கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நமது அணணன் ‍‍‍‍‍‍‍‍___________ அவர்கள்.

எனவே நமது அண்ணனுக்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் _________ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.

ஒரு வாரமாக‌ எந்நேரமும் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

முப்பொழுதும் காதில் பாலும் தேனும் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

வடையை வாயில் வைத்திருந்த காகத்தை நரி பாட்டுப் பாட சொன்ன கதை என் மனதில் தோன்றுகிறது.

 

உள்ளாட்சி தேர்தல் எங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் முழு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கட்சிகள் மட்டுமல்ல சுயேச்சை வேட்பாளர்களும் ஒலி பெருக்கிகள் மூலம் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்லவர்

வல்லவர்

பண்பாளர்

பெரியோர்களை மதிக்கத் தெரிந்தவர்

இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர்

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்

என்று சொல்லி வேட்பாளரை அறிமுகம் செய்கிறார்கள்.

 

எத்தனை நல்லவர்கள் மக்களுக்கு சேவை செய்யப் போட்டி போடுகின்றார்கள்?

நினைத்தாலே இனிக்கிறதல்லவா?

 

அவர்கள் எப்படி சேவை செய்யப் போகின்றார்களாம்?

மக்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பார்களாம்.

சாலைகளை சீர்படுத்துவார்களாம்.

பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வருவார்களாம்.

இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் வசதி செய்து தருவார்களாம்.

தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் பெண்களுக்கு உதவி செய்வார்களாம்.

முதியோர் பென்சன் எளிதில் பெற்றுத் தருவார்களாம்.

இன்னும் அந்த ஊருக்குத் தேவையான பல‌ சிறப்பான திட்டங்களையும் நிறைவேற்றுவார்களாம். .

எல்லா வேட்பாளர்களும் மக்கள் நலத் திட்டங்களை அள்ளி வீசுகின்றார்கள்.

அவர்களில் வெற்றி பெறுபவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்பவராக இருக்கட்டும்.

 

நமது நாட்டின் மக்களாட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கியமானவை. ஏனெனில் அவைதான் பொது மக்களுக்கு நெருக்கமானவை.

உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்தான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்.

கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடக்கும் போது மக்கள், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கூடித் தங்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தங்களின் அடிப்படை பிரச்சினைகளான குடி நீர், கிராம சாலைகள், நீர் நிலை பராமரிப்பு போன்றவற்றை அவர்களின் உதவி கொண்டுதான் தீர்க்க முடியும்.

அந்த ஊரின் கூட்டுறவு வங்கிகளை அவர்கள்தான் நிர்வாகம் செய்ய முற்படுவார்கள்.

உள்ளாட்சி உறுப்பினர்களுக்கும் தங்கள் பகுதி மக்களின் பிரச்சினைகள் நன்கு புரியும். தங்கள் பகுதி மக்களின் குணங்களுக்கும் அவர்களுக்குத் தெரியும். எனவே பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எட்டுவது எளிது.

 

நல்லவர், வல்லவர்  என்று ஒரு ஊராட்சி தலைவர் அமைந்தால் உண்மையிலேயே ஒரு நல்ல மாற்றத்தை அவரால் கொண்டு வர முடியும்.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் இந்தியாவும் ஒன்று. அவ்விதம் தமிழ் நாட்டை மாற்றியதில் முக்கியமானவர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேர்வதில் அவர்களின் பங்கு மிக அதிகம்.

தங்களுக்கான அரசு திட்டத்தின் பயன்களை உரிமையுடன் கோரிப் பெற வேண்டும் என்ற எண்ணமுடைய மக்களும், அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் என்ற உள்ளாட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருந்தால் நமது கிராமங்கள் எல்லாம் வளம் பெறும்; நலம் பெறும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.