சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி

மூன்று குண்டுகளில் உள்ள தப்புக் கடலையை எடுத்த மங்கம்மாள் பாட்டி நான்காவது குண்டிற்கு வந்தாள்.

அது வடக்கில் பக்கத்து புன்செய் நிலத்திற்கு அருகில் இருந்தது. இரண்டு புன்செய் நிலங்களும் வரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன.

பொதுவாக கடலை காட்டில் எலிகள் அதிகமாக இருக்கும். அவை வரப்புகளை ஒட்டியே பொந்துகளை (எலி வளை) அமைத்திருக்கும்.

சில எலிப்பொந்துகள் ஐந்து அடி ஆழம் வரையிலும் கூட இருக்கும்.

எலிகள் கடலைக் காட்டில் உள்ள நன்கு விளைந்த திரட்சியான கடலைகளையே சேகரித்து பொந்தில் வைத்திருக்கும்.

சில நேரங்களில் எலியையும் அதன் குட்டிகளையும் பிடிக்க பாம்புகள் பொந்துக்குள் நுழைவது உண்டு.

தப்புக் கடலை எடுப்பவர்களுக்கு இந்த விசயம் நன்கு அறிந்த ஒன்று. ஆதலால் அவர்கள் வரப்புகளில் எலிப் பொந்து இருக்கிறதா? என்பதை எப்போதும் நன்கு ஆராய்வர்.

அனுபவமும் திறமையும் மிகுந்த மங்கம்மாளுக்கும் எலிப் பொந்து பற்றியும் அதனுள் கிடைக்கும் திரட்சியான கடலை பற்றியும், சமயங்களில் எலிப் பொந்தினுள் இருக்கும் பாம்பு பற்றியும் நன்றாகவே தெரியும்.

வரப்பினை ஒட்டிய கடலைக் காட்டின் நான்காவது குண்டு பகுதிக்கு வந்ததும் மங்கம்மாள் பாட்டி வரப்பினையே முதலில் ஆராய்ந்தாள். மொத்தம் மூன்று இடங்களில் எலிப்பொந்துகள் இருப்பதை அடையாளம் கண்டாள்.

உடனே மாடசாமியை ‘ஓய், மாடசாமி, மாடசாமி’ என்று கத்தினாள்.

கடலைக் காட்டின் ஏழாவது குண்டில் நின்றிருந்த மாடசாமி ‘என்னாத்தா, என்ன?’ என்றான்.

‘ஏலே, மாடா, மம்பட்டிய (மண்வெட்டியை) எடுத்துட்டு வா. மூனு இடத்துல எலிப்பொந்து இருக்கு.’

‘இரு, பம்பு செட்டுக்குள்ள இருக்கு. எடுத்துட்டு வாரேன்.’ என்றபடி பம்பு செட்டை நோக்கி ஓடினான்.

அதற்குள் வரப்பில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை கைகளால் எடுத்து அருகிலிருந்த பொந்துக்குள் ஊற்றிப் பார்த்தாள். தண்ணீர் உள்ளே நுழைந்த சுவடே இல்லை. ‘சரி, பொந்து ஆழமாதான் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டாள்.

மாடசாமி வருகையை பார்ப்பதற்காக நிமிர்ந்தாள். அதற்குள் மாடசாமி கையில் மண்வெட்டி, மதியம் கஞ்சி கொண்டு வந்த தூக்குவாளி, பெரிய பெட்டி ஆகியவற்றை கைகளில் பிடித்தவாறு மங்கம்மாளின் முன்னே வந்து நின்றான்.

தூக்குவாளியில தண்ணீரை மோந்து (முகர்ந்து) பொந்துக்குள்ள ஊத்து. ஆழத்த பார்த்திருவோம்.’

மாடசாமியும் வரப்பில் ஓடிய தண்ணீரில் ஐந்து தூக்குவாளி தண்ணீரை முகர்ந்து ஊற்றினான்.

அப்போதுதான் தண்ணீர் பொந்திற்குள் ஊற்றிய அடையாளமாக லேசான ஈரப்பதம் பொந்தினுள் கண்கெட்டிய தூரத்தில் தெரிந்தது.

