சத்துக்கள் நிறைந்த சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும்.

இக்காயானது தமிழ்நாட்டில் வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

இக்காயின் தனிப்பட்ட சுவையின் காரணமாக சமையலில் இது முக்கிய இடத்தினைப் பெறுகிறது.

சின்ன வெங்காயமானது லேசான இனிப்பு கலந்த கார சுவையினைப் பெற்றுள்ளது.

இதனை வெட்டும்போது கண்ணில் நீர் வரவழைக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.

சின்ன வெங்காயம் மற்றும் அதனுடைய தாள்கள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இக்காயானது மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் நன்கு பயிராகிறது. வடிகால் அமைப்புடைய மிதமான வளமுடைய மண்ணில் இது நன்கு செழித்து வளருகிறது.

சின்ன வெங்காயம் என்பது தரையின்கீழ் வளரக்கூடிய சதைப்பற்று மிக்க தண்டுப்பகுதியாகும்.

 

சின்ன வெங்காய விதைகள்
சின்ன வெங்காய விதைகள்

 

தரைக்குக் கீழ் இருக்கும் தண்டுப் பகுதி
தரைக்குக் கீழ் இருக்கும் தண்டுப் பகுதி

 

இது செடிவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இத்தாவர இலைகள் மூடிய உருளை வடிவில் முனைப்பகுதி கூர்மையாகவும், நடுப்பகுதி வெற்றிடமாகவும் காணப்படுகிறது.

 

தோட்டத்தில் வெங்காயச் செடிகள்
தோட்டத்தில் வெங்காயச் செடிகள்

 

இச்செடியானது கருஊதா நிறங்களில் பூவினைப் பூக்கிறது. சின்ன வெங்காயமானது வேர்ப்பகுதியில் கொத்தாக காணப்படுகிறது.

 

சின்ன‌ வெங்காயப் பூக்கள்
சின்ன‌ வெங்காயப் பூக்கள்

 

சின்ன வெங்காயம் - முழுத்தாவரம்
சின்ன வெங்காயம் – முழுத்தாவரம்

 

இக்காயின் வெளித்தோலானது ரோஜா சிவப்பு முதல் தங்க பழுப்பு நிறம் வரை காணப்படுகிறது. இதன் உட்புறம் வெள்ளை முதல் வெளிர் பச்சை வரை காணப்படுகிறது.

உரித்த‌ சின்ன வெங்காயம்
உரித்த‌ சின்ன வெங்காயம்

 

இது அல்லியேசியே என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் அல்லியம் சீபா என்பதாகும். பூண்டு, பல்லாரி வெங்காயம் ஆகியோர் இதன் உறவினர்கள் ஆவர்.

 

சின்ன வெங்காயத்தின் வரலாறு

சின்ன வெங்காயத்தின் தாயகம்; தென்கிழக்கு ஆசியா ஆகும். அங்கிருந்து இக்காய் இந்தியாவை அடைந்து இங்கு பிரபலமாகியது.

பின் இந்தியாவிலிருந்து மத்திய தரைக்கடல் நாடுகள் வழியாக உலகெங்கும் பரவியது. தற்பொழுது உலகெங்கும் இது பயிர் செய்யப்படுகிறது.

1000 ஆண்டுகளுக்கு முன்பே சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்டதாக கிரேக்க இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சின்ன வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சின்ன வெங்காயத்தில் விட்டமின் ஏ, பி6(பைரிடாக்ஸின்), சி ஆகியவை அதிகளவு உள்ளன. விட்டமின்கள் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன.

இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, தாமிரச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம், செலீனியம், துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.

கார்போஹைட்ரேட், புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றையும் இக்காய் பெற்றிருக்கிறது.

 

சின்ன வெங்காயத்தின் மருத்துவப் பண்புகள்

புற்றுநோயைத் தடுக்க

சின்ன வெங்காயத்தில் க்யூயர்சிடின், கெம்ஃபெரோல், கந்தக சேர்மங்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் காணப்படுகின்றன.

இந்த ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சின்ன வெங்காயத்தை வெட்டும்போதும், நசுக்கும்போதும் மேற்புறத்தோலிருந்து வெளியிடப்படுகின்றன.

இந்த ஆன்டிஆக்ஸிஜென்டுகள் வெளியிடப்படும்போது அலிசின் என்ற வேதிச் சேர்மமாக மாற்றம் அடைகின்றன.

அலிசின் புற்றுச்செல்கள் உருவாக்கத்தைத் தடைசெய்கின்றது. நுரையீரல், வாய்ப்பகுதி, வயிறு, மார்பகம், பெருங்குடல் போன்ற உடல்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயைச் சின்ன வெங்காயம் தடுப்பதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.

சீரான இரத்த ஓட்டம் மற்றும் உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கு
சின்ன வெங்காயமானது அதிகளவு இரும்புச்சத்து, செம்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.

