சகலகலா வல்லி மாலை

சகலகலா வல்லி மாலை படித்துவிட்டு செய்யப்படும் எந்த வேலையும் சரஸ்வதி அருளால் சிறப்பாக நிறைவேறும்.

 

மாலை 1

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே!

 

மாலை 2

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே!

 

மாலை 3

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!

 

மாலை 4

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

 

மாலை 5

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே!

 

மாலை 6

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே!

 

மாலை 7

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!

 

மாலை 8

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே!

 

மாலை 9
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே!

 

மாலை 10

மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

– குமரகுருபர சுவாமிகள்

குமரகுருபர சுவாமிகள் அருளிய  சகலகலா வல்லி மாலை தினமும் படிப்பதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
சரஸ்வதியின் பரிபூரண அருள் கிட்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.