரிடமும் அன்பாய் இருப்பதே வேண்டும் என உணர்ந்தது.

 

அப்பு நேரே ஆற்றுற்குச் சென்று குளித்தது. அதனுடைய உடலில் உள்ள வண்ணங்கள் எல்லாம் மறைந்தன.

குட்டி யானை அப்புவினைப் பார்த்த விலங்குகள் மற்றும் பறவைகள் அதனுடன் வழக்கமாக கலகலப்பாக பேசின. அப்புவும் மகிழ்ந்தது.

நம்முடைய நிறமானது நம்மை உயர்த்தவும், தாழ்த்தவும் செய்யாது. நல்ல செயல்களே நம்மை உயர்த்தும் என்பதை குட்டி யானை அப்பு கதை மூலம் அறிந்து கொண்டீர்கள் தானே.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.