சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு

குருவிக் கூட்டம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி இருக்கும்.

வாக்டெய்லின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஒருவித அச்ச உணர்வு மேலெழுந்தது. அவை வாக்டெய்லை அழைத்துக் கொண்டே இருந்தன. எந்த பதில் சமிக்ஞையும் வரவில்லை.

அவை மேலும் கலக்கம் அடைந்தன. எனினும் ’வாக்டெய்லின் சாமர்த்தியம்’ மீது அவை நம்பிக்கை வைத்திருந்த்தால், சற்றே தைரியத்துடன் அவை பயணித்தன.

மெல்ல வானம் விடிந்தது. மூடுபனி அகலவில்லை. இன்னமும் அருகில் இருக்கும் குருவிகளை அவற்றால் காண முடியவில்லை.

வாக்டெய்லின் அம்மாவிற்கோ அச்சம் அதிகரித்தது.

உடனே,”வாக்டெய்ல் கிட்ட இருந்து எந்த பதிலும் வரலையே…… எதாவது செய்யுங்க…” என்று தழுதழுத்த குரலில் தன் கணவரிடம் கூறியது வாக்டெய்லின் அம்மா.

அப்பா குருவியும், சோகத்துடன், “சரி… வாக்டெய்லுக்கு ஒன்னும் ஆகியிருக்காது…” என்று கூறி தகவலை இருன்டினிடேவிற்கு தெரியப்படுத்தியது.

இருன்டினிடே அதிர்ச்சி அடைந்தது. ’வாக்டெய்லை காணவில்லை’ என்ற தகவல் பரவி, ஒட்டுமொத்த குருவிக் கூட்டமும் கலக்கத்தில் ஆழ்ந்தது.

உடனே, பயண வேகத்தை குறைக்கும்படி குருவிகளுக்கு சமிக்ஞை கொடுத்தது இருன்டினிடே.

எல்லா குருவிகளும் பறக்கும் வேகத்தை குறைத்தன. மூடுபனி நிறைந்திருந்தது.

நேரம் நகர்ந்து கொண்டிருக்க, காலைப் பொழுது விடிந்தது.

 

ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்த சூரியன் தனது செங்கதிர்களை தந்து கொண்டிருந்தது. கதிர்கள் பூமியை வந்து தொட்டவுடன், பனிப்பொழிவு மறையத் துவங்கிற்று.

சிறிது நேரத்தில் மூடுபனி முற்றிலும் நீங்கிட, உடனே குருவிகள் அங்கிருந்த மரத்தின் உச்சியில் வந்து அமர்ந்தன. கண்ணுக்கு எட்டிய வரை பச்சைபசேலென மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. எல்லா குருவிகளும் வாக்டெய்லை தேடின. அதனை காணவில்லை.

வாக்டெய்லின் அம்மா ஓஓ… வென கதறியது. அப்பா குருவியும் கண்ணீர் வடித்து பெரும் துக்கத்தில் மூழ்கியது. குருவிக் கூட்டமே பெரும் சோகப்பிடியில் ஆழ்ந்தது.

குருவிகள் புலம்பின….. வாக்டெய்லின் நண்பர்களும் தேம்பி தேம்பி அழுதன.

அக்கணத்தில் இருன்டினிடே, ‘என்ன செய்வது’ என்று தெரியாமல் திகைத்து நின்றது.

‘ஒருவேளை தொலைவில் வாக்டெய்ல் வந்துக் கொண்டிருக்கிறதா?’ என்று எண்ணி, தூரத்தில் உற்றுப் பார்த்தது இருன்டினிடே.

வாக்டெய்ல் வருவதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.

சில மணித்துளிகள் அப்படியே நகர்ந்தன. இருன்டினிடே துக்கத்தினை அடக்கிக் கொண்டு, ’வாக்டெய்லை தேடவேண்டும்’ என்று முடிவு செய்தது.

அடுத்த நொடி, அப்பா குருவியை பார்த்து, “நண்பா, இது பெரும் துக்கம் தான். ஆனா நாம இப்படியே இருந்தா, வாக்டெய்ல கண்டுபிடிக்க முடியாது. வாக்டெய்ல் சமர்த்தியசாலி. அதுக்கு ஏதாச்சும் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலும் அத எதிர்கொள்ளும் திறன் அதுக்கு இருக்கு. நாம வாக்டெய்ல தேடிப் போகலாம், நண்பா” என்று இருன்டினிடே கூறியது.

அழுதுக் கொண்டிருந்த அப்பா குருவி தனது அழுகையை நிறுத்தியது. தலைவர் சொன்னபடி, வாக்டெய்லை தேடுவதே இப்போது செய்ய வேண்டிய முக்கிய பணி என்பதை அது உணர்ந்துக் கொண்டது.

