சுனை சாமியார் – சிறுகதை

”சுனை சாமியார் பத்தி தெரியுமா? தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட், டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும் இருக்கான். என்ன, பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி. அவ்வளவு தான். மத்த‌படி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்” என்ற மதினியின் வாயைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.

மதினியின் வலப்புறத்தில், மதியச் சாப்பாட்டிற்குக் காய் நறுக்கிக் கொண்டே, ஏதோ உலகத்தில் நடக்காத புதுக்கதையைக் குழந்தை வாய் திறந்து கேட்பது போல், அக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் சரவணன் மனைவி சரசு.

தன் அக்காவின் வீட்டிற்குச் சென்றால், புதுஉலகம் சென்ற சந்தோசம்தான் அவளுக்கு; தாங்க முடியாது. தண்ணீர் கூட, இவ்வூர் மாதிரி வராதுன்னு ஓராயிரம் முறை கூறியிருப்பாள். இருந்தாலும் அது மாதிரி கூறுவது அவளுக்குப் பெரிதும் பிடித்து இருந்தது.

”அது சரி, அவனோட‌ அம்மா, அப்பா இவன மாற்ற முயற்சிகள் ஏதும் எடுக்கலயா? இப்படி ஒரேடியா  சாமியாராக மாறிய கதைய உலகத்துல, நான் கேட்டதே இல்லை” என்று பேச்சைச் சூடாக்கினாள் சரசு.

பக்கத்தில், மதினியின் மகள்கள் ஆளுக்கொரு போனை கையில் வைத்துக் கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள் ஏதும் கேட்காதது போல். ஒரத்தில் இருந்த கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்த மதினியின் கணவர் அவ்வப்போது திரும்பித் திரும்பிப் பேசிக்கொண்டு இருந்தார்.

 

 

மதனி ஆரம்பித்தார், ”அவங்க என்ன பண்ணுவாங்க, மருமக இறந்து போனதில இருந்து, அவர்களைக் கவனிக்கவே ஆள் வேண்டியிருக்கும். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் போய் தான் பார்த்துக்கிறோம். இவனப் பாக்குற எல்லோரும் அதை, இதைப் பேசினதைப் பார்த்து, கண்டிஷனா சொல்லிப்புட்டான். என்னன்னா, ‘எல்லோரும் வர்றப்ப போறப்ப இப்படிப் பேசினா, இனி, நான் வீட்டுக்கு வரமாட்டேன். தோட்டத்திலேயே நான் தங்கிப் புடுவேன். எதுவும் பேசக்கூடாது. மனசு மாற மாற‌, நான் மாறுவேன். அதுவரை என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். சொல்லிட்டேன்.’ அப்படின்னு சொல்லிப்புட்டான். அதிலிருந்து, அத்தை, மாமா கூட, ஏன்? இவன் சித்தப்பா கூட எதுவும் பேசவில்லை” எனக் கூறிக் கொண்டே எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்தார்.

”யாரு குருன்னு, சொல்லிட்டு வாய் நிறைய எப்பவும் பேசிகிட்டு இருப்பாரே, அவரால கூடவா இவனை மாற்ற முடியலையா?” என்றாள் சரசு.

மூன்று வயது சின்னவன் என்பதால், சிறுவயதிலிருந்தே, ’அவன்’ ’இவன்’ என்று தான் அக்கா தங்கை இருவரும் அழைப்பார்கள்.

”இல்லைப்பா, அவனுக்கு அமைதி இப்ப தேவை. அவனே பொண்டாட்டி செத்த துயரத்திலே இருக்கான். எல்லாரையும் போலவா இது. கொடுமையான சாவு. கல்யாணம் பண்ண ஒரே மாதத்தில் கழுத்தறுத்து கிடந்த மனைவியை யாருக்குத் தான் பார்க்கச் சகிக்க முடியும். அதுதான், இப்படிச் சாமியாரா ஆக்கிடுச்சு”. நீண்ட நேரங்களுக்குப் பிறகு கட்டிலில் படுத்தவாறு பேச்சின் உள்ளே நுழைந்தார் சுப்பு.

