கோதுமை தட்டை செய்வது எப்படி?

கோதுமை தட்டை எளிதில் செய்யக் கூடிய அருமையான நொறுக்குத் தீனி ஆகும். இதனை மொத்தமாக செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.

சுவையான இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். மாலை நேரங்களில் டீ, காப்பியுடன் இதனைச் சேர்த்து உண்ணலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகவும் இதனைக் கொடுத்து அனுப்பலாம்.

இனி எளிய முறையில் சுவையான கோதுமை தட்டை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை – ஒரு கப்

மிளகாய் வற்றல் பொடி – 2 ஸ்பூன்

சீரகப் பொடி – 1 ஸ்பூன்

மிளகுப் பொடி – 2 ஸ்பூன்

பெருங்காயப் பொடி – சிறிதளவு

ஓமம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

கோதுமை தட்டை செய்யும் முறை

கோதுமை மாவினை வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் மிளகாய் வற்றல் பொடி, மிளகுப் பொடி, சீரகப் பொடி, பெருங்காயப் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

ஓமத்தை இரு கைகளாலும் நசுக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

மாவுடன் பொடி வகைகளைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் 2 ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்க்கவும். ஏல்லாப் பொடியும், எண்ணெயும் மாவுடன் சேரும்படி நன்கு கலந்து கொள்ளவும்.

எண்ணெய் சேர்த்ததும்

பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு திரட்டிக் கொள்ளவும்.

மாவாகத் திரட்டியதும்

திரட்டிய மாவினை எலுமிச்சை அளவு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

உருண்டைகளாக்கியதும்

ஒரு சிறு உருண்டையை எடுத்து கோதுமை மாவில் பிரட்டி ¼ அங்குல தடிமனுக்கு சப்பாத்தியாக விரிக்கவும்.

மாவினை விரித்ததும்

பின்னர் விரித்த சப்பாத்தியை சிறிய பாட்டில் மூடியால் வட்டங்களாக அச்சிடவும்.

வட்டங்களாக அச்சிட்டதும்

வட்டங்களைச் சுற்றியுள்ள மாவினைத் தனியே பிரித்து எடுத்து மீண்டும் உருண்டையாக திரட்டிக் கொள்ளவும்.

முட்கரண்டியால் வட்டங்களில் படத்தில் உள்ள படி லேசாக துளையிடவும். இல்லையெனில் எண்ணெயில் பொரிக்கும் போது பூரி போல் எழும்பும்.

துளையிட்டதும்

எல்லா மாவினையும் சின்ன வட்டங்களாக்கி முட்கரண்டியால் துளையிட்டுக் கொள்ளவும்.

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் துளையிட்டப்பட்ட வட்டங்களை போட்டு பொரித்து குமிழி அடங்கியதும் எடுத்து விடவும்.

பொரிக்கும் போது

சுவையான கோதுமை தட்டை தயார்.

தட்டைகள் ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு காய்ந்த வெந்தயக் கீரையை (கஸ்தூரி மேத்தி) கைகளில் வைத்து கசக்கி மாவில் சேர்த்து தட்டை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.