“ஆமாங்க… புறப்படுவோம்” என்று அப்பா குருவிக் கூற, அம்மா குருவியோ பெருமூச்சோடே அழுதுக் கொண்டிருந்தது.

“என்னோட குட்டிய இப்படி விட்டுடேனே” என்று புலம்பியது.

குருவிகள் எல்லாம் கண்ணீர் வடித்தன.

உடனே இருன்டினிடே, சில மூத்த குருவிகளை அழைத்து குருவிக் கூட்டம் தங்குவதற்கான இடத்தை தெரிவு செய்து வரும்படி அனுப்பியது. வாக்டெய்லின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியது.

அவற்றால் துக்கத்தை அடக்க முடியவில்லை.

 

தன் உயிரை தந்தாவது வாக்டெய்லை உங்களிடம் சேர்ப்பதாக உறுதி அளித்தது இருன்டினிடே.

அவை அழுதுக் கொண்டே, “ஐயா, உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது. வாக்டெய்ல் கிடைக்கணும்” என்று அவை கூறின.

“நிச்சயமா, நான் சொல்றேன்லே. வாக்டெய்ல் வழிமாறி போயிருக்கலாம். நாம தேடினோம்னா நிச்சயம் கண்டுபிடிச்சிடுலாம். கவலைய விடுங்க” என்று நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தது இருன்டினிடே.

குருவிக் கூட்டத்திற்கு ’புதிய நம்பிக்கை’ பிறந்தது.

அப்பொழுது மூத்த குருவிகள் அங்கு வந்தன. “ஐயா, பக்கத்துல ஒரு இடம் இருக்கு. அங்க குருவிக் கூட்டம் தங்கலாம்” என்று அவை இருன்டினிடேவிடம் கூறின.

உடனே, “நண்பர்களே, முதல்ல நண்பர்கள் சொன்ன இருப்பிடத்துக்கு போவோம். பிறகு, நாங்க சிலபேரு மட்டும் வாக்டெய்ல குட்டிய தேடிப் கண்டுபிடிச்சு கூட்டிட்டுவர போயிட்டு வர்றோம்” என்று இருன்டினிடே கூறியது.

“ஐயா, நாங்களும் வர்றோம். எல்லோரும் ஒன்னா வாக்டெய்ல தேடிப் போவோம்” என்று குருவிகள் கூறின.

“இல்ல நண்பர்களே, இந்த இக்கட்டான சூழ்நிலையில நாம விரைந்து செயல்படனும். கூட்டமா போனா மேலும் சிக்கலோ காலதாமதமோ வரலாம். அதான் சொல்றேன்” என்று கூறியது இருன்டினிடே.

அதனை குருவிகள் ஏற்றுக் கொண்டன. பின்னர், குருவிக் கூட்டம் தெரிவு செய்ப்பட்டிருந்த இருப்பிடத்திற்கு சென்று சேர்ந்தது.

அந்த இடம் மிகவும் அழகுடன் வளமாகவும் இருந்தது. மரங்கள், செடி கொடிகள், குளம் என அப்பகுதியே அற்புதமாக இருந்தது. எனினும் அவ்விடத்தின் அழகில் குருவிகளின் கவனம் செல்லவில்லை. எல்லா குருவிகளும் வாக்டெய்லின் நினைவாகவே இருந்தன.

அப்பொழுது, “நண்பர்களே, எல்லோரும் இங்கேயே பாதுகாப்பா இருங்க. நாங்க போய் எப்படியாவது வாக்ட்டெய்ல கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர்றோம்” என்று கூறிவிட்டு, வாக்டெய்லின் அப்பாவுடன் மேலும் நான்கு குருவிகளை மட்டும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட முற்பட்டது இருன்டினிடே.

தானும் வருவதாக கூறி புறப்பட முயன்றது வாக்டெய்லின் அம்மா குருவி. ஆனால் அதனை இங்கேயே தங்குபடி கேட்டுக் கொண்டது இருன்டினிடே.

வாக்டெய்லின் அம்மாவோ இருன்டினிடேவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது குட்டியை கண்டுபிடிக்க தானும் வருவதாக உறுதியுடன் கூறியது.

வேறு வழியின்று அதனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து இருன்டினிடே புறப்பட்டது. நேரே உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரஉச்சியில் அவை வந்து அமர்ந்தன. வாக்டெய்லை தேடிக் கண்டுபிடிப்பது பற்றிய வழிமுறைகளை அவை வகுத்துக் கொண்டன.

அதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு வந்த வழியே மீண்டும் பயணிக்க தொடங்கின.

 

சூரியன் தனது ஒளிக்கதிர்களை பாய்ச்சிக் கொண்டிருந்தது. ஆனாலும் குருவிகளுக்கு வெப்பம் உரைக்கவில்லை. காரணம் அவற்றின் நினைவில் வாக்ட்டெய்ல் பற்றிய சிந்தனையே முழுவதுமாக இருந்தது.

