செந்திலும் நானும் – சிறுகதை

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் என்கிற இயற்பியல் கோட்பாட்டின்படி தான் எனக்கும் செந்திலுக்குமான பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு பேச்சே பிரதானம், செந்திலுக்கு மௌனமே மூலதனம்.

கடவுள், காதல், கவிதை, இலக்கியம், சினிமா என்று எல்லாமே எனக்கும் செந்திலுக்கும் நேர் எதிர் ரசனைகள்; வாழ்வியல் நடை முறைகள்.

எங்களுக்குள் பொதுவாய் இருப்பது ஒன்றே ஒன்றுதான் அது பாகற்காய் சமையல்.

நானும் செந்திலும் ஒரே சமயத்தில் தான் இந்த கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தோம்.

பக்கத்துக் கிராமத்தில் மாடிப்படிக்கு கீழே உள்ள ஒரு இடத்தை சுவர் வைத்து அடைத்து அதை ஒரு அறை என்று கூறி எங்களுக்கு வாடகைக்கு விட்டான் ஒருவன்.

ஜன்னலற்ற அந்த அறையில் ஒருவர் நுழைந்தால் மற்றொருவர் வெளிவந்து விடவேண்டும். காற்று புகமுடியாத அந்த குகையில் செந்திலும் நானும் கொஞ்ச நாள் சிறை பட்டுக் கிடந்தோம்.

அந்தச் சிறைதான் எனக்கும் செந்திலுக்குமான ஒரு பிரத்யோக ஒரு வான் வெளியை அமைத்து தந்தது.

செந்திலுக்கும் எனக்கும் 22 வயசு வித்தியாசம். இந்த கல்லூரியில் வேலை செய்யும் அனைத்து ஆசிரியர்களும் என்னில் பாதி அல்லது அதற்கும் குறைவான வயது உடையவர்களே. எல்லோருக்கும் நான் அப்பா, சித்தப்பா.

ஆனால் இதையெல்லாம் மீறிய ஒரு மெல்லிய ஒரு உறவு எந்த அலங்காரமும் இல்லாமல் செந்திலுக்கும் எனக்கும் இருக்கிறது

வறுமை தாளாமல் சிறு வயதில் வீட்டைப் பிரிந்து பட்டாளத்தில் போய் நான் பட்ட துயரங்களை எல்லோரிடமும் சொல்லி அனுதாபம் தேடிக் கொள்வேன். செந்திலின் கதையை கேட்ட பின்பு என்னுடைய படம் முடிந்துவிட்டது.

செந்திலின் வாழ்க்கை போராட்டம் மூன்று வயதில் அப்பாவை பறிகொடுத்ததிலிருந்து தொடங்கி விட்டது.

செந்திலின் அம்மா, அக்கா என்ற சிறிய குடும்பம், வீடு, வாசல், நில புலம், என பொருளாதார பலமின்றி, உறவு, நட்பு என்ற மனிதர்கள் ஆதரவும் இன்றி ஒரு பெரிய இருள்வெளியில் வீழ்ந்து விட்டது. அந்த இருளில் இருந்து மீளும் போராட்டமானது இன்னமும் தொடர்கிறது.

செந்திலின் மூன்று வயது முதல் முப்பது வயது வரையிலான அந்த காலக்கட்டம் விவரிக்க முடியாத வேள்வி. செந்தில் சிறுவனாய், இளைஞனாய், தம்பியாய், மகனாய் பட்ட துயர் எல்லாம் எழுதி மாளாது.

செந்திலுக்கு அன்றிலிருந்து இன்று வரை இருக்கும் ஒரே ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் என்னவென்றால் அவரின் அம்மா என்கிற இரும்பு பெண்மணி. செந்திலின் அம்மா கடவுளால் செந்திலுக்காக பிரத்தியோகமாக பூமிக்கு அனுப்பப்பட்ட தேவதை.

சேலத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து எழுத படிக்க தெரியாத, எந்த ஆண் துணையும் இல்லாத ஒரு பெண் தன் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து, மகனை முனைவர் பட்டம் பெறச் செய்து, கல்லூரி பேராசிரியராக உருவாக்கி, சென்னைக்கு அனுப்பி, அவன் என்ன படிப்பு படித்திருக்கிறான், என்ன வேலை செய்கிறான் என்ற விபரம் கூட தெரியாமல், எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் இன்னமும் கிராமத்துக் காடுகளில் செருப்புக்கூட போடாமல் தன்னை உருக்கி கொண்டிருக்கிறாள் என்றால் அது சாதாரண மனித கணக்குகளில் அடங்காத தவம்.

