சிறந்த சமுதாயம் உருவாக என்ன‌ செய்ய வேண்டும்?

இன்றைக்கு நாகரிகத்தால் அலங்கார நாய்கள் வளர்க்கும் மேதைகள் உருவாகி விட்டார்கள். அவற்றிற்கான செலவினம் மிக மிக அதிகம். பெற்றோர்க்குச் செலவிடும் அளவை விட‌ அதிகம்.

எத்தனையோ வீடுகளில் பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலும், நாய்கள் குளிர்பதன அறைகளிலும் இருப்பதைக் காணலாம்.

இந்நிலை முற்றிலும் அந்நியர்களிடம் கற்றுக் கொண்டதே. நம் நாட்டில் மெல்ல மெல்ல உறவு முறை சீரழிக்கப்பட்டது. அதனால், இயற்கையான பாசங்கள் மறைந்தன.

இயந்திர மயமான வாழ்க்கை முறையை நாம் அமைத்துக் கொண்டோம். பேதமற்ற நமது கிராம வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விட்டது.

நம் நாட்டில் அந்நியரால் பேதங்கள் புகுத்தப்பட்டன; அறியாத மக்கள் அடிமைகளாயினர். அந்நியர் அளித்த பதவிகளை அனுபவிப்பதற்கு ஆசைப்பட்டு சிலர் தம் மக்களையே பிளவுபடுத்தி வைத்திருந்தனர்.

‘ஆண்டான், அடிமை’ என்னும் சொல்லே வந்தது, அன்னியர் வந்த பின்புதான்.

அவர்கள் சென்ற இடமெல்லாம் பாரம்பரியத்தை அழித்தார்கள்.

உதாரணமாக அமெரிக்க நாட்டில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகள் இயற்கையை வணங்கி வந்தவர்கள். அந்த ஆதி அமெரிக்கர்களை (Native Indians) அழித்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டில் குடிபுகுந்து அந்நாட்டின் பூர்வ குடிகளான அபாரிஜனல் என்னும் பூர்வகுடிகளை அழித்தார்கள். இப்படி கலாசாரமும் பண்பாடும் திட்டமிட்டு அந்நாடுகளில் மொத்தமாக அழிக்கப்பட்டது.

நம்நாட்டில் மொத்தமாக அழிக்க முடியவில்லை. அதனால் வகுப்புவாதப் பிரிவினையை வளர்த்து விட்டார்கள். அதில் ஓரளவு சாதித்தார்கள்.

பிறநாடுகளில் சாதித்தது போல் இங்குச் சாதிக்க முடியாததற்குக் காரணம் நம் மக்களிடையே வேறூன்றி இருக்கும் புராண, இதிகாச, இறை நம்பிக்கை.

இதில் விஞ்ஞானமும், மெய்ஞானமும் பிணைந்திருந்தன. மொழியும், ஆன்மீகமும் கலந்திருந்தன.

ஆகவே, மதம் மாற்ற வந்த அந்நியர் மொழியைக் கையிலெடுத்து வேற்றுமை என்னும் விஷத்தை மெல்லத் தூவினர். அது மெல்ல வளர்ந்து நம் பாரம்பர்ய பண்பாட்டைச் சீர்குலைக்கத் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் திருக்குறளை ‘பிற்காலத்தது’ எனச் சொன்னார்கள்.

கள்ளுண்ணாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், ஊழ்வினை, மறு பிறப்பு என்று நம்பண்பாட்டை பறைசாற்றும் திருக்குறளைச் சொந்தம் கொண்டாடப் பொய்யுரைகளைப் புகுத்தினர்.

நம் உடலில் இயங்கும் அவயவங்கள் அது அது அதன் வேலையை செய்யும் அதில் ஏற்றத்தாழ்வு எப்படி காணமுடியும். ஒன்றை ஒன்று புறக்கணித்தால் அங்கஹீனர்களாவோம்.

அப்படித்தான் உயர்வு தாழ்வில்லாச் நம் சமூகத்தை மெல்ல ‘ஆண்டான், அடிமை’ என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டு அங்கஹீனர்களாக்கி விட்டார்கள்.

அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்துள்ளோம். ஆகவேதான், மாற்றுச் சிந்தனைவாதிகளை உருவாக்கி, மெல்ல மெல்லப் பண்டைய சமதர்ம கலாசாரங்களை இழிவு ப‌டுத்தி அழிக்கத் திட்டமிடுகிறார்கள்.

அந்நியர் வந்தபின் அறிவார்ந்த கல்வி முறையைக் கெடுத்துக் குமாஸ்தா வேலைக்கான கல்வியாக மாற்றி வைத்தார்கள்.