இருன்டினிடேவின் தலைமையில் குருவிகள் வாக்டெய்லை தேடிக் கொண்டே பறந்துக் கொண்டிருந்தன. அவற்றின் கண்களுக்கோ வாக்டெய்ல் தெரியவில்லை. அவைகளால் வாக்டெய்லின் குரலையும் கேட்க முடியவில்லை.

தொடர் பயணத்தாலும், துக்கத்தாலும் குருவிகள் மிகுந்த சோர்வு அடைந்திருந்தன. ஆகையால் அவை ஒரு மரத்தின் மீது சென்று அமர்ந்தன.

அப்பொழுது அவ்வழியாய் ஒரு காகம் பறந்து சென்றுக் கொண்டிருந்தது. உடனே, “ஐயா… ஐயா…” என்று இருன்டினிடே அந்த காகத்தை பார்த்து அழைத்தது.

சற்று தயக்கத்துடன், “என்ன வேணும்?” என்று அந்த காகம் கேட்டது.

“நாங்க பூமியோட வடமுனை பகுதியில இருந்து வர்றோம். எங்க கூட்டத்துல இருந்த ஒரு குட்டி பறவை காணமா போயிடுச்சு” என்று கூறியது இருன்டினிடே,

உடனே, “ஐய்யோ…. பாவமே…. இவ்வளவு பெரிய சொர்க்க வனத்துல அதத்தேடி கண்டுப்பிடிக்கறது கொஞ்சம் கஷ்டமாச்சே” என்று வருத்தத்துடன் காகம் கூறியது.

குருவிகள் ஒன்றும் சொல்லவில்லை. அம்மா குருவிக்கு அழுகை பீறிட்டு வந்தது.

“கண்டுபிடிக்க ஏதாவது வழியிருக்கா?” என்று இருன்டினிடே கேட்க,

“ஐயா, நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க. எங்க நண்பர்கள்கிட்டேயும் சொல்லி தேடச் சொல்றேன். தகவல் தெரிஞ்சா, உடனே உங்களுக்கு வந்து சொல்றேன்” என்று அந்த காகம் சொன்னது.

குருவிக் கூட்டம் தங்கியிருக்கும் இடத்தின் அடையாளத்தை கூறியது இருன்டினிடே.

“சரிங்க, நல்லதே நடக்கும். நிச்சயம் உங்க குட்டி பறவை உங்களோட வந்து சேரும்” என்று கூறி அங்கிருந்து பறந்தது காகம்.

 

முற்பகல் நேரமும் வந்துவிட்டது.

குருவிகள் பறந்து பறந்து களைத்துவிட்டன. வாக்டெய்லை கண்டுபிடிக்க முடியாததால் தொடர்ந்து அம்மா குருவி அழுதுக்கொண்டே இருந்தது.

அப்பா குருவி அதனை தேற்ற முயன்றும் அம்மா குருவியால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அது மிகவும் சோர்ந்து போயிற்று. தீடீரென அது மயங்கி விழுந்தது.

அப்பா குருவிக்கோ இடி மேல் இடி விழுந்தது போல் இருந்தது.

உடனே ஒரு குருவியை அனுப்பி நீரும் சிறிது உணவும் கொண்டு வரும்படி அனுப்பியது இருன்டினிடே. அந்தக் குருவியும் விரைவாக சென்று நீரும் உணவும் கொண்டுவந்து கொடுத்தது.

சிறிது நீரை அம்மா குருவியின் முகத்தில் அப்பா குருவி தெளிக்க, அம்மா குருவி கண்விழித்தது.

எப்படியோ சமாதானப்படுத்தி சிறிது உணவை அதற்கு ஊட்டியது அப்பா குருவி.

சிறிது நேரம் அங்கேயே அவை தங்கின. மீண்டும் வாக்டெய்லை தேடிப் பறந்துச் சென்றன. அன்று முழுவதும் அவை அலைந்து திரிந்தன.

அவற்றின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. வாக்டெய்லை கண்டுபிடிக்கும் நம்பிக்கையை அவை மெல்ல இழக்கத் தொடங்கின.

வாக்டெய்லின் அம்மாவும் அப்பாவும் மீண்டும் கண்ணீர் விட்டு கதறின. இருன்டினிடேவும் சோகத்தில் ஆழ்ந்தது.

வேறுவழியின்றி, அவற்றை குருவிக் கூட்டம் தங்கியிருந்த இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது இருன்டினிடே.

’வாக்டெய்ல் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்படும்’ என்று நம்பியிருந்த குருவிக் கூட்டம் ஏமாந்து போனது.

ஆம்… குருவிகளுடன் வாக்டெய்ல் வராததால், குருவிகள் எல்லாம் துக்கத்தால் அழுதன. ’வாக்டெய்லை இழந்து விட்டோமோ’ என்று அவை அழுது புலம்பின.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.