33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும், மொத்த உடலும் வெளியில் தெரிய உடை வேண்டும், அதுதான் பெண் விடுதலை என்று கொடி பிடிக்கும் சில மாதர் குல மாணிக்கங்களுக்கு மத்தியில், தன் மூன்று வயது மகனை ஆண் துணையாகக் கொண்டு வெயிலில் கருகி, மழையில் கரைந்து களமாடி ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிய செந்திலின் அம்மா நிச்சயமாக ஒரு வேற்று கிரகப் பெண்தான்; கத்தி, கவசம் மற்றும் குதிரையற்ற ஒரு ஜான்சி ராணி. இடுப்பில் செந்திலை கட்டிக் கொண்டு சமர் செய்யும் புது யுகத்தின் போராளி.

‘முண்டை வளர்த்த பிள்ளை தண்டம்’ என்று கிராமத்தில் இனி யாராவது பழமொழி சொன்னால் தாராளமாக சுட்டுக் கொன்றுவிடலாம்.

செந்திலின் அம்மாவுக்கென்று தனியான வாழ்க்கை இல்லை, செந்தில்தான் உலகம், செந்தில் காட்டும் திசையே கிழக்கு, தொலைபேசியில் பேசும்போது கூட, “எனக்கென்னப்பா, நல்லா இருக்கிறேன். செந்திலை பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதைத் தவிர வேறு விண்ணப்பங்கள் எதுவும் இருக்காது.

செந்திலுக்கும் உலகம் அம்மாதான், செந்திலுக்கு அன்பையெல்லாம் வெளிக்காட்டத் தெரியாது.

உள்ளே உருகி மருகி நிற்கும், அம்மாவுக்கும் பிள்ளைக்குமான பகட்டில்லாத சம்பாஷணைகள்; அம்மாவின் அருகாமைக்காக ஏங்கும் செந்தில் எல்லாம் ஓராயிரம் கவிதைகளுக்குச் சமம்.

செந்தில் அம்மாவின் தியாகம், கடும் உழைப்பு இரண்டும் செந்திலை நல்வழிப்படுத்தியுள்ளது. வறுமையிலும் செம்மை, நெறி தவறாமை என்று செந்திலை ஒரு டீ டோட்டலராக உருவாக்கிவிட்டுள்ளது.

அதிகம் பேசாத, சிரிக்காத செந்தில் என்னும் சுரங்கத்தைத் தோண்டினால் நிறைய தங்கங்கள் கிடைக்கும்.

அப்பா இறந்து 27 வருடம் கழித்து அவர் மரணச் சான்றிதழை வாங்கியது, கை ரேகை வைத்துக்கொண்டிருந்த தன் அம்மாவை நான்கே நான்கு கோடுகள் மூலம் ஆங்கிலத்தில் கை எழுத்து போட வைத்து மொத்த ஆசிரியர்களையும் அசத்திய கதையெல்லாம் வேற லெவல்.

கணக்கில் சூரப்புலியான செந்தில் ஆங்கிலத்தில் தடுமாற அத்தனை டீச்சர்மார்களும் ஒன்று சேர்ந்து ஒரு திட்டம் வகுத்து பொதுத்தேர்வில் செந்திலை ஆங்கிலத்தில் வெற்றி பெறச் செய்தது,

பிளஸ் டூ முடித்துவிட்டு அரசுகல்லூரியில் இடம் கிடைக்காமல் விவசாய வேலைக்கு போக நினைத்த செந்திலின் முடிவையும், அம்மாவின் அழுகையும் நொடியில் மாற்றிய கல்லூரியில் இருந்து வந்த கடைசி நிமிட போன்கால்,

பி.காம் முதல் பி.எச்.டி வரை தாக்கு பிடித்து நின்றது,

டீ, காபி சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து தன் மகனைப் போல் பாவித்த பி.எச்.டி கைடு என்று செந்திலின் வாழ்வில் ‘விளிம்பில் நிகழ்ந்த அற்புதங்கள்‘ ஏராளம்.

