சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ படித்த நாளில் இருந்தே நான் பார்க்கத் துடித்த, சு.வெ என தமிழ் இலக்கிய உலகம் அறியும் சு. வெங்கடேசன் அவர்களின் உரை “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

“புத்தகத் திருவிழாவின் சின்னமாகிய சாம்பல் நிற அணில், அதுவும் வாசிப்பதற்கு வசதியாக கண்ணாடி அணிந்த அணில் நிச்சயமாக ஒரு நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவரால்தான் வடிவமைத்து ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கும்” எனத் திருவிழாவின் நாயகன் நம் மாவட்ட ஆட்சியர் அவர்களை செல்லமாக கலாய்ப்பது போல ஆரம்பமான சு.வெங்கடேசன் உரை, அரை மணி நேரம் அரங்கு நிறைந்த அந்த அறிஞர் சபையினை ஆட்சி செய்தது.

சேது பாலம் அமைக்க உதவிய அணிலுக்கு முதுகில் மூன்று கோடுகள் ஸ்ரீ இராமபிரான் போட்ட அத்தியாயம் 12ம் நூற்றாண்டில் கவி சக்கரவர்த்தி கம்பரால் எழுதப் பட்டது. வால்மீகி இராமாயணத்தில் இந்தக் காட்சி இல்லை.

மேலும் வில்லிபுத்தாரார் பாரதம் குருச்சேத்திரப் போரின் வெற்றியுடன் முடிந்து விடும் என்று கூறி அதன் மேன்மைகளை எடுத்துக் கூறினார்.

மனதின் பாங்கினைக் குறித்து இவர் சொன்ன மகாபாரதக் காட்சி மிகவும் அருமை.

மயன் எழுப்பிய பளிங்கு மாளிகையினைக் காண பாண்டவர்கள், கவுரவர்கள் மற்றும் கிருஷ்ணர் முதலானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

மாளிகையின் மையப்பகுதியில் ஒரு பெரிய கண்ணாடி ஒரு துணி கொண்டு மூடிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

அனைவரும் மயனிடம் அது குறித்து ஆர்வமாகக் கேட்டனர்.

மயன் அவர்களிடம், “இது ஒரு வித்தியாசமான அழகான கண்ணாடி. பார்ப்பவருடைய முகத்தினைக் காட்டாது. அதற்குப் பதிலாக அவர்களின் ஆழ் மனதில் இருப்பவரைக் காட்டும் வல்லமை கொண்டது. வாருங்கள் கண்ணாடியினைப் பார்க்கலாம்” என அழைத்தான்.

இந்த விவரம் அறிந்தவுடன் அனைவரும் கண்ணாடியினைப் பார்க்க மறுத்தனர்.

நீண்ட நேரத்துக்குப் பின் அர்ஜுனன் சம்மதித்தான். என்ன ஆச்சர்யம் அவன் ஆழ் மனதில் கிருஷ்ண பரமாத்மா காட்சியளித்தார்.

அடுத்ததாக அனைவரும் கிருஷ்ணரை கண்ணாடி பார்க்க வற்புறுத்தினர்.

கிருஷ்ணருக்கு தர்மசங்கடமான நிலை. மனைவியர் நால்வரும் ‘கிருஷ்ணனின் ஆழ்மனதில் யார் குடி இருக்கிறோம்?’ என அறியும் ஆசையில் கிருஷ்ணரை கட்டாயப்படுத்தினர்.

கிருஷ்ணன் எவ்வளவோ மறுத்தும் மனைவியர் விடவில்லை.

வேறு வழி தெரியாமல் கிருஷ்ணர் கண்ணாடியின் முன் வந்து நின்றார். துணி விலக்கப்பட்டது.

அங்கே கிருஷ்ண பரமாத்மா ஆழ் மனதில் இருந்த உருவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அங்கே தெரிந்தது சகுனியின் முகம்.

இரண்டு தாய் மாமன்களின் போட்டி மற்றும் வெறுப்பினால் உருவானதுதான் மகாபாரதப் போர்” என சு. வெ சொன்ன போது அரங்கமே அதிரும் அளவுக்கு கை தட்டல்.

‘காகம் கரைந்தால் விருந்தாளி வருவார்கள்’ இது காலம் காலமாக நம் பழக்கத்தில் இருக்கும் சொலவடை.

இந்தக் காகக் கதைக்கும் வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம்? வரலாறு எப்படி கதையானது என்பதனை கீழ்கண்டவாறு சுவைபடக் கூறினார்.

4000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து சமவெளிக்கும் எகிப்திய மெசபடோமியாவுக்கும் கடல் வழி வணிகத் தொடர்பு இருந்துள்ளது.

அந்தக் காலக் கட்டத்தில் ஆழ்கடல் மார்க்க கப்பல் போக்குவரத்து எல்லாம் கிடையாது.

பாய்மரக் கலங்கள் கரையினை ஒட்டியே செல்லும் விதமாகத்தான் கடல் வழிப் போக்குவரத்து இருந்துள்ளது.

