சந்தனம் – மருத்துவ பயன்கள்

சந்தனம் கட்டை இலேசான துவர்ப்புச் சுவையையும், குளிர்ச்சித் தன்மையையம் கொண்டவை. சந்தனம் உடலைத் தேற்றும்; சிறு நீர் பெருக்கும்; வியர்வை உண்டாக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும்.

சந்தனம் கட்டையைத் தொடர்ந்து உபயோகித்துவர வெள்ளை படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.அறிவும் மனமகிழ்ச்சியும், உடலழகும் அதிகமாகும். சந்தனம் எண்ணெயால் உடல் சூடு, வெள்ளை படுதல் ஆகியன கட்டுபடும். 

சந்தனம் சுமாரான உயரத்துடன் கூடிய கிளைகள் எப்போதும் கீழ்நோக்கி தாழ்ந்த நிலையில் காணப்படும் மரம். சந்தனம்இலைகள் தடித்தவை. 4 முதல் 7 செமீ நீளத்தில் எதிர் எதிராக அமைந்தவை. ஆழ்ந்த பச்சை நிறமானவை. மேற்புறம் பளபளப்பாக காணப்படும்.

சந்தனம் பூக்கள் சிறியவை. பழுப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள் உருண்டையானவை. முதிர்ந்த மரங்கள் காய்ந்த நிலையில் நறுமணம் கொண்டவை.

சந்தனம் மரங்கள் தக்காண பீட பூமியின் தெற்கு பகுதிகளில் பொதுவாக வளர்கின்றன. தமிழகத்தின் மழைக்காடுகளில் தானே வளர்கின்றன. ஜவ்வாது மலைப் பகுதியில் நல்ல மணமுள்ள சந்தனம் விளைகின்றது. சந்தனம் கட்டைகள் மருந்துக் கடைகள் மற்றும் கதர் அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

சந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாக‌ இதன் கட்டையின் நிறத்தை ஒட்டி பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வகைக்கும் மருத்துவத் தன்மை ஒன்றுதான். சந்தனக் கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

1 தேக்கரண்டி சந்தனம் தூளை ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.

வெட்டை சூடு குணமாக சந்தனத்தைப் பசும்பாலில் உரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.

சந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழசாறில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு குணமாகும்.

2தேக்கரண்டி சந்தனம் தூளை, ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க இரத்த மூலம் குணமாகும்.

சந்தனம் தூள் ½ தேக்கரண்டி, ½ டம்ளரில் நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளைகளாக 50 மிலி அளவாக குடிக்க காய்ச்சல் குணமாகும்.

கண்கட்டிகள் கரைய சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச் சாற்றில் மைய அரைத்து பசைபோல செய்து கட்டிகளின் மீது பற்றுப் போட வேண்டும். இரவில் படுக்க போகும் முன்னர் இவ்வாறு செய்து கொண்டு காலையில் கழுவ வேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் என எல்லாவற்றிலும் சந்தனத்தின் தேவை இன்றியமையாதது.