குளோரின் – வளியின் குரல் 12

″வணக்கம் மனிதர்களே!

எல்லோரும் நலம் தானே?

ஒரு உண்மையை சொல்லட்டுமா?

உங்களை காணும் போது எனக்குள் அளவு கடந்த மகிழ்ச்சி உண்டாகிறது. பேச்சிற்காகவோ, உங்களை கவருவதற்காகவோ இதை சொல்லவில்லை. நான் உணர்வதையே சொல்கிறேன்.

இருக்கட்டும். நான் பல இடங்களுக்கு சொன்றிருக்கிறேன். பூமியின் காடு, மலை, பாலைவனம், நாடு என பலதரப்பட்ட பகுதிகளிலும் வலம் வந்திருக்கிறேன்.

குறிப்பாக, மனிதர்கள் வாழும் கிராமம், நகரம் மற்றும் மாநகரப் பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். இங்கெல்லாம் நீரின் சுவை மாறுவதை அறிந்திருக்கிறேன்.

ஒருமுறை மாநகரப் பகுதியில் வசித்துவந்த ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் நீரை சிக்கனமாக பயன்படுத்தி வந்ததை அறிந்து மகிழ்ந்தேன். நல்லது.

அவர் என்னிடம் சொன்ன ஒரு செய்தி இன்றைக்கு திடீரென என் நினைவிற்கு வந்தது.

‘அந்த செய்தி என்ன?’ என கேட்கிறீர்களா? உங்களிடம் சொல்லாமல் இருப்பேனா? சொல்கிறேன்.

′குளோரின் கலந்த நீர்′ பற்றி தான் அவர் என்னிடம் சொன்னார்.

அதாவது குடிநீர் தூய்மையானதாக இருக்க வேண்டும்; அருந்தினால் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இதற்காக, நீரை சுத்தம் செய்வது இன்றியமையாதது. இதற்கென, குளோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது.

எப்படி தெரியுமா?

நீரில் குளோரின் கரைந்து நீரிலிருக்கும் நோய்க் கிருமிகளை அழிக்கிறது. அத்தோடு நீரைக் கொதிக்க வைத்தால் அதிலுள்ள குளோரின் வாயுவும் வெளியேறிவிடுகிறது.

இதனால் குடிநீர் விநியோக முறையிலும், நீச்சல் குளத்திலுள்ள நீரைத் தூய்மையூட்டுவதிலும் குளோரினைப் பயன்படுத்துகின்றனர்.

குளோரின் வாயுவிற்குப் பதிலாக, சோடியம் ஹைப்போகுளோரைட் போன்ற சில குளோரோச் சேர்மங்களும் பயன்படுத்தப் படுகின்றன.

அட, இதை சொல்ல மறந்துவிட்டேனே!

′குளோரின்′ என இந்த வாயுவிற்கு பெயர் வந்தது எப்படி தெரியுமா? அதன் நிறம் தான்.

அதாவது, குளோரின் வாயு அறை வெப்பநிலையில் மஞ்சள்-பச்சை நிறத்தில் இருக்கும்.

கிரேக்க மொழியில் ‘மஞ்சள் கலந்த பசுமை நிறமுடைய’ என்பதற்கு ‘குளோரோஸ்’ என்ற சொல் இருக்கிறது. இதிலிருந்தே ‘குளோரின்’ என்ற சொல் நிறுவப்பட்டுள்ளது.

ஒரு முக்கிய தகவல். பொதுவாக இயற்கையில் தூய குளோரின் வாயு இருப்பதில்லை. ஆனால், செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது.

குறிப்பாக, உப்புநீரில் இருந்து மின்னாற்பகுப்பு மூலம் குளோரின் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது.

சரி, ஏன் குளோரின் இயற்கையில் இல்லை? காரணம் இதன் வினைத்திறன் தான். அதாவது, பிற சேர்மங்களுடன் குளோரின் வினையில் ஈடுபட்டு புதிய சேர்மங்களை உருவாக்கி விடும்.

பூமியில் குளோரின், ′குளோரைடு அயனியாக′ சேர்மத்தில் பிணைந்துள்ளது. கடல் நீரில் கரைந்திருக்கும் சோடியம் குளோரைடு ஒரு மிகச் சிறந்த உதாரணம் தானே.

இதை கவனித்தீர்களா?