இந்த கல்லூரியில் ஆரம்பத்தில் எங்களுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. சேர்ந்த மறுவாரமே இந்த கல்லூரியை விட்டு போய்விடலாம் என முடிவெடுத்தோம்.

ஒருநாள் காலை யாருக்கும் தெரியாமல் போய் எச்.ஆர் அலுவலகத்தில் எந்த விபரமும் தெரியாமல், ஒரு சிறுபிள்ளை போல் எங்கள் சான்றிதழைக் கேட்டது,

‘அங்கு சான்றிதழ் திரும்பி வாங்குவதும் இமயமலை ஏறுவதும் ஒன்று’ என்று எங்களை விட குறைவான வயதுள்ள ஒரு தம்பி எங்களுக்கு அறிவுரை சொல்லி திருப்பி அனுப்பியது,

மிஷன் பெயில் ஆன சோகத்தில் எதிரே உள்ள கேன்டீனில் தோசை சாப்பிட்டு மனதை தேற்றிக் கொண்டு வந்து இந்த ஜோதியில் ஐக்கியமானது,

எல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பையும் வேதனையையும் சிந்திச் செல்கின்றன.

கொஞ்ச நாள் வரை எங்களுக்கு உட்கார இடம் கூட இல்லை, எனக்கு மட்டும் ஒரு உதவிக்கரம் நீண்டது, பின்னர் ஒருவழியாக நானும் செந்திலும் ஒரே அறையில் இருக்கை போட்டு எதிரெதிரே அமர்ந்து கொண்டோம்.

அன்று ஆரம்பித்தது ஒன்றாக மதிய உணவு சாப்பிடும் பழக்கம், ஏகாந்த நிமிடங்கள் அவை.

பெரும்பாலும் நாங்கள் அதிகம் ரசித்து ருசித்து சாப்பிடுவது பாகற்காய் தான். நாடி நரம்பெல்லாம் கசப்பு பரவிக் கிடப்பதால் எங்கள் இருவருக்கும் பாகற்காய் கசப்பதே இல்லை.

கல்லூரி முடிந்த பின்பும் எங்கள் இருப்பை ஒன்றாகவே கழித்தோம். அப்போது நாங்கள் பெண்கள் அதிகம் நிறைந்திருந்த ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தோம்.

ஆரம்பத்தில் எங்களைப் பார்த்து பயந்த அவர்கள் பின்னர் தயங்கி தயங்கி பழகினார்கள். அவர்களுக்கும் செந்திலை ரொம்பவும் பிடித்து விட்டது.

தண்ணீர் பிடிப்பது, கதை பேசுவது, பாத்திரம் கழுவுவது, வெள்ளிக் கிழமையானால், தலைக்கு குளிக்க சொல்வது, வீட்டை கழுவி கோலம் போடுவது, மழை வந்தால் துணிகளை எடுத்து வைப்பது என்று எங்களை ஆண் என்று ஒதுக்கி வைக்காமல் அவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார்கள். நைட்டி மட்டும்தான் போடச் சொல்லவில்லை.

ஒரு நாள் நண்பர் ஒருவர் எங்கோ குடித்து விட்டு எங்கள் ரூமில் வந்து அமர்க்களம் செய்தது, மறுநாளில் தண்ணீர் பிடிக்கும் இடத்தில வைத்து எங்களுக்கு விழுந்த உரிமை கலந்த டோஸ் எல்லாம் மறக்கவே முடியாத அன்பின் நினைவலைகள்.

இப்போதும் செந்தில் நெருப்பாற்றில்தான் நீந்துகிறார். வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை வரும் பல தடங்கல்கள், பணத்தட்டுப்பாடு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் செந்திலின் சிரிப்பை சிறை வைத்திருக்கின்றன.

எல்லாவற்றையும் விட பெரிய சமாச்சாரம் தள்ளித் தள்ளி போய் கொண்டிருக்கும் செந்திலின் திருமணம்.

‘எப்போது கல்யாணம்? எப்போது கல்யாணம்?’ என்று ஆதியும் அந்தமும் தெரியாமல் சிலர் தொடர்ந்து கேட்கும் சம்பிரதாய சமூக கேள்விகள் இப்போது செந்திலுக்கு பழகி விட்டது. வலி நிறைந்த புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு நகர்ந்து விடுகிறார்

அம்மாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று செந்திலும், செந்திலுக்குப் பிடித்த, ஜாதக பொருத்தமுள்ள பெண்ணை அவர் அம்மாவும் தேடித் தேடி ஓய்கிறார்கள். யார் அந்த தேவதை? என்று தெரியவில்லை.