‘ஏத்தா, நான் மம்பட்டிய வைச்சு வெட்டுறேன். நீ கவனமா இரு. பாம்பு ஏதாசும் வெளியே வந்திரப்போகுது.’

‘ம்..ம்.. சரி, மம்பெட்டிய போடு. லேசா தள்ளி நின்னுகிறேன்.’ என்றாள் மங்கம்மாள் பாட்டி.

மாடசாமி மண்வெட்டியால் முதலில் பொந்தின் சுற்றுப்பகுதியை செதுக்கினான். பின்னர் பொந்தினை தோண்ட ஆரம்பித்தான்.

சுமார் இரண்டு அடி ஆழம் மற்றும் 3 அடி அகலத்தில் அந்தப் பொந்து இருந்தது. பெரிய எலி ஒன்று பொந்தினுள் இருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மண்வெட்டியை மாற்றிப் பிடித்து கனையால் ஓங்கி எலியை அடித்தான். எலி இறந்தது.

உள்ளே கடலைகள் நிறைய இருந்தன.

‘ஏய், கிழவி ஒருகடா பெட்டிக்கு கடலை இருக்கும்போல. நீ போய் சாக்க எடுத்துட்டு வா.’ என்றான்.

‘ம்..ம்..இரு.. சீக்கிரமாக வர்றேன்.’ என்றபடி சாக்கை எடுக்க ஓடினாள் மங்கம்மாள் பாட்டி.

மாடசாமி கடலையை எல்லாவற்றையும் ஒருசேர குவித்து வைத்தான்.

இதிலிருந்த ஒரு கடலையை உடைத்து வாயில் போட்டான். திரட்சியான கடலைப்பருப்புகள் வாயில் இனிப்பையும், தண்ணீர் சத்தையும் நிறைத்தன.

அதற்குள் மங்கம்மாள் பாட்டி சாக்கை எடுத்திட்டு வந்தாள்.

‘திருட்டு எலி, எப்படி நல்ல கடலையை எடுத்து திங்க வைச்சிருக்கு. கடலையைத் தின்னு கொழுத்த இதோட கறியும் நல்லாதான் இருக்கும். இன்னும் ரெண்டு பொந்து இருக்கு. குறைஞ்சது ரெண்டு எலியவாது கிடைக்கும். இன்னிக்கு எலிக்கறி விருந்த வைச்சிர வேண்டியதுதான்’ என்று மங்கம்மாளிடம் கூறினான்.

‘சரி, இப்ப கடலையை எடுத்து சாக்குல போடு.’ என்றபடி சாக்கினை விரித்துப் பிடித்தாள் பாட்டி. மாடசாமி சாக்கினுள் கடலையை அள்ளிப் போட்டான்.

அடுத்த ரெண்டு பொந்துகளையும் மாடசாமியும் மங்கம்மாள் பாட்டியும் உடைத்து உள்ளே இருந்த கடலைகளை எல்லாம் எடுத்து சாக்கில் போட்டனர். ஒரு சாக்கு முழுவதும் கடலைகள் நிரம்பி விட்டன.

சாக்கினை கட்டி தலையில் வைத்துக்கொண்டு மூன்று பெரிய எலிகளின் வாலினையும் ஒன்றாகச் சேர்த்து இடது கையில் பிடித்துக் கொண்டு மாடசாமி பம்ப்செட்டை நோக்கி நடந்தான்.

மங்கம்மாள் பாட்டி கடலைச் செடி பிடுங்கியிருந்த இடத்தில் தப்புக் கடலையை தேடலானாள்.

சூரியன் மேற்கே சென்றதால் வெளிச்சம் குறையத் தொடங்கியது. கடலைக் காட்டிற்கு வேலை செய்ய வந்தவர்கள் பம்ப் செட்டில் கை,கால்,முகம் கழுவி வீடு செல்ல ஆயத்தமானார்கள்.

மாடசாமி கடலையை மூடைகளாக்கி பம்ப் செட்டிற்கு அருகே அடுக்கி வைத்திருந்தான்.