இக்கல்வி முறையால் மெல்ல மெல்ல நம் பண்பாட்டை இழந்தோம், கலாசாரத்தை இழந்தோம், இல்லத்தில் விருந்தோம்பலை இழந்தோம், உறவு முறையை இழந்தோம், வரலாற்றை இழந்தோம்.

இதிகாச காலங்களைப் பொய்யென்றனர். இதிகாசங்களைப் பழித்தனர். சங்க இலக்கியங்களை அநேகர் படிப்பதில்லை. அதனால் இதிகாச காட்சிகளை எடுத்தியம்பும் பாடல்களை மறைத்தனர்.

இராமாயணக் காட்சிகளைப் புறநானூற்றுப் பாடலில் பார்ப்போம்.

    “கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை

     வலித்தொகை அரக்கன் வௌவிய ஞான்றை”

மகாபாரதச் செய்திகள் புறநானூற்றில்

     “அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ

      நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

     ஈரைம்பதின்மரும் பொருது கலத்தொழியப்

     பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”

இவ்வாறு இதிகாச காட்சிகளை உணர்த்தும் பழந்தமிழ்ப் பாக்களை மறக்கடித்துத் ‘தமிழ் தமிழ்’ என்று தமிழ்ப் புலவர்களையே சிறுமைப்படுத்துகின்றோம்.

இவற்றிற்கெல்லாம் காரணம் நம் பண்பாட்டைச் சீர்க்குலைப்ப‌தே நோக்கம்.

பண்டைய கல்வி முறையால்தான், தமிழிலக்கிய, இலக்கணங்கள் பெற்றோம். சங்க இலக்கியங்கள் பெற்றோம். பெரும் காப்பியங்கள் பெற்றோம். இதிகாசங்கள் பெற்றோம், சிற்றிலக்கியங்கள் பெற்றோம், அகராதிகள் பெற்றோம், இவற்றால் வரலாறு அறிந்தோம். நாயன்மார்மளைப் பெற்றோம், ஆழ்வார்களைப் பெற்றோம். அவர்களின் இன்தமிழ் இன்றும் இனிக்கின்றது.

வரலாற்றில் இடம்பெறக் கூடிய ஒரு இலக்கியமாவது இக்கல்விமுறையால் கொடுக்க முடிந்ததா? முடியுமா? முடியாது.

திட்டமிட்டு நாட்டின் ஒற்றுமையைச் சிலர் கெடுக்கின்றனர்.

       “தென் குமரி வடபெருங்கல்

       குணகுட கடலா எல்லை

      குன்று மலை காடு நாடு

      ஒன்றுபட்டு வழிமொழியக்

     கொடிது கடிந்து கோல் திருத்திப்

     படுவது உண்டு பகல் ஆற்றி

     இனிது உருண்ட சுடர் நேமி

    முழுது ஆண்ட வழி காவல” !-- புறநானூறு 17

என்ற புறநானூற்றுப் பாடலால் இந்நாடு ஒரே நாடாக இருந்ததை அறிகின்றோம். ஆனால் இன்று என்றும் ஒரே நாடாக இருந்ததில்லை என்று ஒரு கூட்டம் சொல்லி இளைய சமுதாயத்தை மூளைச்சலவை செய்கின்றனர்.

ஆதிகாலம் தொட்டுச் சைவர்கள் வடக்கே இமயமலையில் உள்ள கேதார்நாத், கைலாயம் முதலாக காசியையும் தெற்கே இராமேஸ்வரத்தையும் இணைத்து போற்றினர்.

வைணவர்கள் வடக்கே இமயமலையில் உள்ள பத்ரிகாச்ரமத்தையும், தெற்கே சேதுக்கரையையும் இணைத்துப் போற்றினர். இன்றும் போற்றுகின்றனர். இவைகளை எல்லாம் மக்களை மறக்கச் செய்கின்றனர்.

நிலத்தைக் கெடுத்தோம். நீரைக் கெடுத்தோம். கல்வித் தரத்தைக் கெடுத்தோம். நல்ல சமூகச் சூழலைக் கெடுத்தோம். இன்னும் கெடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

மொழியை இழந்தோம்; நன்றிது , தீமையிது என்று சொல்லும் கல்வியை விட்டோம். இதனால் இன்று பழிபாவத்திற்கு அஞ்சாத அராஜகம் பெருகி விட்டது.

மறைவிடம் சென்று கள்ளுண்பவரை கேவலமாகப் பேசி வந்த காலம் மறைந்தது. பொதுவெளியில் வரிசையில் நின்று சாராயம் வாங்குவது சாதாரணமாகி விட்டது.

