சப்தகன்னியர்

சப்தகன்னியர் என்பவர் அம்பிகையின் ஏழு கன்னி வடிவத் தெய்வங்களாவர். இவர்கள் சப்த மாதாக்கள், ஏழு கன்னிமார்கள், கன்னி தெய்வங்கள், பெண் தெய்வங்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள்.

சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாக உள்ள கிராம பெண்தெய்வ வழிபாடாகும்.

சப்தகன்னியர் வழிபாடானது பழங்காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது என்பதனை கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

காளிதாசர் தனது குமார சம்பவத்தில் சப்தகன்னியர்களை சிவபெருமானின் பணிபெண்டிர் என்று குறிப்பிடுகின்றார். சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானின் திருவுலாவின்போது விநாயகர் மற்றும் வீரபுத்திரரின் காவலோடு சப்தகன்னியர்கள் நடனமாடி செல்வதாக பாடல் பாடியுள்ளார்.

சப்தகன்னியர்கள் சிவலாயங்களில் தெற்குப்பகுதிகளிலும், கிராமங்களின் ஈசானப்பகுதிகளிலும், நீர்நிலைகளின் அருகிலும், மலையடிவாரங்களிலும், காட்டுப்பகுதிகளிலும் சிலைவடிவில் காணப்படுகின்றனர்.

இவர்கள் தனித்தனியாக சிலைவடிவிலும், ஒரே கல்லில் ஏழு உருவங்கள் செதுக்கப்பட்டு ஒரே சிலையாகவும், ஏழு தனித்தனி பீடங்களாகவும், ஒரே கல்லில் ஏழு பீடங்களாகவும் அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றனர். இவர்கள் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகின்றனர்.

இவர்கள் பொதுவாக பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி என்று அழைக்கப்படுகின்றனர். சப்தகன்னியர்களுடன் வீரபத்திரரும், விநாயகரும் சேர்ந்தே கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றனர்.

இவர்களை வழிபடுவதால் வாழ்க்கையின் துயரங்கள் நீங்கி வெற்றிகரமான வளமான வாழ்வு கிடைக்கப் பெறுவதாகக் கருதப்படுகிறது.

 

சப்தகன்னியர்களின் வரலாறு

சிவபெருமான் அந்தகாசுரன் என்னும் அரக்கனுடன் போர் புரியும்போது, அரக்கனின் உடலில் இருந்து வெளியேறிய இரத்தத்தில் இருந்த ஏராளமான அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க சிவபெருமான் யோகேஸ்வரி என்னும் சக்தியை வாயிலிருந்து வெளிப்படுத்தினார்.

யோகேஸ்வரி மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினாள். இவளுக்கு உதவியாக பிரம்மா பிராம்மியையும், முருகன் கவுமாரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், வாரக மூர்த்தி வாராஹியையும், இந்திரன் இந்திராணியையும், யமன் சாமுண்டியையும் உருவாக்கினர். இவர்களே சப்தகன்னியர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.

சும்ப நிசும்பர்களை அழிக்க அம்பிகை போர்புரிந்தபோது அவளுக்கு உதவியாக சப்தகன்னியர்கள் தோன்றினர் என்றும் கூறப்படுகிறது.

மகிஷாசுரன் என்ற அரக்கன் கருவில் உருவாகாத பெண் சக்தியால் மட்டுமே அழிவு வேண்டும் என்ற வரத்தினைப் பெற்று ஆணவத்தால் உலக உயிர்களை துன்புறுத்தினான்.

அதனால் அம்பிகை தனது சக்தியாக கருவில் உருலாகாத சப்தகன்னியர்களைத் தோற்றுவித்து அவர்கள் மூலம் அரக்கனை வதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கிராமங்களில் பழங்காலத்தில் நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற பெண்கள் சுழலில் சிக்கியும், தாமரைக் கொடியில் சிக்கியும், நீர்நிலைகளில் தவறி விழுந்தும் இறந்து விடுவர். இவர்களின் நினைவாக ஏழுபெண்களை உருவமாக வைத்து வழிபடப் பெற்றவர்களே சப்தகன்னியர் என்றும் கூறப்படுகிறது.

 

பிராம்மி

இவள் பிரம்மாவின் சக்தியாக அம்பிகையின் முகத்தில் இருந்து தோன்றியவள். இவள் சாவித்திரி என்றும் போற்றப்படுகிறாள். இவள் நான்கு முகங்கள் மற்றும் நான்கு கரங்களுடன் அன்னத்தை வாகனமாகக் கொண்டவள்.

முன்னிரு கைகள் அபயவரத முத்திரையைக் கொண்டும், பின்னிரு கைகளில் கமண்டலம் ஸ்படிக மாலையைப் பெற்றும் அருள்புரிகிறாள். இவள் மஞ்சள் நிறத்தவள். ஞானத்தைத் தந்த அஞ்ஞானத்தை போக்குபவள்.

கலைகளின் அதிதேவதையான இவளை வணங்கினால் பரிபூரணமான கல்வி அறிவு கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இச்சக்தியை வழிபாடு செய்ய வேண்டும்.

 

மகேஸ்வரி

ஈசனின் சக்தி அம்சமான இவள் அம்பிகையின் தோள்களிலிருந்து தோன்றியவள். இவள் சர்வ மங்களா எனப் போற்றப்படுகிறாள். இவள் முக்கண் மற்றும் ஐந்து முகங்களைக் கொண்டு தலையில் ஜடாமுடியை தரித்திருப்பாள்.

