கேரட் சப்பாத்தி செய்வது எப்படி?

கேரட் சப்பாத்தி அசத்தலான சைடிஷ் ஏதும் தேவையில்லாத சிற்றுண்டி. இச்சப்பாத்தியை தயார் செய்ய மசாலாப் பொருட்கள் சேர்க்க‌ப்படுவதால் தனியாக இதற்கென்று தொட்டுக்கறி ஏதும் தேவையில்லை.

இதனை பயணங்களின் போது தயார் செய்து கொண்டு செல்லலாம். சுவை மிகுந்த இது ஆரோக்கியமானதும் கூட. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட இதனை விரும்பி உண்பர்.

இனி எளிதான வழியில் சுவையான கேரட் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு ‍ – 1 & 1/2 கப் (10 சப்பாத்திகள் திரட்டலாம்)

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெய் – சப்பாத்தி சுடுவதற்கு தேவையான அளவு

ஸ்டஃப்பிங் செய்ய

கேரட் – 2 எண்ணம் (பெரியது)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)

இஞ்சி – சுண்டுவிரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

மல்லி இலை – 3 கொத்து

மஞ்சள் பொடி – 3 டீஸ்பூன்

மிளகுப் பொடி – 3 டீஸ்பூன்

சீரகப் பொடி – 3 டீஸ்பூன்

கேரட் சப்பாத்தி செய்முறை

கோதுமை மாவுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இத்துடன் தண்ணீர் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒருசேரத் திரட்டவும்.

நன்கு ஒருசேரத் திரட்டியதும் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உருண்டையாகத் திரட்டவும்.

கேரட்டை கழுவி துடைத்து துருவியில் மெல்லிதாகத் துருவிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி துருவியில் மெல்லிதாகத் துருவிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஒருசேர கிளறிக் கொள்ளவும்.

எல்லாப் பொருட்களையும் சேர்த்ததும்
நன்கு கலந்ததும்

திரட்டிய கோதுமை மாவினை படத்தில் உள்ளவாறு சிறிய உருண்டைகளாகத் திரட்டிக் கொள்ளவும்.

சிறு உருண்டைகளாகத் திரட்டியதும்

சிறு உருண்டையை கோதுமை மாவில் தோய்த்து வெளிப்புறம் மெலியதாகவும், நடுவில் சற்று தடிமனாகவும் இருக்குமாறு லேசாக விரிக்கவும்.

லேசாக விரித்ததும்

அதில் கேரட் கலவையை நடுவில் வைக்கவும். சுற்றியுள்ள மாவினை லேசாக மடித்து மூடி உருண்டையாக உருட்டவும்.

கேரட் கலவையை நடுவில் வைத்ததும்
மூடியதும்

இவ்வுருண்டையின் மீது கோதுமை மாவினைத் தூவி மெதுவாக சப்பாத்தியாக விரிக்கவும்.

சப்பாத்தியாக விரித்ததும்

சப்பாத்திக் கல்லினை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் திரட்டிய சப்பாத்தியைச் சேர்க்கவும்.

திரட்டியதைச் சேர்த்ததும்

கடலை எண்ணெயை சப்பாத்தியைச் சுற்றிலும் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போடவும்.

எண்ணெய் ஊற்றியதும்

மறுபுறம் வெந்ததும் எடுத்து விடவும்.

திருப்பிப் போட்டதும்

சுவையான கேரட் சப்பாத்தி தயார்.

இதனை அப்படியே உண்ணலாம் அல்லது தயிர் வெங்காயத்துடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகுப் பொடிக்குப் பதிலாக‌ பச்சை மிளகாயை பொடியாக வெட்டி ஸ்டஃப்பிங் கேரட் கலவையில் சேர்க்கலாம்.

சப்பாத்திக்கு மாவு திரட்டும்போது மிளகாய் வற்றல் பொடி, சீரகப் பொடி சேர்த்து திரட்டலாம்.

விருப்பமுள்ளவர்கள் குடை மிளகாயைத் துருவி, கேரட் ஸ்டஃப்பிங் கலவையில் சேர்க்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.