சில சமயங்களில் காற்று திசை மாறி வீசுவதலோ அல்லது புயல் தாக்குவதனாலோ சில கலங்கள் நடுக்கடலுக்குள் சென்று விடுவதுண்டு.

நான்கு பக்கமும் கடல் சூழ்ந்த இந்தத் தருணத்தில் மாலுமிகளால் கடல் கரைகள் இருக்கும் திசைகளை அறிய முடியாது.

இந்த மாதிரி சூழல்களில் இருந்து மீள்வதற்காக ஒவ்வொரு மாலுமியும் தங்கள் கலங்களில் ஓரு கூண்டில் காகங்களை அடைத்து வைத்திருப்பார்கள்.

காகங்களை திறந்து விட்டால் அவை அருகில் உள்ள கரைகளை நோக்கி பறக்க ஆரம்பிக்கும். அதன் மூலம் கரை இருக்கும் திசை அறிந்து மாலுமிகள் தங்கள் கலங்களை கரை நோக்கி செலுத்துவர்.

சிந்து சமவெளி மற்றும் மெஸபடோமியா நாகரிகங்கள் அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொணரப்படும் போது பாய்மரக்கலத்தில் ஒரு மாலுமி காகத்தினை பறக்க விடுவது போன்ற முத்திரை ஒன்றினைக் கண்டனர்.

அதன் மூலம் காகங்கள் கரைகளை அறிய பயன்படுத்தப் பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும் எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளில் காகங்கள் கிடையாது. எனவே அவை சிந்து சமவெளி வணிகர்களால் கண்டு பிடிக்கப்பட்ட ஓரு உபாயம் எனவும் உணரப்பட்டது.

இந்த வரலாற்று கருத்து எப்படி கதையானது? என்பதை அவர் மேலும் சுவாரசியமாக விளக்கினார்.

கடற்கரையில் ஒரு பெண் நடுக்கடலில் இருந்து காகம் கரைக்கு வருவதைக் கண்டாள்.

உடனே ‘இன்று கப்பல் கரைக்கு வரும். அதில் விருந்தினர் (அயல் நாட்டவர்) வருவார்கள்’ எனக் கூறினாள்.

‘காகம் கரைந்தால் விருந்தாளி வருவர்’ என்ற இந்தக் கதையின் தொடக்கம் 4000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இது வழக்கத்தில் சொல்லி சொல்லி தொடர்ந்து வந்துள்ளது.

அடுத்ததாக அவர் அருப்புக்கோட்டை அருகே அமைந்துள்ள ‘குரண்டி’ என்ற சிறிய ஊரின் பெருமையினை எடுத்துரைத்தார்.

சமணர் காலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிக்கூடம் அமைத்து அவர்கள் அறம் வளர்த்தார்கள்.

அவர்கள் இருந்த இடங்களில் எல்லாம் பள்ளி அமைப்பது வழக்கம்.

அவர்கள் காலத்து குகை சிற்பங்களை நாம் இன்றும் மதுரை சுற்றி உள்ள பகுதிகளில் மற்றும் கழுகுமலைப் பகுதியில் காணலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட சமணர் கால கல்வெட்டுக்களிலெல்லாம் இருக்கும் ஒரு வார்த்தை இந்த சிற்பத்தை வடித்த நான் “குரண்டி”….. ஆசானின் மாணவன் என்பதுதான்.

எப்படி புத்த பல்கலைக்கழகம் நாளந்தாவில் செயல்பட்டதுவோ அதுபோல ஒரு சமண பல்கலைக்கழகம் குரண்டியில் செயல் பட்டு வந்திருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் ஏற்பட்ட சைவ, வைணவ கலவரங்களில் ‘குரண்டி’ நிர்மூலமாக்கப்பட்டிருக்கலாம்.

கிட்டத்தட்ட அந்த நேரத்தில் 8000 சமணர்கள் கழுவில் ஏற்றி கொல்லப்பட்டிருக்கலாம் என பதிவு செய்தார்.

நிறைவாக , இயற்கையானது, உடல்வாகு, அழகு ஏன் நோயினைக் கூட மரபு வழியில் வாரிசுகளுக்கு கடத்தி விடுகிறது. ஆனால் ஒருவரின் அறிவினை இயற்கையினால் அவ்வாறு கடத்தி விட முடியாது.

மரபு வழியில் அறிவார்ந்த சிந்தனைகளை தனது எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்வதற்கு மனிதன் கண்டறிந்த அதிசயம்தான் “புத்தகங்கள்” எனக் கூறி சு.வெங்கடேசன் உரை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஐ. லியோனி அவர்களின் பட்டிமன்றம் ‘உறவா? நட்பா?’ எனும் தலைப்பில் நடந்தது.

நகைச்சுவையுடன் கூடிய விவாதம்.

‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல
இன்றும் எனக்கும் என் போன்றோருக்கும் மிகவும் இனிமையான மகிழ்ச்சியான நாள்.

நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் மிக்க நன்றி.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.