குழிப்பணியாரம் செய்வது எப்படி?

குழிப்பணியாரம் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயார் செய்யப்படுகிறது. இது சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகிறது. இனிப்புக் குழிப்பணியாரமே பொதுவாக குழிப்பணியாரம் என்றழைக்கப்படுகிறது.

இனிப்புக் குழிப்பணியாரம் என்பது ஒரு பாரம்பரியமான உணவு வகையாகும். நமது தாத்தா பாட்டி காலத்தில் இருந்த ஒரு சில இனிப்புப் பதார்த்தங்களில் இதுவும் ஒன்று.

இன்று நாகரிகமான உலகில் மறக்கப்பட்ட உணவுப் பொருள் என்பதும் உண்மை. பொதுவாக கெடுதி மிகுந்த‌ சீனியை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். சத்து மிகுந்த கருப்பட்டியைத் தூக்கி எறிந்து விட்டோம்.

இளைய தலைமுறைக்குக் கருப்பட்டியை அறிமுகம் செய்து வைக்க வேண்டியது நமது கடமை.

இனிப்புக் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 200 கிராம்

புழுங்கல் அரிசி – 200 கிராம்

உளுந்தம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி

வெந்தயம் – ½ மேஜைக்கண்டி

கருப்பட்டி – 200 கிராம்

ஏலக்காய் – 2 அல்லது 3 எண்ணம்

நல்ல எண்ணெய் – சிறிதளவு

 

செய்முறை

முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

குழிப்பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்
குழிப்பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்

 

பின் அதனை கிரைண்டரில் இட்டு இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவும். பின் அதனை சுமார் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

அரைத்த மாவு
அரைத்த மாவு

 

கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு அடிக் கனமான பாத்திரத்தில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியைப் போட்டு சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.

கருப்பட்டிப் பாகு தயாரிக்கும்போது
கருப்பட்டிப் பாகு தயாரிக்கும்போது

 

கருப்பட்டி முழுவதும் கரைந்து கரைசலானதும் அடுப்பில் இருந்து இறக்கவும். பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

கருப்பட்டிப் பாகுவை வடிகட்டும்போது
கருப்பட்டிப் பாகுவை வடிகட்டும்போது

 

வடிகட்டிய கருப்பட்டிக் கரைசலை ஆட்டிப் புளிக்க வைத்துள்ள மாவில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் ஏலக்காயைத் தூளைச் சேர்க்கவும். பணியாரத்திற்கு மாவு தயார்.

கருப்பட்டிப் பாகுவை மாவுடன் கலக்கும்போது
கருப்பட்டிப் பாகுவை மாவுடன் கலக்கும்போது

 

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சூடேறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும். பின் குழியின் முக்கால் பாகத்திற்கு மாவினை ஊற்றவும்.

குழிப்பணியாரம் வேகும்போது
குழிப்பணியாரம் வேகும்போது

 

மாவானது ஓரங்களில் வெந்தவுடன் குச்சியைக் கொண்டு திருப்பிப் போடவும். பின்புறமும் வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து விடவும். சுவையான குழிப்பணியாரம் தயார்.

சுவையான குழிப்பணியாரம்
சுவையான குழிப்பணியாரம்

 

இதனை குழந்தைகள் விரும்பி உண்பர். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தின்பண்டமாகவும் இதனைக் கொடுத்து விடலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேங்காய் துருவலை மாவுடன் கலந்தும் பணியாரம் தயார் செய்யலாம்.

மாவில் கருப்பட்டி சேர்ப்பதால் பணியாரங்கள் எளிதில் கருகும். எனவே மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.