சுத்தி முறைகள்

சுத்தி முறைகள் என்பது ஒவ்வொரு மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதாகும்.

அக்கரகாரம்: ஒன்றிரண்டாய் தட்டிச் சிறுக வறுத்தெடுக்கவும்.

அசுவகந்தம்: இதனைத் துண்டு துண்டுகளாக நறுக்கி அவியந்திரத்தின் மூலம் பாலில் பிட்டவியல் செய்து கொண்டு மேற்தோலை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிமதுரம்: தண்ணீரில் கழுவி மேல் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தவும்.

அதிவிடயம்: மேல் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்துக.

அருகம் புல் வேர்: கணுக்களை நீக்கவும்.

இஞ்சி: மேற்தோலைச் சீவி நீக்கி விட வேண்டும்.

இஞ்சிச்சாறு: இஞ்சியை அரைத்து நீரில் கலக்கித் தெளிந்தபின் நீரை வடித்தெடுத்துக் கொண்டு கீழே நிற்கும் படிவை அகற்றி விடவும்.

ஓமம்: சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஒரு சாமம் ஊறவைத்தெடுத்து உலர்த்தவும்.

கடுக்காய்: (1) இதனுள்ளிருக்கும் கொட்டையின் பருப்பு நஞ்சு. அதனை நீக்கிவிடல் வேண்டும். (கடுக்காய் அக நஞ்சு) (2) கற்றாழை நீரில் 3 நாட்கள் ஊற வைத்து எடுத்து உலர்த்தவும்.

கருஞ்சீரகம்: சுண்ணநீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்தெடுக்கவும்.

சுழற்சிக்காய்: மோலேடு நீக்கி உள்ளிருக்கும் பருப்பெடுத்து வெந்நீரில் அலம்பிக் கொள்ளவும்.

கஸ்தூரி மஞ்சள்: மேல்தோல் சீவி வெயிலில் உலர்த்தவும்.

கார்போக அரிசி: திருநீற்றுப் பச்சிலைச் சாற்றில் பிசிறி உலர்த்தவும்

கிராம்பு: மொட்டுப் போல் உள்ள பூவை எடுத்தெறியவும்

குக்கில்: எருமை மோரில் ஒரு நாள் வரை ஊறப் போடவும்

குங்குமப்பூ: சிறுக வறுத்தெடுக்கவும்

குமரி அல்லது சோற்றுக்கற்றாழை: தோலை அகற்றி அதன் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து பாத்திரத்திலிட்டு வேண்டிய அளவு தண்ணீர் விட்டு நன்றாய் அலம்பி நீரை வடிக்கவும். இவ்விதம் 10 முறை தண்ணீர் விட்டுக் கழுவி நீரைச் சாய்க்க குழகுழப்பு அடங்கிவிடும். பிறகு எடுத்து ஒரு மெல்லிய துணியில் முடிந்து கயிற்றில் தொங்கவிட்டு ஓரிரவு கழித்தெடுக்க சுத்தி

குரோசாமணி ஓமம்: காம்பு, குச்சி முதலியன போக்கி, தேய்த்து, புடைத்து, மண் போக்கி உலர்த்தவும்.

சாதிக்காய்: மேல்தோல் நீக்கி நெய்யில் வறுத்தெடுக்கவும்.

சிற்றரத்தை: ஒன்றிரண்டாய் தட்டிச் சிவக்க வறுக்கவும்

சிவதை வேர்: நரம்புகளை நீக்கி நெய்யில் வறுத்தெடுக்கவும்

சீந்திற்கொடி: கொடி மேல் இருக்கும் சிறுபட்டையைச் சீவி எடுத்து விடவும்.

சீரகம்: இளவறுப்பாய் வறுத்தெடுக்கவும்

சுக்கு: மேல் தோல் நீக்கி சுண்ண நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்தவும்.

சூரத்து நிலாவாரை: குச்சிகளை அகற்றி கிழிகட்டி பசும்பாலில் அரை மணி நேரம் வேகவைத்து எடுக்கவும்.

தனியா (கொத்தமல்லி விதை): வறுத்து நன்றாய்த் தேய்த்துப் புடைத்தெடுக்கவும்.

தாளிசபத்திரி: வறுத்தெடுக்கவும்

திப்பிலி: சித்திரமூலக் கியாழத்தில் ½ நாள் ஊற வைத்து உலர்த்த சுத்தி

தேற்றான் கொட்டை: (1) இதைப் பசும் பாலில் ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) ஊறப் போட்டு நீரில் உலர்த்திக் கொள்ளவும். அதன் எடைக்கு 4 பங்கு சிறுகீரைச் சாற்றை விட்டு அரைப்பாகம் சுண்ட எரித்து நீரில் கழுவி எடுக்க சுத்தியாகும்.
(2) ஒரு நாள் தண்ணீரில் வேக வைத்து மேல் தோலை ஓட்டுவில்லையின் மேல் தேய்த்து சுத்தமான நீரில் கழுவி துணியினால் துடைத்து எடுக்கவும்

நிலாவாரை: கல்,மண்,காம்பு,காய் இவைகளை நீக்கி இலையை மாத்திரம் எடுத்து பசுவின் பாலில் வேக வைத்து நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்

பூலாங்கிழங்கு: மேல் தோல் சீவி வெய்யிலில் உலர்த்தவும்

பெருங்காயம்: பொரித்தெடுத்துக் கொள்ளவும்

மரமஞ்சள்: மேல் தோல் நீக்கி துண்டுகளாக்கி உலர்த்தவும்

மாசிக்காய்: (1) ஒரு வித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வருகிற பால் திரண்டு கட்டுப்படுவதே மாசிக்காய் ஆகும். அகப்படும் பூச்சிகள் வெளிப்படாததற்கு முன் எடுத்து உலர்த்தி பொடித்துக் கொள்ள சுத்தியாம்
(2) பசுவின் நெய்யில் பொரித்துக் கொள்ளவும். பொரிக்கும் போது மாசிக்காய் வெடிக்கும் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

மிளகு: (1) தண்ணீரில் ஒரு நாள் ஊற வைக்கவும். (2) சிறுதீயில் வாசனை கிளம்ப வறுத்தெடுக்கவும்.

வசம்பு: கருகும் படி சுட்டெரிப்பது

வல்லாரை: வல்லாரை இலையை காம்பு நீக்கிப் பழுப்பு இலைகளை அகற்றி அலம்பி எடுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பசும்பாலும் தண்ணீரும் சம எடை கலந்து பாத்திரத்தின் வாய்க்குத் துணி கட்டி, அத்துணியில் இலைகளை இட்டு அவழத்து எடுத்து நிழலில் உலர்த்தவும்.

வெந்தயம்: நீராகாரத் தெளிவில் அரை நாழிகை (12 நிமிடங்கள்) ஊற வைத்து எடுக்கவும்.

வெற்றிலை: காம்பு, நரம்புகளை எடுக்கவும்.