சிறுவனின் நேர்மை

அந்த ஆரம்பப்பள்ளி அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாவட்ட கல்வி அதிகாரி அன்று அப்பள்ளிக்கு வருகை தருவதாக இருந்தது.

ஆதலால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மாவட்ட கல்வி அதிகாரியின் வருகையை எதிர் நோக்கி இருந்தனர்.

ஒரு வகுப்பினுள் மாவட்டக் கல்வி அதிகாரி நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து அவருக்கு வணக்கத்தை தெரிவித்தனர். மாவட்ட கல்வி அதிகாரியும் பதிலுக்கு வணக்கதைத் தெரிவித்தார்.

பின் கரும்பலகையில் கூட்டல் கணக்கு ஒன்றினை எழுதினார். மாணவர்கள் அனைவரும் தங்களது சிலேட்டில் தனியே கணக்கினை செய்து கணக்கிற்கான விடையை எழுதி தன்னிடம் காண்பிக்குமாறு மாவட்ட அதிகாரி கூறினார்.

மாணவர்கள் தனித்தனியே கணக்கினைச் செய்யத் தொடங்கினர். வகுப்பு ஆசிரியர் மாணவர்கள் கணக்கு செய்வதை சுற்றிப் பார்த்து கொண்டே வந்தார். அப்போது மாணவன் ஒருவன் தவறாக கணக்கினை செய்து இருந்தான்.

இதனைக் கவனித்த வகுப்பு ஆசிரியர் கணக்கினை தவறாகச் செய்த மாணவனிடம் பக்கத்தில் இருக்கும் மாணவனை பார்த்து கணக்கினைச் செய்யுமாறு சைகையில் கூறினார்.

கணக்கினைத் தவறாகச் செய்த மாணவனோ வகுப்பு ஆசிரியர் கூறியதைக் கேட்கவில்லை. மாவட்ட கல்வி அதிகாரியும் வகுப்பு ஆசிரியரின் நடவடிக்கையையும், மாணவனின் நடவடிக்கையையும் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தார்.

இறுதியில் தான் செய்தவாறே கணக்கினை மாவட்ட கல்வி அதிகாரியிடம் காண்பித்தான் அந்த மாணவன்.

மாவட்ட கல்வி அதிகாரி அம்மாணவனிடம் கணக்கின் தவறினைச் சுட்டிக் காட்டினார். பின்னர் ஆசிரியருக்குப் பயப்படாமல் செயல்பட்ட சிறுவனின் நேர்மை மற்றும் மனதைரியத்தைப் பாராட்டினார்.

ஆசிரியருக்கு பயப்படாமல் செயல்பட்ட அம்மாணவன் யார் தெரியுமா?. அவரே மகாத்மா என்று எல்லோராலும் போற்றப்பட்ட‌ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார்.

சிறுவயதில் அவர் பின்பற்றிய நேர்மை மற்றும் மனதைரியம் பின்னாளில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட மிகவும் உதவி கரமாக இருந்தது.

சிறுவயதிலேயே காந்தியிடம் இருந்த மனதைரியம் அவரிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து ஆங்கிலேருக்கு எதிராக போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கச் செய்தது.

ஆதலால் குழந்தைகளே நாமும் சிறுவனின் நேர்மை மற்றும் மனதைரியத்தை மனதில் வளர்த்துக் கொண்டால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.