மான், மழுவினை பின்னிரு கைகளில் கொண்டு அபய வரத முத்திரைகளை முன்னிருகைகளில் காட்டியும் அருள்புரிகிறாள். எருதினை வாகனமாகவும் கொடியாகவும் பெற்றிருப்பாள். வெந்நிற மேனியான இவ்வம்மையை வழிபட‌ கோபத்தை நீக்கி சாந்தத்தை அருளுபவள்.

தர்மத்தின் திருஉருவான இத்தேவி உழைப்பிற்கேற்ற ஊதியத்தை நல்குவாள். தன்னை வழிபடுபவர்களுக்கு பொன்னும் பொருளும் போகமும் அருளுவாள்.

 

கவுமாரி

கவுமாரன் என்றழைக்கப்படும் குமரக்கடவுளின் சக்தியான இவள் அம்பிகையின் கால்பகுதியிலிருந்து தோன்றியவள். இத்தேவி சஷ்டி, தேவசேனா, ஸ்கந்த மாதா, குமார ரூபிணி என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.

மயிலினை வாகனமாகக் கொண்ட இவ்வம்மை செந்நிறத்தவள் ஆவாள். இரதியினைப் போன்ற அழகுடையவள். தேவர்களின் சேனாதிபதியான முருகக்கடவுளின் வெற்றிக்குக் காரணமான சக்திவேலின் அம்சமாவாள்.

இவ்வம்மை பின்னிருகைகளில் வஜ்ரம், சக்தி ஆயுதங்களைக் கொண்டும், முன்னிருகைகள் அபயவரத முத்திரை காட்டியும் அருள்புரிகிறாள். சேவல் கொடியினை உடைய இவ்வம்மையை வழிபட நல்ல குழந்தைப்பேறும், அழகு நிறைந்த இளமையும், வீரமும் கிடைக்கும்.

 

வைஷ்ணவி

மகாவிஷ்ணுவின் சக்தியான இவ்வம்மை அம்பிகையின் கைகளிலிருந்து  தோன்றியவள். இத்தேவி நாராயணி என்று போற்றப்படுகிறாள். கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பாள்.

நீலநிறத் தோற்ற‌த்துடன் முன்னிரு கைகள் வரதஅபய முத்திரை காட்டியும், பின்னிருகைகளில் சங்கு, சக்கரம் கொண்டும் அருள்புரிகிறாள்.

அழகு நிறைந்த இவ்வம்மையை வழிபட மனதில் நினைக்கும் நல்லவற்றை அருளுவாள். மேலும் அழகும் திடகாத்திரமும், செல்வ வளமும் தருவாள்.

 

வராஹி

வராக மூர்த்தியின் சக்தியான இவ்வம்மை அம்பிகையின் பின்பகுதியிலிருந்து தோன்றியவள். இத்தேவி தண்டினி என்றும் போற்றப்படுகிறாள்.

வராக (பன்றி) முகத்துடன் பின்னிருகைகளில் கலப்பை, தண்டம் கொண்டும் முன்னிரு கைகளில் அபயவரத முத்திரை காட்டியும் அருளுகிறாள். சிம்மத்தினை வாகனமாகக் கொண்டு கருப்புநிற ஆடை உடுத்தி கீரிட மகுடம் தரித்து காட்சியளிப்பாள்.

இத்தேவி எதையும் அடக்க வல்ல ஆற்றலுடன் அம்பிகையின் முக்கிய மந்திரியாகவும், படைத்தலைவியாகவும் விளங்குகிறாள். மிருக பலமும், தேவ குணமும் உடைய இவ்வம்மையை வழிபட வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். மேலும் எதிரிகளை அழித்து வெற்றியைத் தருவாள். பெண்களின் கற்பினைக் காப்பாள்.

 

இந்திராணி

இந்திரனின் அம்சமான இத்தேவி அம்பிகையின் தனஸ்தானத்திலிருந்து தோன்றியவள். இத்தேவி மகேந்திரி, ஐந்திரி என்று போற்றப்படுகிறாள்.

பொன்னிற மேனியளான இவ்வம்மை யானையைக் கொடியாகவும், வாகனமாகவும் உடையவள். இத்தேவி பின்னிரு கரங்களில் சக்தி ஆயுதமும், வஞ்சிராயுதமும் கொண்டும், முன்னிரு கைகளில் அபயவரத முத்திரை காட்டியும் அருள்புரிகிறாள்.

இரத்தின கிரீடம் தரித்த இவ்வம்மையை வழிபட உயர்ந்த பதவிகள், அரச சம்பத்துக்கள், சொத்து சுகம், நல்ல வாழ்க்கைத்துணை ஆகியவற்றை அருளுவாள்.

 

சாமுண்டி

இவள் ருத்திரனின் அம்சமான இவள் ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்ரகாளியாவாள். இத்தேவி பைரவி என்றும் போற்றப்படுகிறாள். இவள் சண்டமுண்டர்களை அழித்து சாமுண்டி என்றழைக்கப்பட்டாள்.

ஒரு முகமும், நான்கு கைகளும், மூன்று நேத்திரங்களும், கோரைப் பற்களும் கொண்டு கருத்த மேனியள். இவள் மனிதர்களோடு தேவர்களுக்கும் வரங்களை அருளுவாள்.

முத்தலை சூலம், கத்தி, கபாலம், முண்டம் ஆகியவற்றை தனது கரத்தில் கொண்டு சவத்தின்மீது அமர்ந்திருப்பாள். வெற்றி தேவதையான இவளை வழிபட எதிரிகளை வெல்லும் வாய்ப்புகளை நல்குவாள். மேலும் சகல பலங்கள், சொத்துக்கள், சுகங்களைத் தருவாள். இவளை உபவாசனை செய்ய கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்.

தொன்று தொட்டு வரும் வழிபாடான சப்தகன்னியர் வழிபாட்டை நாமும் மேற்கொண்டு உன்னத வாழ்வினைப் பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.