கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா? என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் உள்ளது. அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ள, இரண்டு அறிவியல் அறிஞர்களின் உரையாடல் மூலம் நமக்குக் கிடைக்கின்றது.

 

“என்ன வேதிவாசன் சார், கொசு கடிக்குதா?”

(தனது வலது கையால் இடப்பக்க தோள்பட்டை பகுதியில் கடித்த கொசுவை அடித்த படியே)  “ஆமாங்க…. கணிதநேசன் சார்! கொசு நல்லா கடிக்குது!”

“கொசுவுக்கு எப்படி தான் தெரியிதோ? தெரியல! மனுச‌ங்கள தேடி கண்டுபிடிச்சு இப்படி கடிக்குதே!”

கொசு கடிப்பது ஏன்?

“உம்ம்…. இதுக்கு காரணம் இருக்கு, கணி.”

“அப்படியா!! என்ன காரணம்? சொல்லுங்களேன்”

“காரணம் ’வேதிப்பொருள்’ தான்”

“ஓஓ……”

“ஆமாம்… ’1-ஆக்டீன்–3-ஆல்’ ன்னு ஒரு வேதிச் சேர்மம் இருக்கு. இது பொதுவா மனித வியர்வை மூலமா வெளிப்படும். கொசுவுக்கு 1-ஆக்டீன்–3-ஆல் சேர்மத்தை உணரும் திறன் இருக்கர்தால, சுலபமா மனுச‌ங்கள கண்டுபிடிச்சுடுது!  கணி.”

“உம்ம்… சுவாரஸ்யமா தான் இருக்கு…”

“அதுமட்டும் இல்ல… நம்ம உடம்புல இருந்து வெளிப்படும் கரியமில வாயு, ஈரப்பதம், வெப்பம் முதலியனவற்றை உணர்வதாலயும், நம்மள‌ சுலபமா கொசு கண்டுப்பிடிச்சிடுது!”

 

“ஓஓ…… சரி… கொசு கடிப்பது ஏன் அப்படின்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன்.”

“கொசு கடிக்காம இருக்க ஏதோ மருந்தெல்லாம் உடம்புல பூசிக்கிறாங்களே! அது பற்றி சொல்ல முடியுமா?”

“உம்ம்….. பொதுவா கொசுவிரட்டு மருந்துல (mosquito repellent) டைஎத்தில் மெட்டா டொலுமைடு (diethyl metatoluamide), மெந்தோ கிளைகால் (mentho glycol), பிக்காரிதின் (picaridin) அல்லது டைமெத்தில் தாலேட் (dimethyl phthalate) போன்ற ஏதேனும் ஒரு வேதிச்சேர்மம் இருக்குது.

கொசுக்களுக்கு இந்த வேதிசேர்மத்தோடு வாடை அரவே பிடிக்காதாம். அதனால தான், கொசுவிரட்டி மருந்தை உடலிலோ அல்லது ஆடையிலோ பூசிக்கிறப்போ, கொசுக்கள் அவங்ககிட்ட அண்டுவதில்ல.”

“நல்லது வேதி. நீங்க இப்ப சொன்னது எல்லாம் செயற்கை கொசுவிரட்டி தானே?”

“ஆமாங்க…”

“அப்ப இயற்கை கொசுவிரட்டி இருக்கா? அது பற்றியும் சொல்லுங்களேன்.”

“தாராளமா…. உலக நாடுகள்ள வெவ்வேறு இயற்கை பொருட்கள கொசுவிரட்டி மருந்தா பயன்படுத்துறாங்க.உதாரணத்திற்கு சொல்லனும்னா,

லவங்கப் பட்டை (Clove), மிளகுக் கீரை (peppermint), எலுமிச்சைப் புல் (Lemongrass), திருநீற்றுப்பச்சை (Basil), வேம்பு (Neem), யூகலிப்டஸ், தைம் (Thyme) போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை, கொசுவிரட்டி மருந்தா பயன்படுத்துறாங்க.”

கொசுக்கடி தடுப்பு

“ஓஓ…. அப்படியா… நல்ல தகவல் தான் தந்திருக்கீங்க வேதி.”

“கணி…. சமீபத்துல ‘கொசுக்கடி தடுப்பு’ சார்ந்த ஒரு கண்டுபிடிப்பையும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்காங்க! அத சொல்லட்டுமா?”

“சொல்லுங்க வேதி.. “

“கணி… ஒடுக்கப்பட்ட கிராஃபின் ஆக்சைடு (reduced graphene oxide) -ன்னு ஒரு கார்பன் வேதிப்பொருள் இருக்கு.”

“அ அ… கார்பன் –ன்னா, பென்சில்ல இருக்குமே அந்த கிராஃபைட்டு தானே?”

“ஆமாம் கணி… சரியா சொன்னீங்க. நான் சொல்ற ஒடுக்கப்பட்ட கிராஃபின் ஆக்சைடும் கார்பனோடு மற்றொரு வடிவம் தான். விஞ்ஞானிகள் என்ன பண்ணாங்கனா, முதல்ல ஒடுக்கப்பட்ட கிராஃபின் ஆக்சைடு நானோ வேதிப்பொருள துணிமேல ஒருமெல்லிய படலமாக்கினாங்க.

பின்னர் கொசுக்கள விட்டு அந்த துணிய கடிக்க வச்சாங்க. ஆய்வில என்ன தெரிஞ்சதுன்னா, கொசுக்களால ஒடுக்கப்பட்ட கிராஃபின் ஆக்சைடு துணிய கடிக்க முடியல.

இதுக்கு காரணம் ஒடுக்கப்பட்ட கிராஃபின் ஆக்சைடின் அதீத இயந்திர வலிமை பண்பு (mechanical strength) தான்னு சொல்றாங்க. அதனால கொசுக்களால இந்த துணிய துளையிட முடியலையாம்.

அத்தோட உடம்புல இருந்து வெளிவரும் கொசுக்கள் உணரும் வேதிமூலக்கூறுகளையும் இந்த துணி வெளியிடாம தடுத்துக்குதுன்னும் சொல்றாங்க. அதனால் கொசுவால மனுச‌ங்கள சுலபமா கண்டுபிடிக்கவும் முடியாதாம்.”

“ஓஓ… அப்ப ஒடுக்கப்பட்ட கிராஃபின் ஆக்சைடு துணி பயன்படுத்துனா நம்மள‌ கொசு கடிக்காதே! இது நல்ல கண்டுபிடிப்பு தான் வேதி!”

முனைவர் ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.