‘அம்மா, நல்ல விளைச்சல். இன்னைக்கு இருபது மூடை வந்திருக்கு. நான் இங்கேயே காவலுக்கு இருக்கேன். நாளைக்கு டிராக்டர வரச்சொல்லி மூடைகளை ஏத்தி கொண்டுபோயிரலாம்’ என்றான்.

‘சரி, பாதுகாப்பா இருப்பா, நாளைக்கு காலைலில வாரோம்.’ என்று தனம் கூற எல்லோரும் புறப்பட்டனர்.

‘எலிப் பொந்துக்குள்ள ஒருமூடை கடலைய இன்னின்கு எடுத்திட்டோம்மா.’ என்றாள் மங்கம்மாள் பாட்டி.

‘ம்..ம்.. மாடசாமி சொன்னான்.’ என்றாள் தனம்.

‘ஏய், கிழவி வீடுக்கு போகையில சாம்பாருக்கு காசு கொடுத்தத சொல்லுறேன்னு சொன்னியே. என்னது அது?’

‘அதுவா, நாங்க பழனிக்குப் போனப்ப நடந்த கதை அது.

கல்யாணம் ஆன புசுதுல எங்க மதினி, அதேன் எங்க வீட்டுக்காருகூடப் புறந்தவுக. அவகளோட பழனிக்கு போனோம். எங்க மதினி, எங்க அண்ணன், எங்க வீட்டுக்காரரு, நான் நாலுபேரும் பழனிக்குப் போனோம்.

மதியம் ஒன்ரைக்காருக்கு இங்க இருந்து கிளம்பி மதுரைக்குப் போயி, அங்கயிருந்து பழனிக்குப் போனோம்.

பழனில காலையில குளிச்சு முடிச்சு சாமி கும்பிட்டுட்டு கொண்டு போயிருந்த கட்டுச் சாப்பாட்ட சாப்பிட்டோம். மறுநாள் காலையில ஊருக்கு கிளம்புறதா இருந்திச்சு.

காலையில சாப்பிட கட்டுச் சாப்பாடு இல்ல. அதனால ஓட்டலுக்கு சாப்பிட போனோம். நான் அதுக்கு முன்னாடி ஓட்டல்ல சாப்பிட்டது கிடையாது.

அப்பதான் முதன்முறையா ஓட்டலுக்குப் போறேன். எங்க வீட்டுக்காரரு கிட்ட ‘ஓட்டல்ல என்ன சாப்பிடனும்முன்னு?’ கேட்டேன்.

‘இட்லி, தோசை, பூரி எல்லாம் இருக்கும். ஏது வேணும்னாலும் வாங்கி சாப்பிடு.’ அப்பிடின்னுட்டார்.

‘சரி, இட்லி, தோசைக்கு என்ன கொடுப்பாக?’ன்னு கேட்டேன்.

‘சாம்பார் சட்னி; பூரிக்கு கிழங்கு. ஆனா இட்லி, தோசை, பூரிக்கு மட்டும்தான் காசு’ன்னு வீட்டுக்காரரு சொன்னார்.

உடனே மதினி கிட்ட ‘ஓட்டல்ல இட்லி, தோசை, பூரிக்குத்தான் காசாம். சட்னி, சாம்பாருக்கு எல்லாம் காசு கிடையாதாமே?’ன்னு கேட்டேன்.

‘தெரியல. நானும் இப்பதான் ஓட்டலுக்கு முதல வர்றேன். உங்கிட்ட சட்னி, சாம்பாருக்கு காசு கிடையாதுன்னு சொன்னது யாரு?’ன்னு கேட்டாக.

‘ஒங்க தம்பிதான்.’

‘தம்பி சொன்னா சரியாதான் இருக்கும்.’

‘நம்ம ரெண்டு பேரும் ரெண்டு இட்லி மட்டும் வாங்கிட்டு சட்னி, சாம்பாரச் சாப்பிட்டு வயித்த நிரப்பிடுவோம்.’ன்னு மதினி சொன்னாக.

நானும் ‘சரி’ன்னுட்டேன்.

ஓட்டல்ல போயி உக்காந்ததும் நானும் மதினியும் ஆளுக்கு ரெண்டு இட்லிய வாங்கிட்டோம்.

ஒரு குண்டான்ல சட்னியும், ஒரு குண்டான்ல சாம்பாரும் கொண்டாந்து வைச்சாக.