சரசு உடனே கட்டிலை நோக்கித் திரும்பி உட்கார்ந்து, ”இல்ல, அத்தான் என்னதான் துக்கமாக இருந்தாலும், எல்லாத்தையும் எப்படி துறக்கிறது? விட்டுட முடியுமா? உலகத்தில் எல்லோரும் இப்படியா இருக்கிறாங்க? பாவடித் தெருவுல இருந்த வெத்தலைக் கிழவி பேத்தி இறந்தப்ப, அவளுக்கு இரண்டு பிள்ளை. மாப்பிள்ளை பிணம் கிடக்கிறப்பவே, தன் மாமா கிட்ட போய், ’என் பிள்ளைகளுக்கு வழி சொல்லுங்க மாமா. யாரு அதுகள வளர்ப்பா? இனி எங்க போவேன் நா? உங்க இரண்டாவது மகள, எனக்கே கொடுத்துடுங்க. புள்ளைங்கள பார்த்துக் கொள்ளட்டும்.’ என்று கேட்டானாம். இது தான் இப்ப உலகம். சாமியார் ஆயிட்டானாம், சாமியாரு.” என்றாள் எதார்த்தமான மனதோடு சரசு.

 

 

”காலைல சாப்பாடு எல்லாம் கிடையாதாம். ஒரு டம்ளர் பால் அவ்வளவுதான். குளிச்சதுக்கப்புறம் ஒரே தியானமாம். அவன் ரூம்முக்குள்ளே. இதுவரை யாரும் அவன் ரூம்முக்குள்ள போனதே இல்லை. அதுவும், அவன் பொண்டாட்டி செத்ததுக்கு அப்புறம். கதவைத் தட்டினாலும் வெளியே வரவே மாட்டான். மத்தியானம் உப்பு புளி போடாம, நிலத்துக்கு அடியில் விளைந்த காய்கறி, பருப்புக் குழம்பு. அவன் வயல்ல விளைஞ்ச பச்சரிசிச் சாதம். வீட்டுக்கு, தோட்டத்தில் இருந்து வரும் பசு மாட்டு பால் போதுமானது. அதிலிருந்து தயிருக்கு ஊற்றி, மோராக்கிக் கொடுத்தால் குடிப்பானாம். கடைப்பொருள் இதுவரைத் தொட்டதில்லை. மதியம் 3 மணிக்கு மேல் வெயில் தாழக் கிளம்புவான். யார் கிட்டயும் சொல்லிக்காம, அவனாக் கிளம்பிடுவான். தோட்டத்துக்கு போறவன், மறுநாள் காலையில பால், காய்கறிகளோடு வருவான். வீட்டாரோடு ஒரு வார்த்தையும் பேசுற‌தில்லை. தோட்டத்துல பேசுவானோ? இல்ல சைகையிலேயே ஆடுவானோ தெரியல.” சாமியார் கதை போய்க்கொண்டே இருந்தது.

அக்காவும் தங்கையும் இப்படி மெய்மறந்து அத்தை மகன் சாமியாரான ஒவ்வொரு அசைவையும் பேசுவது கடுப்பா இருந்தாலும், சரவணன் யோசித்துப் பார்த்தான். சொந்த அத்தை மகன். தடபுடலாக நடந்த கல்யாணம். இவர்கள் அப்பாவின் சொந்தத் தங்கச்சி மகன். இப்படி சோகத்தை அனுபவிப்பதை யாரால் தாங்க முடியும்?

’வயது வித்தியாசம் இல்லாமல் இருந்திருந்தால் சரசுவைத் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பாவம் அதுவும் வாய்க்கல’. என மனதிற்குள் நினைத்தவாறே சரவணன் வீட்டிலிருந்து கிளம்பினான்.

”ஏங்க… எங்க கிளம்பிட்டீங்க” சரசு கேட்டாள்.

”இந்தா.. வாரேன்.. தெருக்கோடியில் இருக்கிற மலை அடிவாரத்தில் போய், கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்.” சொல்லிட்டு சரவணன் கிளம்பினான்.

அவனுக்கு ரொம்ப நேரமாகவே, சாமியார் கதை கேட்பது ரொம்ப கஷ்டமாகப் பட்டது. இந்த மனநிலையில் இருந்து வெளியே வர, மலையடிவாரம் கட்டாயம் ஒரு அமைதியை தரும் என்று எண்ணினான்.

