சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!

தெரியுதா கரிசலின் வீரம் – தீயெனத்
தகிக்கும் வெயிலினைத் தாங்கும்
எரிகின்ற ஆதவன் விரலும் – எம்முடன்
இணைந்து விளையாடிடும் காலம்

பதனியும் நுங்கும் கொடுத்து – நெட்டைப்
பனைமரம் தாகம் தீர்க்கும்
புதிதென வெள்ளரி காய்க்கும்
பழமோ பொன்னென மின்னிடக் கிடக்கும்

தெருவெல்லாம் கூழ்மணம் கமழும் – ஊர்
திரண்டிட ஒற்றுமை நிலைக்கும்
கருத்த மேகமும் சிரிக்கும்
கோடை காலத்தின் மழையினைக் கொடுக்கும்

நெருப்பென பூமியும் தகிக்கும் – எமக்கு
நெற்றி வியர்வையோ ஆறாய்ப் பெருகும்
பருத்த வேங்கையும் சிலிர்க்கும் – மெல்லிய
பசுங்காற்றால் உடலினைத் துடைக்கும்

சிறப்புகள் இத்தனை சுமக்கும் இந்த
சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!
உறவென அவளை நினைப்போம்! – நோயில்லா
உலகினைக் கண்டு மகிழ்வோம்!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.