சத்தி நாயனார் – சிவனடியார்களை பழித்துப் பேசியவர்களின் நாக்கை அரிந்தவர்

சத்தி நாயனார் சிவனடியார்களை பழித்துப் பேசியவர்களின் நாக்கை அரிந்த வேளாளர்.

பண்டைய சோழ நாட்டில் வரிஞ்சையூர் என்னும் திருத்தலம் ஒன்று இருந்தது. தற்போது வரிஞ்சையூர் இரிஞ்சியூர் என்று வழங்கப்படுகிறது.

தற்போது இரிஞ்சியூர் நாகபட்டிணம் மாவட்டத்தில் தேவூரிலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ளது.

அன்றைய விரிஞ்சையூரில் வேளாண் தொழிலில் சிறந்த செல்வந்தர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் ஒருவர் சத்தி நாயனார். இவருடைய இயற்பெயர் எதுவென்று தெரியவில்லை.

அவருக்கு சிவனாரின் மீதும் அவர்தம் அடியவர் மீதும் சிறுவயதிலேயே ஈர்ப்பும் பேரன்பும் உண்டானது.

ஆதலால் அவர் சிவனாரின் திருவடித் தொண்டை தம்முடைய வாழ்க்கையின் பெரும் பயனாகக் கருதி வாழ்ந்தார்.

அவருக்கு இறையடியார்களின் மீது மிகுந்த ஈடுபாட்டின் காரணமாக அவர்களை நடமாடும் தெய்வமாகக் கருதி வழிபட்டார்.

சிவனடியார்களிடத்து உலகில் உள்ளோர் எல்லோரும் மதிப்பு வைத்து அவர்களை முறைப்படி நடத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பம் ஆகும்.

சிவனடியார்களைக் கண்டால் அவர்களை முறைப்படி எழுந்து வணங்கி உபசரிக்காதவர்களை அவர் ஐந்தறிவு கொண்ட விலங்குகளாகக் கருதினார்.

அடியவர்களை யாரேனும் இகழ்ந்தால் அவர்களை சும்மா விடாமல் தக்க தண்டனை கொடுப்பர்.

நாட்கள் செல்ல செல்ல அடியார்களை இகழ்பவர்களைக் கண்டதும் அவருடைய கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

அடியார்களை இகழ்பவர்களைக் கண்டதும் ஒரு கிடுக்கி கொண்டு, இகழ்ந்தவர்களின் நாவினை பிடித்து இழுத்து வாளால் அரியத் தொடங்கினார்.

அவரின் மிடுக்கும் உடல் வலிமையுமே இத்தகு செயலைச் செய்யக் காரணமாக இருந்தன. இத்தகு வலிய சக்தியை உடையவராக இருந்ததால்தான் அவருக்கு சத்தியார் என்ற பெயர் உண்டானது.

அடியவர்களை இகழ்பவர் யாராயினும் சத்தியார் வருகிறார் என்றால் அஞ்சி நடுங்குவர். சத்தியாரால் அடியவர்களை இகழும் செயல் குறைந்து வந்தது.

சிவனுக்கு அபசாரம் செய்வதைவிட சிவனடியார்களுக்கு அபசாரம் செய்வது பெரும் துன்பத்தை விளைவிக்கும்.

சிவனடியார்களுக்கு தீங்கு வராமல் ஏது வரினும் வரட்டும் என்று துணிந்து அடியார்களை இகழ்பவர்களை தண்டிப்பதை சத்தியார் தம்முடைய கடமையாக் கொண்டிருந்தார்.

இறுதியில் இறையருளால் வீடுபேற்றினைப் பெற்றார் சத்தி நாயனார்.

சத்தி நாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

தம்முடைய வீரத்தால் சிவனடியார்களை இகழ்ந்தவர்களின் நாக்கினை அரிந்த சத்தி நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்கழற்சத்தி விரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்‘ என்று புகழ்கிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.