”ஏங்க இப்ப மேல போகாதீங்க.. கோயில் சாத்தி இருப்பாங்க. வேணுமுன்னா, கீழே மாப்பிள்ளைச் சத்திரத்துக்குப் பக்கத்தில மரத்தடியிலே இருந்துட்டு வாங்க.. காத்து நல்லா வரும்.. அமைதியாக இருக்கும்.”

அவன் கிளம்புவது அவளுக்கு வசதியாகவே பட்டது. எனவே அனுப்பி வைத்தாள்.

 

 

மலை அப்படி ஒன்னும் பெரிசு இல்லை. வழுக்குப் பாறை போல. மொழு மொழுனு இருக்கும். நடுப்பகுதியில் சமதளமாய் சில இடங்களில் இருக்கும். அங்கு மட்டும் மரங்கள் அடர்ந்து காணப்படும். கீழிருந்து எல்லாப் பக்கத்திலிருந்தும் ஏறி விட முடியாது. சில வழிகள் தான் உண்டு. ஆனால் சுனையம்மன் கோவிலுக்குப் போற பாதை தவிர வேறு வழியில் யாரும் ஏறுவதில்லை.

சுனையம்மன் கோவில் மலைப்பாதை அடிவாரத்தில், நிறைய மாமரங்கள், முழு நெல்லி மரம், பூமரங்கள் என நிறைய மரங்களுண்டு. நடுநடுவே தென்னைகளும் இருக்கும். ஒரு ஓரத்தில் நிறைய வாழை மரங்கள் வைத்திருந்தார்கள். சிறிய நீரோடை மிகச் சரியாக எல்லா மரங்களுக்கும் நீர் போவது போலிருந்தது. மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து இருப்பதனால், சூரிய ஒளியே இல்லாமல் குகை போன்று இருக்கும். நிறைய படிக்கற்கள் இருக்கும். இதைச் சுற்றியுள்ள நான்கைந்து தெருக்களில் உள்ள பெரியோர்களின் சொர்க்கலோகம் இவ்விடம். குழந்தைகளுக்கும் தான்.

உச்சியில் ஜோதிப் பிழம்பாய் பகலவன் தன் உடலால் ஒளியை உக்கிரப்படுத்திக் கொண்டிருந்தான். கோயில் அடிவாரத்திற்கு முன்னுள்ள நான்கைந்து வீடுகளில் இரண்டு வீட்டிற்கு நடுவில் உள்ள குறுக்குச் சந்தில் நுழைந்தால், அடிவாரத்திற்குள் எளிமையாய் நுழைந்து விடலாம். இல்லை என்றால், முள்வேலி சுற்றித் தான் வரவேண்டும். அது கொஞ்சம் சுற்று. எனவே, சரவணன் இரண்டு வீட்டிற்கும் நடுவில் உள்ள குறுக்கு சந்தில் நுழைந்தான்.

அடிவாரத்தில் யாருமில்லை. பறவைகள் ஒலி எழுப்பவும் இல்லை.

பலமுறை சரவணன் இங்கு வந்திருந்தாலும், இன்று ஏனோ, இந்த அமானுஷ்யமான ரம்மியமான இடம், அவனுக்கு அந்நியமாகவே இருந்தது. காற்று அவன் உடலுக்குச் சுகம் தந்தாலும், மனம் ஏதோ பாரத்தைச் சுமந்து கொண்டு, முடங்கி இருப்பது போல வெறுமையாய் இருந்தது.

எல்லாவற்றிற்கும் மணி சாமியாரான‌கதை தான் காரணமாக இருக்கிறது. சுனை அருகிலே மணியின் தோட்டம் இருப்பதால் சுனை சாமியார் என்று பெயர் வேற‌.

 

 

“என்ன மாப்பிள்ள… எப்ப வந்தீங்க? பேரன்கள் வந்திருக்காங்களா?” கேட்டுக் கொண்டே, சரவணனின் தோளில் கைவைத்தவாறு பின்பக்கத்திலிருந்து வந்து கேட்டார் அந்த முதியவர்.

திடுக்கென்று திரும்பி, ”மாமாவா, நான் பயந்தே போயிட்டேன்” என்றான் சரவணன்.