ஒருநாள் செந்திலின் தேவதை வந்து செந்திலின் கைகளை பற்றிக் கொள்வாள். அன்று லேசான மழை பொழியும். ஈரக்காற்று வீசும் ஓரிரு மலர்கள் உதிரும். நான் அவளுக்காக ஒரு கவிதையும், ஒரு பை நிறைய பரிசுகளையும் கொடுப்பேன்.

செந்திலின் திருமண நாளில் நான் வேட்டி கட்டிக் கொள்வேன். எப்போதும் போல் வேட்டி இடுப்பில் நிற்காமல் அவிழ்ந்து விழும். என் மனைவி தலையில் அடித்து கொண்டு வெட்கமுறுவாள்.

கல்லூரி முடிந்த பின் முதல்வர் அலுவலகத்தில் நானும் செந்திலும் அவருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்போம். அதற்கு பல பேர் பல கதை சொன்னார்கள்.

பச்சை தண்ணீர் கூட சலுகையில் பெற விரும்பாத செந்திலும் நானும் முதல்வரிடத்து என்ன சலுகை பெறப் போகிறோம்? நல்ல வேளை கல்லூரி முதல்வர் பெண் இல்லை.

செந்தில் இந்த கல்லூரியை விட்டு போவது என்பது முன்பே எடுத்த முடிவு. கொரோனாவால் அதை செயல்படுத்த அவருக்கு மூன்று வருடங்களாகி விட்டது. ஆனால் வேறு ஏதோ காரணத்தால்தான் போய்விட்டார் என்று ஒரு திரைக்கதை எழுதினார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை.

போனில் செந்திலிடம் சொன்னேன், எப்போதும் போல் ஒரு வெறுமை சிரிப்பை உதிர்த்தார். பேச்சு தொடர்ந்தது.

“என்ன சாப்பாடு?” என்று கேட்டார்.

“பாகற்காய்” என்று சொன்னேன்.

அவரும் “பாகற்காய்” என்றார்.

அன்பை போதித்த இயேசு பிரானை சிலுவையில் அறைந்தார்கள். ‘அஹிம்சை அஹிம்சை’ என்று திரிந்த காந்தியை நெஞ்சில் சுட்டார்கள். சீதையை நெருப்பில் தள்ளினார்கள். செந்தில் எம்மாத்திரம்?

என்னுடய ராசிப்படி நான் யாரை ரொம்பவும் நேசிக்கிறேனோ அவர்கள் பிரிந்து போய்விடுவார்கள். இல்லை ஏதோ காரணத்தினால் நானே விலகிவிடுவேன்.

நான் எது சொன்னாலும் என் அம்மாவைப்போல் அப்படியே ஆமோதிக்கிற, எனக்காக இலக்கியம் படித்த, நான் எழுதிய கதைகளை வாசித்து விட்டு அழுத, ஒரு கடுகு அளவுகூட மன வருத்தம் இல்லாது என்னை வளைய வந்த, என் மனைவி பிள்ளைகளுக்கு பிடித்தமான சாந்த சொரூபி. என் அன்பு இளவல் செந்தில்.

சட்டென்று கல்லூரியை விட்டு போய்விட்டார். இனி செந்திலும் நானும் இணைவது சாத்தியமா? என்று தெரியவில்லை.

டி.வி சீரியலில் வருவது போல் ‘இவருக்கு பதில் இவர்’ என்று செந்திலுக்கு மாற்றாக இங்கு யாரிடமும் என்னால் நெருங்க முடியவில்லை. இது எனக்கு நீண்ட நாள் தீராத வியாதி. தீரவும் வேண்டாம்.

கல்லூரியில் வகுப்பெடுப்பது அல்லது ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும், எப்போதும் நான் மேலுக்கும் கீழுமாய் மாடிப்படிகளில் அலைந்துகொண்டே இருப்பேன்.

‘வயதாகி விட்டது, இருக்கையில் கொஞ்ச நேரம் உட்காரச் சொல்லி’ செந்தில் கடிந்து கொள்வார்.

