சிரிப்பூட்டும் வாயு – வளியின் குரல் 10

“அன்பு வணக்கம் மனிதர்களே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க?

பலரது முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. இதைக் காணும் போது, எனக்குள் எழும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.

ஆமா, உங்ககிட்டா ஒன்னு சொல்லணும்.

ஒரு நாள் மாலை வேலையில, ஒரு பூங்காவிற்குச் சென்றிருந்தேன்.

சில பேர் குழுவாக கூடி பல்வேறு குட்டிக் கதைகளை கூறி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரம் அக்குழுவையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பிறகு தான் தெரிந்தது. அவர்கள் பகிர்ந்துக் கொண்டது ′சிரிப்புக் கதைகள்′ என்பது.

அவர்கள் சிரித்து மகிழ்வதால் மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியமும் புத்துணர்வும் அடைகிறார்கள் என்பதையும் பிறகு அறிந்துக்கொண்டேன்.

இதை ஏன் இப்பொழுது சொல்கிறேன் தெரியுமா?

ஒரு வாயு இருக்கிறது. அதற்கு ′சிரிப்பூட்டும் வாயு′ என்றுப் பெயர்.

சிலர் தெரியுமே என்பது போல் தலையாட்டுகிறார்கள். நல்லது தான். எல்லோருக்கும் தெரிய வேண்டுமே. அதனால் சொல்கிறேன்.

சிரிப்பூட்டும் வாயுவின் வேதியியல் பெயர் ‘நைட்ரஸ் ஆக்சைடு‘. இதனை N2O என்ற வேதியியல் வாய்பாட்டால் குறிக்கின்றனர்.

அறை வெப்பநிலையில் இது நிறமற்ற, எளிதில் தீப்பற்றாத ஒரு வாயு.

இயற்கையிலேயே இது இருக்கிறது.

எங்கு என்கிறீர்களா?

பூமியின் வளிமண்டலத்தில் தான்.

ஆனால் வளிமண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவின் செறிவு மிகமிக சிறிதே. எனினும் நைட்ரஜன் சுழற்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

நைட்ரஜன் சுழற்சி பற்றி உங்களுக்கு தெரியும் தானே?

அதான் வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் வாயு, நைட்ரேட் உள்ளிட்ட பல வடிவங்களில் மழை மூலமாக பூமியை அடைந்து மீண்டும் நுண்ணுயிரிகளால் நைட்ரஜன் வாயுவாகவே வளிமண்டலத்திற்குள் செல்லுமே.

சரி, நைட்ரஜன் பற்றி மற்றொரு நாள் விரிவாக சொல்கிறேன்.

இப்போது நைட்ரஸ் ஆக்சைடு பற்றி மட்டும் பேசுகிறேன்.

இயற்கையாகவும், மனித நடவடிக்கையின் மூலமாகவும் நைட்ரஸ் ஆக்சைடு வெளியிடப்படுகிறது.

மண் மற்றும் கடலில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் நைட்ரஸ் ஆக்சைடு வாயு இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டு சூழ்நிலையில வெளியிடப்படுகிறது.

சுமார் அறுபது சதவிகித நைட்ரஸ் ஆக்சைடு வாயு மண் பகுதியிலிருந்து வெளியிடப்படுகிறது.

கடல் மற்றும் வளிமண்டல வினைகள் மூலமாக நாற்பது சதவிகிதம் நைட்ரஸ் ஆக்சைடு வாயு வெளியிடப்படுகிறது.

ஈரநிலங்களும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை உமிழலாம்.

இம்ம்… இதை முக்கியமாக சொல்ல வேண்டுமே.

பெயருக்கேற்றாற்போல உண்மையில் நைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பை வரவழைக்கிறதில்லை.

ஆனால், இதனை சுவாசிக்கும்போது ஒருவித மயக்கமும் பரவச பொழுதுபோக்கு நன்னிலையும் உண்டாக்குமாம். அதனால் தான் இதற்கு ′சிரிப்பூட்டும் வாயு′ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் இல்லை, சில வகை அறுவைச் சிகிச்சையின் போது நைட்ரஸ் ஆக்சைடு மயக்க மருந்தாக பயன்படுத்தும் போது, நோயாளிகளுக்கு வலியே தெரியாதாம். வலி குறைஞ்சா நிம்மதியும் சிரிப்பும் வரும் தானே?

‘என்ன இது எங்களையே கேட்கிறாயே?’ என நினைக்கிறீர்களா?

நான் வாயு தானே. உங்களுக்கு தான் உண்மை தெரியும். நான் சொல்லிவரும் செய்திகள் நான் அறிந்தவையே அன்றி உணர்ந்தவை அல்ல.

இருக்கட்டும், வேறு சில நன்மைகளும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவிற்கு இருக்கின்றன.

குறிப்பாக, ராக்கெட் ஆற்றல் வெளியீட்டை அதிகரிக்கும் ஆக்சிசனேற்றியாக நைட்ரஸ் ஆக்சைடு பயன்படுவதை சொல்லலாம்.

வாகன பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளின் பொறி இயந்திரத்திலும் ஆக்சிசனேற்றியாக நைட்ரஸ் ஆக்சைடு வாயு பயன்படுகிறது.

இதே வேளையில் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவின் குறைகளையும் சொல்கிறேன்.

நைட்ரஸ் ஆக்சைடு ஆக்சிசன் அணுவுடன் வினை புரிந்து நைட்ரிக் ஆக்சைடு (ணோ) வாயுவை தருகிறது.

இயற்கையாகத் தோன்றும் இந்த நைட்ரிக் ஆக்சைடு ஓசோனுடன் (O3) வினைபுரிந்து நைட்ரஜன் டைஆக்சைடு (N2) வாயுவாகவும் ஆக்சிஜனாகவும் (O2) மாறுகிறது. அதாவது ஓசோன் சிதைவு அடைகிறது.

இதன் விளைவாக, ஓசோனின் சமநிலையை நைட்ரஸ் ஆக்சைடு வாயு பாதிக்கிறது. ஓசோன் சமநிலை பாதிக்கப்பட்டால் பூமிக்கு தீங்கு தானே?

நைட்ரஸ் ஆக்சைடு வாயு புவி வெப்பமதாலுக்கு காரணமான பசுமையில்ல வாயுவாகவும் செயல்படுகிறது.

எனினும் இதன் பசுமையில்ல விளைவானது கார்பன்-டை-ஆக்சைடை, மீத்தேன் மற்றும் நீராவியை விடவும் குறைவு தான்.

மேலும், நைட்ரஸ் ஆக்சைடு வாயுவைப் பயன்படுத்தும்போது சிலருக்கு தலைவலி, நடுக்கம், அதிக வியர்த்தல், குமட்டல், சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.

சரி மனிதர்களே. மகிழ்ச்சியாக இருந்த உங்களிடம் நான் பேசி சலிப்பு ஏற்படுத்திவிட்டேனோ?

இல்லையா?

அங்கே சிலர் தலையை அசைக்கிறார்களே. சொல்லுங்கள்…

நீங்கள் சலிப்பு அடையவில்லையா?

அப்பொழுது மிக்க நன்றி. எனக்கு மகிழ்ச்சி.

அன்புமிகு மனிதர்களே, நன்மைகளையே எப்போதும் செய்து மகிழ்ச்சியாக நீங்கள் இருக்க வேண்டும்.

இன்னொரு நாள் வருகிறேன். உங்களிடம் பேச…

நன்றி.”

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.