இயற்கையில் குளோரின், குளோரைடு அயனியாக இருக்கிறது என்றேன். ஏன் தெரியுமா?

குளோரைடு அயனி பெரும்பாலான உயிரினங்களுக்கு தேவைப்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்திற்கு இன்றியமையாததாகும்.

உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் இயற்கையாக சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலும் குளோரைடு அயனி இருக்கிறது.

உடலுக்கு தேவையான குளோரைடு அயனி, சமையல் உப்பான சோடியும் குளோரைடு வழியாக கிடைக்கிறது.

பயன்கள்

குளோரினால் பல நன்மைகள் இருக்கின்றன.

குளோரின் சேர்மங்களான அல்கைல் குளோரைடு, வினைல் குளோரைடு, பாலிவினைல் குளோரைடு, அலுமினியம் ட்ரைக்ளோரைடு, மெக்னீசியம் குளோரைடு உட்பட ஆயிரக்கணக்கான சேர்மங்களை தயாரிப்பதற்கும் குளோரின் பயன்படுகிறது.

இக்காலத்தில் ′PVC′ எனப்படும் பாலி வினைல் குளோரைடு நெகிழி, அரிமானத்திற்கு உட்படாததாலும், எடை குறைந்ததாக இருப்பதாலும், கையாளுவதற்கு எளிதாக இருப்பதாலும், நீர் உள்ளிட்ட திரவங்களை எடுத்துச் செல்லும் குழாயாக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்களே.

மேலும், சாயங்கள், துணிகள், பெட்ரோலியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், பூச்சி கொல்லி மருந்துகள், வண்ணப் பூச்சுகள் எனப் பலதரப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தியிலும் குளோரின் சேர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தீங்குகள்

இந்நேரத்தில் குளோரினின் தீங்குகளையும் சொல்ல வேண்டும்.

காண்பதற்கு மஞ்சள்-பச்சை நிறத்தில் அழகாக இருந்தாலும், குளோரின் வாயு மிகவும் ஆபத்தானது, நச்சுத்தன்மை கொண்டது.

குளோரின் வாயு சுவாச அமைப்பு, கண்கள் மற்றும் தோலைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

முதலாம் உலகப் போரில் குளோரின், விஷ வாயு ஆயுதமாக கையாளப்பட்டது.

குளோரின் நீர்மம் தோலில் பட்டால், அங்கு எரிச்சலூட்டி புண்ணாக்குகின்றது.

குளோரின், நீரிலுள்ள சில கரிமப் பொருட்களுடன் வினை புரிந்து, புற்று நோய்க் காரணிகளான சில குளோரோ கரிமச் சேர்மங்களை உற்பத்தி செய்யும் அபாயம் இருக்கிறது.

மேலும் குளோரினால் நீரின் இயல்பான சுவை குன்றிப் போகிறது. அத்தோடு, குளோரின் வைரஸ்களை சிறப்பாக அழிப்பதில்லை.

இதுமட்டும் அல்ல, குளோரின் வாயு எரியக்கூடிய பொருட்களுடன் எளிதில் வினைபுரியும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், அதிக வெப்பநிலையில் குளோரின் இரும்புடன் வினைபட்டு குளோரின்-இரும்பு நெருப்பை உருவாக்குகிறது.

குளோரின்-இரும்பு நெருப்பு இரசாயன ஆலைகளில், குறிப்பாக குளோரின் வாயுவைக் எஃகு குழாய்களின் மூலம் கொண்டு செல்லப்படும் ஆலைகளில் விபத்து காரணியாக விளங்குகிறது.

நன்மைகளோடு, குளோரின் வாயுவின் தீமைகளையும் சொல்லி உங்களை அச்சுறுத்துவதாக எண்ண வேண்டாம்.

நன்மைகள் பற்றி கவலை இல்லை. ஏனினின் நன்மைகள் எல்லாம் நன்மைகள் தானே!

குளோரினின் தீங்குகளை பற்றி அறிந்துக் கொண்டால் தானே அதனை தவிர்க்கும் வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த முடியும்?

சரி மனிதர்களே. எல்லாவற்றையும் அறிந்துக் கொள்ளுங்கள், ஆனால் நன்மைகளை மட்டுமே செய்யுங்கள். என்ன சரிதானே?

மற்றொரு நாள் வருகிறேன். இப்பொழுது நன்றி கூறி விடைபெருகிறேன்.

வணக்கம்.″

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.