இப்போதெல்லாம் மாடிப்படி ஏறும் போது எனக்கும் மூச்சு வாங்குகிறது; ரொம்ப பலகீனமாகி, மனது உடல் எல்லாம் சோர்ந்து கிடக்கிறது. ‘கொஞ்ச நேரம் சீட்டில் அமர வேண்டும்’ என்று தோன்றுகிறது. ஆனால் செந்தில் இல்லை.

இந்தக் கதையை எழுதும் போது ஏனோ தெரியவில்லை என் அம்மா ஞாபகம் பிடுங்கித் தின்கிறது…

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

4 Replies to “செந்திலும் நானும் – சிறுகதை”

  1. தூய்மையான நட்பு என்பது எம்பத்தியின் (Empathy – அடுத்தவர் இடத்தில் இருந்து பார்த்தல்) அம்சமாகும். அதனால் தான் அவர்களுக்காக யோசித்து அவர்கள் மீது இருக்கும் அன்பும் அக்கறையும் நமக்கு நம் மீது இருக்கும் அளவுக்கு இருக்கும்.

    கதை ஓட்டம் நய்யாண்டி மற்றும் வலியின் கலப்பு. வார்த்தைகள் எளிதில் புரியலாம். ஆனால் அர்த்தம்..?

    கதை இருக்கட்டும். தலைப்பு செந்திலும் நானும் என்று இருந்ததே தவிர நானும் செந்திலும் என்று இல்லை. இதுவே போதும்… அவர்கள் நட்பு உன்னதமானது.

    ஆசிரியர் தன் நண்பனைக் பற்றிய சிந்தனையில் லயித்து இருக்கட்டும். தொந்தரவு செய்ய மனமில்லை. நான் என் பழைய நண்பனிடம் பேசப்போகிறேன்…

  2. ரொம்ப நல்லா எழுதுறிங்க பா
    அன்னக்கிளி மாதிரி இந்த கதையும் ரொம்ப நல்லா வந்திருக்கு.
    சாதாரண நட்பு தான் ஆனா அத நீங்க கொண்டாடுற விதம் நிஜமாகவே வித்தியாசமா இருக்கு.
    உங்க கூட சேர்ந்து நானும் இதுமாதிரி எழுத ஆரம்பிச்சிட்டேன், சந்தோசும் எழுதுறான்.
    நெஜமாவே உன் உடம்பு கெட்டுப் போகுது அது மட்டும் பாத்துக்கோங்க..

  3. நட்பைக் கொண்டாட முடியுமா?

    உள் உணர்வுகளைப் பிசையும் நட்பின் ஆழம், விசாலமான வலியை உண்டாக்கிப் பிரிதலை எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கிறது. நியாயமான மனம் ஒன்று, இன்னொரு நியாயமான மனதோடு ஒட்டி உறவாடும் நட்பைக் கேவலமாக மாற்றும் இவ்வுலகில், தூக்கிக் கொண்டாடும், தலைமேல் வைத்து ஆடும் இப்படிப்பட்ட நட்பும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறது.

    அழியாத நினைவுகள் வடுக்கலாக மாறிவிடும். அது என்றும் மாறாத சுவர் ஓவியங்களைத் தீட்டி விட்டுச் செல்லும்.
    பசுமையான சோலைகளையும், இளம் காற்றையும், மென்மையான வருடலையும் அது எப்பொழுதும் நட்பு உலகில் சுவாசிக்கச் சொல்லும்.
    ஆனால், அந்த மெல்லிய உணர்வுகளை இலக்கியமாக மாற்ற முடியுமா? அப்படி மாற்றினால் பிறராலும் ரசிக்க முடியுமா? என்ற சந்தேகத்தில் தான் பெயரைக் கூறாமல் சங்க இலக்கியங்கள் கிட்டதட்ட 600 ஆண்டு காலம் இலக்கியங்கள் எழுதின.

    ஆனால், பெயர் கூறியும், புற இலக்கியமாக இல்லாமல் ஆழமான அக இலக்கியமாக நட்பை, நட்பின் ஆழத்தை, நட்பின் உள்ளார்ந்த சுகத்தை, இலக்கியமாக மாற்றித் தந்திருக்கிறார் முனைவர் வீரமணி.

    மிகச்சிறந்த உணர்வு வெளிப்பாட்டாளர்.
    இவ்வளவு நன்மையாக, உண்மையாக, முழுமையாக, நுண்மையாக நட்பை வெளிப்படுத்திய சுகவாசி வேறு யாராக இருக்க முடியும்?
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.