”சுனையம்மன் சன்னதியில் ஏம்மாப்பிள்ளை கலங்குறீங்க? அவள் எல்லார் பயத்தையும் போக்குறவளாச்சே.” சிரித்துக் கொண்டே அருகே அமர்ந்து, அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

அது, அன்பின் நெடிய சுகம் கொண்டதாக இருந்தது சரவணனுக்கு.

எப்பொழுது இவ்வூருக்கு வந்தாலும் இந்த மாமாவைப் பார்க்காமல் போறது இல்ல. ஏன்னா அவருக்கு குடும்பம்னு யாரும் இல்லை. அவர் தனியாள். எப்படி இருந்த குடும்பம் அவர் குடும்பம். ஒண்ணும் இல்லாம இப்ப இவர் தனிமரமாக நிற்கிறார். கூலி வேலைகளுக்குப் போவாரு. தானே ஆக்கியும், சிலபொழுது கடையில சாப்பிட்டும் பொழுதைக் கழிக்கிறார். எனவே எப்போது வந்தாலும் மாமாவை பார்க்காம அவன் போறதில்லை.

அவருக்கும், சரவண மேல, அவன் குடும்ப மேல, ரொம்ப பாசம். உருகிப் போவார்.

”தற்பொழுது எங்கு வேலை?” எனக் கேட்ட சரவணனைப் பார்த்து, மாமா மெதுவாகப் புன்முறுவல் செய்தார். முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு அன்னார்ந்து பார்த்துக்கொண்டே, ”மாப்பிள… சின்ன சின்ன வேலைகளுக்குத் தான் இப்ப என்ன கூப்பிடுறாங்க. முன்ன மாதிரி முரட்டு வேலைகளுக்கு எல்லாம் போக முடியல” அவர் குனிந்து அமைதியானார்.

”மாப்பிள்ளை வாழ்க்கை நம்மளை எப்படி புரட்டிப் போட்டாலும், அதை வாழாம இருக்க முடியாது. துன்பம் வரும். சோகம் வரும். அது நமக்கான போட்டி. டப்பா உள்ளேயே அடைபட்டு கிடக்கக் கூடாது. நமக்குன்னு கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறார். அதை நிறைவேத்தணும். அது நம்ம கடமை. போயிட்டே இருக்கிற ஆறு, ஒருநாளும் தனக்காக நிக்காது.”

த்ராணி குறைய, வேறு ஒரு குரலில் பேசியது போல் பேசிவிட்டு, இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தார். அந்த நெருக்கம் அவர் சொல்லாமல் விட்டதையும் அவனிடம் கூறியது.

 

 

”நம்ம மணியோட தோட்டத்துக்குத்தான், இப்ப நீங்க வேலைக்குப் போறீங்கன்னு என் வீட்டுக்காரி சொன்னா. மணி எப்படி நல்லா வச்சுக்கிறாப்பிலயா? ரொம்ப நாளா அவனப் பத்தி ஒரு சந்தேகம் மாமா. அப்பா, அம்மா கிட்ட கூடப் பேசாம, சுனை சாமியார் மாதிரி திரியுறான்னு எல்லாரும் வருத்தப்பட்டாங்க. தோப்புக்குள்ளே, சொந்தக்காரங்க யாரும் வருவதில்லை; போவதில்லை, அதனால தோட்டத்திலே அவன் நடவடிக்கைகள் எதுவும் இங்கே இருக்கிறவங்களுக்குத் தெரியல. தோட்டத்தில் மணி எப்படி மாமா? எல்லோரையும் போல நல்லா பேசுவானா? சந்தோசமா இருக்கிறானா?” எனக் கேள்விகளை அடுக்கி வைத்தான் சரவணன்.

கேள்விகள் அவர் மனதிற்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. லேசாக நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

“மேலே இருக்கிறாளே சுனையம்மன், அவளுக்குத் தெரியும் எல்லாம்; தோட்டத்திலே என்ன நடக்குதுன்னு. நம்ம முன்னாடிப் போறவனுக்குச் செஞ்சா, நமக்கு நம்ம பின்னாடி வர்றவன் செய்வான். இது தான் உலகம். சமநிலை நீதி, அவன் வாழ்ற வாழ்க்கைக்கு, அவன் என்ன பண்ணான்னு யாருக்குத் தெரியும்?” என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து படிக்கட்டின் இடதுபுறம் விரித்தார்.