இரும்புச்சத்து மற்றும் செம்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து சீரான இரத்த ஓட்டம் நடக்க வழிவகை செய்கிறது.

சீரான இரத்த ஓட்டத்தின் காரணமாக உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் அதிகளவு செல்லப்படுகிறது.

இதனால் சீரான செல் வளர்ச்சி, காயங்கள் சீக்கிரம் ஆறும் தன்மை, சீரான வளர்ச்சிதை மாற்றம், அதிக ஆற்றல் ஆகியவை உடலுக்கு கிடைக்கப் பெறுகின்றன.

 

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து இதய நலத்தைப் பேண

சின்ன வெங்காயத்தின் மேற்பரப்பு சிதைவடையச் செய்யும் போது வெளியாகும் ஆன்டிஆக்ஜிஜென்டுகள் அலிசின் என்ற வேதிச் சேர்மம் உண்டாகிறது.

இந்த அலிசின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரலில் சுரக்கும் கொழுப்பு உற்பத்தியினை கட்டுப்படுத்தும், ரிடக்டேஸ் என்ற நொதியினை அலிசின் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.

உடலின் மொத்த கொழுப்பினைக் குறைப்பதால் மாரடைப்பு, பக்கவாதம், இதயநோய்கள், சிறுநீர்ப்பை அழற்சி நோய் ஆகியவை ஏற்படாமல் சின்ன வெங்காயமானது நம்மைப் பாதுகாக்கிறது.

 

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க

சின்ன வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் அலிசின் சேர்மம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொட்டாசியம் இரத்த குழாய்களின் விறைப்புத்தன்மையைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்கிறது.

இதனால் இதயத்திற்கான நரம்புகளில் இரத்தம் உறைவது, இரத்த அழுத்தம் ஆகியவைத் தடைசெய்யப்படுவதோடு இதயநலம் காக்கப்படுகிறது.

வெங்காயத்தில் உள்ள அலிசின் சேர்மம் நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிட்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

எனவே சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த

சின்ன வெங்காயத்தில் காணப்படும் பைட்டோ நியூட்ரியன்களான அலியம் மற்றும் அல்லைல்-டை-சல்பைடு சேர்மங்கள் சர்க்கரைநோயை தடுக்கும் பண்பினைப் பெற்றுள்ளன.

அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே சின்ன வெங்காயத்தை உண்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தலாம்.

 

மூளை மற்றும் நரம்பு நலத்தினைப் பேண

சின்ன வெங்காயத்தில் உள்ள பி6 (பைரிடாக்ஸின்) விட்டமின் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளை சரியான அளவில் வைக்கவும், மனஅழுத்தத்தைக் குறைக்கவும் மூளையினை தூண்டுகிறது.

மேலும் இக்காயில் உள்ள ஃபோலேட்டுகள் மூளையின் மூலம் ஹார்மோன் மற்றும் என்சைம்களை கட்டுப்படுத்தி மனஅமைதியைக் கொடுக்கிறது.

எனவே சின்ன வெங்காயத்தை உண்டு மூளை மற்றும் நரம்பு நலத்தைப் பேணுவதோடு மனஅமைதியையும் பெறலாம்.

 

சின்ன வெங்காயத்தை வாங்கும் முறை

சின்ன வெங்காயத்தை வாங்கும்போது தெளிவான, திரட்சியான, ஒரே அளவிலான சீரான நிறத்துடன் ஈரப்பதமில்லாதவற்றை வாங்க வேண்டும்.

மிருதுவான, ஈரபதமுள்ள, மேற்தோலில் கரும்புள்ளிகள் உடையவற்றையும், முளைவிட்டதையும் தவிர்க்க வேண்டும்.

இதனை ஈரபதமில்லாத குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

சின்ன வெங்காயத்தை வெட்டும்போது அதில் உள்ள கந்தகச் சேர்மங்கள் வெளியேறுவதால் கண்ணில் நீரை வரவழைத்தல், தோலில் லேசான எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இதனைத் தவிர்க்க தண்ணீரில் சிறிது நேரம் வெங்காயத்தை ஊற வைத்து பின் வெட்டினால் கண்ணில் நீர் வராது தடுக்கலாம்.

சின்ன வெங்காயம் அப்படியேவோ, சாறாகவோ, சமைத்தோ உண்ணப்படுகிறது. சாலட், சூப், ஊறுகாய், சட்னி, பாஸ்தா, பீட்சா, நூடுல்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகளில் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

அமைதியாக உயிர்கொல்லும் நோய்களான சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளிலிருந்து பாதுகாக்கும் இயற்கைப் பாதுகாவலன் சின்ன வெங்காயம் ஆகும்.

நோய் எதிர்ப்பாற்றலுடன் சத்துக்கள் கொண்ட சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து நலமான வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.