நாங்க ரெண்டு பேரும் இட்லிய கொஞ்சமா பிச்சி சட்னிலையும், சாம்பார்லையும் கரைச்சி கரைச்சி சாப்பிட்டோம். இட்லி காலியானதும் சட்னியையும், சாம்பாரையும் ஊற்றி ஊற்றி குடித்தோம்.

எங்க அண்ணன் ‘என்ன மங்கம்மா, சட்னியும் சாம்பாரும் உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பிடிச்சிருக்கா? இப்படி குடிக்கீக. வேணும்னா இன்னும் ரெண்டு இட்லி வாங்கி சாப்பிட‌ வேண்டியதுதான’ன்னு சொன்னார்.

‘அதெல்லாம் வேணாம். இதுவே நல்லா இருக்குன்னு’ன்னு சொன்னேன்.

ஒரு குண்டான் சட்னியும் ஒரு குண்டான் சாம்பாரையும் காலி பண்ணிட்டோம்.

எங்க அண்ணனும் என் வீட்டுக்காரரும் ஆளுக்கு அஞ்சு இட்லியும், நாலு பூரியும் சாப்பிட்டிருந்தாக.

கடைக்காரர் வந்து ‘ஐஞ்சு ரூபா கொடுங்கன்னு’ சொன்னாரு.

எங்க வீட்டுகாரரு முழிச்சார். ‘ஊர்ல்ல இருந்து இங்க வந்து ஒருநாள் தங்கி செலவு செஞ்சதே நாலு ரூபாதான். நீங்க என்ன ஒருவேளை சாப்பாட்டுக்கு ஐஞ்சு ரூபாய கேட்கீக’ என்றார்.

‘நாங்க இன்னிக்கு தயார் பண்ணின சட்னி, சாம்பார்ல பாதிக்கும் மேல நீங்க சாப்பிட்டுட்டீங்க. இனிமே சட்னியும் சாம்பாரும் தயார் செய்ய முடியாது. இருக்குற சட்னிக்கும், சாம்பாருக்கும் மட்டும் இட்லியையும், தோசையையும் சுட்டு விக்க வேண்டியது தான்.’ சொன்னாரு.

எங்க வீட்டுக்காரரு ஒன்னும் சொல்லாம எங்க ரெண்டு பேரையும் பார்த்து முறைச்சாரு. ஐஞ்சு ரூபாய எடுத்து ஓட்டல்காரகிட்ட கொடுத்திட்டு அவர் வெளியேற மற்ற மூனு பேரும் அவர் பின்னாடியே வந்தோம்.

‘எதுக்கு இப்படி செஞ்சீங்க?’ன்னு கேட்டாரு என் வீட்டுக்காரரு.

‘நீ தான் மங்கம்மாகிட்ட சொன்னீயாம், இட்லி, தோசை, பூரிக்கு மட்டும் காசு. சட்னி, சாம்பாருக்கு கிடையாது’ன்னு. எங்க மதினி சொன்னாக.

‘எல்லாம் உன்னோட வேலைதானா’ அப்படீன்னு தலையில அடிச்சி கிட்டாரு.
நாங்க சாப்பிட்ட சாம்பாரும் சட்னியும் வயித்த கலக்க, எங்கள அன்னிக்கு காலையில ஊருக்கு கிளம்ப விடாம தடுத்திருச்சு.

டாக்கடருக் கிட்ட போயி ரெண்டு பேருக்கும் ஊசி போட்டு ஓய்வு எடுத்து அன்னைக்கு சாய்ந்தரம்தான் ஊருக்கு கிளம்பினோம்.

அப்ப நடந்தத நினைச்சா இப்பயும் எனக்கு சிரிப்பு வருது.’ என்று பாட்டி சொல்ல அம்மையப்புரம் வந்தது.

‘சரி, நாளைக்கு காலையில பார்ப்போம். நாளைக்கு காலையில காட்டுக்குப் போகையில நான் வச்ச வெண்டைக்காய் குழம்பு பத்திச் சொல்றேன்.’ன்னு பாட்டி சொல்லி விடைபெற்றாள்.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

One Reply to “சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.