மெல்ல உடலைச் சாய்த்து கொண்டே மீண்டும் அவரே பேசத் தொடங்கினார்.

”பசுந்தோல் மாப்பிள வெளில… உள்ள புலிக்கூட்டமே தெரியுது. பணமும், சுகமும் தேடும் புலிகள். புரிஞ்சுக்கங்க மாப்பிள்ளை அவ்வளவுதான்”

அப்படியே, தன் உடலை மெல்ல சாய்த்து தூங்க ஆரம்பித்தார் மாமா.

யாரிடமும் அதிர்ந்து கூட பேசாத மாமா, ஏன் இவ்வளவு வார்த்தைகளைக் கடுமையாகப் பேசுகிறார் என்று தெரியவில்லை. எப்பொழுதும் இன்னொருவரைக் குறித்து, அவர் இவ்வாறு பேசியதே இல்லை. துன்பப்படும் எல்லா நிலைகளிலும் யாரையும் குறைத்துப் பேசுவதும் இல்லை.

ஆமாம், தோட்டத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? நடந்து விட்டது?

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
chandrakavin@gmail.com
9283275782

 

3 Replies to “சுனை சாமியார் – சிறுகதை”

  1. சுனை சாமியார் சிறுகதை முற்றிலும் அருமை. சுனை என்பது மலைகளில் தேங்கி நிற்கும், சுரக்கும் நீர். மலை விலங்குகளுக்கு தாகங்களை தணிக்கும் ஒரு நீர் ஆதாரமாக அமைந்து இருக்கும். இங்கே கூறப்படும் சாமியாரும் யாரோ ஒருவருடைய தேவையை பூர்த்தி செய்யும் துணையாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

    சாமியார் என்று அவர்களுடன் ஒப்பிட்டு சுனையாம்மா சிலை போல யாருடனும் பேச மாட்டார் என்பதே, கடவுளின் முற்போக்கு சிந்தனைகளை பதிக்கும் தடங்களாக எழுத்தாளர்களின் வரிகள் அமையப் பெற்றிருக்கிறது.

    இக்கதையில் வரக்கூடிய முக்கிய கதாபாத்திரம் வெளிப்படையாக இல்லாமல், பிற கதாபாத்திரங்களின் வாயிலாகவே சாமியாரை பயணிக்க வைத்திருக்கும் சிறுகதை ஆசிரியர் முனைவர் சந்திரசேகர் அவர்களின் கலைநுட்பம் மிகவும் அழகாக இருக்கிறது.

    குறிஞ்சி நில பொழுதை பற்றி பேசுகையில் நம்மையே அந்த மலைக்கு கூட்டிச்செல்லும் கற்பனை வளமாக கதைகளில் வரிகள் அமையப் பெற்றிருக்கிறது.

    மேலும் சிறுகதையின் இறுதி முடிவை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்று அமையப் பெறும் வகையில் வாசகர் கையில் முடிவை எழுத்தாளர் தந்திருப்பது மிகவும் அருமை.

    சிறுகதையின் முடிவை கதைக்குள்ளேயே ஒளித்து வைத்து, அதை வாசகர்களை கண்டு பிடித்துக் கொள்ளட்டும் என்பதற்கான முடிச்சு அவுழ்க்கும் தடம்தான் “பசுத்தோல் போர்த்திய புலிகளைப்” பற்றிய வரிகள்.

    தனஞ்செழியன் மு
    பாக்கம், சென்னை.
    8778998348

  2. அருமை அய்யா!
    ஒரு நீரோடை போன்ற எழுத்து நடை
    அடுத்து அடுத்து வாசிக்க வைக்கும், ஓர் ஆச்சர்ய தகவலுக்கு
    வாசகனை நகர்த்தி செல்லும் லாவகம்…
    ஆமாம்
    தோட்டத்தில் என்னதான் நடந்தது…
    அங்கே பசுவா புலியா?
    வாசகனை விசாரிக்க வைத்துவிட்டீர்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.