கிராமத்தில் மறைவாகச் சென்று சாராயம் குடிப்பவர்வளையே கேவலமாகப் பேசி வந்த காலம் ஒன்றிருந்தது. இன்று பெரும்பாலான வீடுகளிலே அலங்காரமாக மதுக்கலங்களை வாங்கி அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றனர்.

இந்தச் சமூக சீரழிவிற்குக் காரணம் யார்?

நம்மை நாமே திருத்திக் கொள்ளா விட்டால் நம் அறிவும் ஆற்றலும் வீணாவது நிச்சயம்.

நல்ல ஆரம்பக் கல்வியைப் பிள்ளைகளுக்குத் தந்தால், அன்பும் பண்பும் வளரும். ஆனால் திட்டமிட்டு நம் பெருமைமிகு கலாசாரத்தையும் ஒற்றுமையையும் திட்டமிட்டுக் கெடுப்பவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முதலில் திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து, கள்ளுண்ணாமை, கொல்லாமை, நீத்தார் பெருமை, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, பொறாமை இல்லாதிருப்பது, வினைப் பயன் போன்ற கருத்துகளைப் பாடப் புத்தகங்களில் சேர்த்துப் பிள்ளைகளுக்கு உணர்த்தல் வேண்டும்.

வீட்டில் பெரியோர்கள் பிள்ளைகளுக்கு இவற்றைச் சொல்லித் தருதல் அவசியம் என்று உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

திருக்குறளைப் பற்றி மேடையில் பேசிவிட்டு, செயல்பாடு நேர் மாறாக இருந்தால் என்ன பயன்?.

இன்று எல்லோரும் ‘தமிழ் தமிழ்’ என்று பேசுகின்றார்கள். பாராட்ட வேண்டும், ஆனால் எத்தனைப்பேர் உண்மையில் தமிழுக்காக பாடுபடுகின்றார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

பல அறிஞர்கள் தம்முடைய கருத்துக்கு ஏற்ற வகையில் இலக்கியங்களுக்குண்டான கருத்துகளை திருத்திச் சொல்லியுள்ளனர். பொருளை மாற்றி விளக்கியுள்ளனர்.

சாதாரண மக்களுக்கு இவையெல்லாம் தெரியாது. நாளடைவில் பொய்யே மெய்யாகும் என்ற கோட்பாட்டை கடைப்பிடித்தனர். (அதற்கு சான்று ஒளவையாரின் காலத்தை பற்றியது, திருக்குறளைப் பற்றியது)

நம்மவர்கள் அக்காலத்திலேயே பன்மொழியைக் கற்றவர்களாவார்கள். கம்பர் வடமொழி இராமாயணத்தை ஆழ்ந்து படிக்கவில்லையானால் நம் பண்பாட்டிற்கு உகந்தமுறையில் இராமாயணத்தை கொடுத்திருக்க முடியாது.

தமிழார்வம் நிறைந்தோர் இன்றைக்கு ஈடில்லா காவியமாக, ஒப்பற்ற கம்ப இராமாயணம் என்னும் தெவிட்டாத இன்பத்தேனை பெற்றிருக்க மாட்டோம்.

அதிவீரராம பாண்டியர் வடமொழி நைடதத்தை படிக்கவில்லையானால் நமக்கு புலவர்களுக்கு ‘ஔஷதம்’ என்று போற்றப்படும் ‘நைடதம் நமக்கு கிடைத்திருக்காது.

வியாச பாரதத்தை வடமொழியில் படித்துணர்ந்ததால் பெருந்தேவனார் பாரதம் பாடினார். அந்நூல் நமக்கு கிடைக்கவில்லை.

வில்லிபுத்தூரார் வடமொழி பாரதம் கற்றுணர்ந்து நமக்கு தமிழில் வில்லி பாரதத்தை வழங்கினார். சங்கப்புலவர்கள் வடமொழி கற்றுவர்களாவர். சங்க நூல்களில் அத்தாக்கத்தை அறியலாம்.

நம்நாட்டில் அக்காலத்திலேயே பல்கலைக் கழகங்கள் இருந்துள்ளன. சமய தத்துவங்களை நாமே பிற நாடுகளுக்கு வழங்கினோம். வேறு நாட்டு தத்துவங்களை நாம் ஏற்றுதில்லை. ஆனால் நம்மிடையே திணிக்கப்படுகின்றது.

திட்டமிட்டு நம்முடைய அறிஞர்களை புறக்கணித்தனர். அந்நியரை மேற்கோள் காட்டிப் பேசுவதை நாகரீகமாகக் கொண்டனர். அவ்வலையில் சிக்கினோம். மெல்ல பண்பாட்டை இழந்தோம்.

தமிழ்ச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக‌ உருவாக வேண்டும். இல்லையேல் நாம் சிறுமைப் படுவோம்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.