செல்வமகள் – சிறுகதை

“அம்மா… அம்மா …”

“யாரு புள்ள அது?”

“ஏம்மா நான் தான் ரூபி”

“இரு புள்ள, இந்த வரேன்” என்று சொல்லிக் கொண்டு பெரிய வீட்டிலிருந்து ஒரு அம்மா வெளியே வந்தார்.

“என்ன ரூபி, அம்மா ஏதாச்சும் சொன்னாளா? அது என்ன கையில ஒரு சேவல வச்சிக்கிட்டு நிக்கிற?” என்று பெரிய வீட்டு அம்மா கேட்டார்.

“அது ஒன்னும் இல்ல பெரியம்மா, இன்னைக்கு குழுவுக்கு பணம் கட்டணுமா. கையில காசு இல்லையாம். இது கொடுத்துபுட்டு அம்மா காசு வாங்கியார சொன்னுச்சு.”

“அப்படியா; எம்புட்டு வாங்கியார சொன்னா?”

“அம்மா இத கொடுத்துப்புட்டு 400 ரூபாய் வாங்கி வர சொன்னிச்சி. அம்மாட்ட கொஞ்சம் காசு இருக்குதாம்.”

“அப்படியா! இந்தா பாருடி, அப்படியே கொல்லப் பக்கமா வந்து அதை கட்டி போட்டுட்டு காசை வாங்கிட்டு போ.”

“சரிங்க அம்மா” என்று சொல்லிவிட்டு சந்து வழியாக கொல்லைக்கு சென்று கோழியை கட்டி போட்டு விட்டு திரும்பவும் வாசலுக்கு வந்து நின்றாள் ரூபி.

பெரிய வீட்டு அம்மா பணத்துடன் வெளியே வந்தார்.

“இந்தாடி ரூபி பணத்தை வாங்கிட்டு போ. உன் அம்மாகிட்ட கொடுத்துப்புட்டு அவகிட்ட சொல்லு ‘பெரிய வீட்ல போட்ட வேலை போட்டபடி அப்படி அப்படியே கிடக்குதாம். குழுவுக்கு பணத்தைக் கட்டிப்புட்டு சீக்கிரமா வந்து வேலையை பார்க்க சொல்லு’ ஆமாம் நீ பள்ளிக்கூடத்துக்கு போகலையா?”

“இனிமே தானுங்க சாப்பிட்டுட்டு போகணும்.”

“சரி சரி நீ போய் கொடுத்துப்புட்டு சீக்கிரமா கிளம்பு. அப்படியே அம்மாவை சீக்கிரமா வர சொல்லிடு. என்ன சரியா?”

“ம்..ம்…ம்..” என்று தலையை அசைத்தவறே வெளியே சென்றாள்.

ரூபிக்கு ஏழு வயது ஆகிறது. அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

ரூபியின் அப்பா பாலகுரு இறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அவர் இருந்த வரையில் தன் மகளை செல்லமாக அதிக பாசத்துடன் வளர்த்து வந்தார்.

தன் மகளை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்து விட வேண்டும் என்று அவருக்கு ஆசை. திடீரென்று ஒரு நாள் இறந்து விட்டார்.

ரூபியை வளர்க்கும் முழு பொறுப்பும் இப்போது நிச்சயலட்சுமிக்கு வந்து சேர்ந்தது.

ரூபியின் அம்மா நிச்சயலட்சுமிக்கு வெளி உலகமே தெரியாது. பாலகுரு இருந்த வரையில் தன் வீடு தான் உலகம்; தன் குடும்பம் தான் கோவில் என்று வாழ்ந்து வந்தவள்.

பாலகுரு இறந்தபின் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் இருந்தது. பாலகுருவின் அம்மா வயதானவர் என்பதால் அவருக்கு வெற்றிலை பாக்குகூட நிச்சயலட்சுமி தான் வாங்கி தர வேண்டும். அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.

நிச்சயலட்சுமி பெரிய வீட்டில் வீட்டு வேலை பார்ப்பாள். அவர்கள் தருவதை வாங்கி கொள்வாள். அவர்கள் தரும் மீதம் உள்ள சாப்பாட்டில் தான் நிச்சயாலட்சுமியின் குடும்பம் வாழ்கிறது.

ரூபி பள்ளிக்கூடம் சென்றதும், நிச்சயலட்சுமி வயல் வேலைக்கு நாத்து நடவும், களை பறிக்கவும் செல்வாள். அவ்வளவுதான் இந்த வேலைகளில் வரும் வருமானத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தியாக வேண்டும்.

தன் கணவர் பாலகுரு இறப்பதற்கு முன், ரூபி பிறந்தவுடன் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்துக் கொண்டிருந்தாள் நிச்சயலட்சுமி. கஷ்டத்திலும் அதனைத் தொடர்ந்தாள்.

மாதங்களும் வருடங்களும் கரைந்து கொண்டிருந்தன.

ரூபி எப்படியோ கஷ்டத்திலும் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்கு ஆயத்தம் ஆனாள்.

“அம்மா …அம்மா… இந்த வருஷத்தோட என் படிப்பு முடிஞ்சிருச்சு. நான் பாஸ் ஆயிட்டேன். நல்ல மார்க்கும் வாங்கி இருக்கிறேன். இதற்கு மேலையும் படிக்க ஆசையா இருக்குது.” என்றாள் ரூபி.

“போதும்! போதும்! உன்னைய இதுவரைக்கும் படிக்க வைக்கிறதுக்கு நான் பட்டபாடு, பெரும்பாடு. இதற்கு மேலேயும் என்னால உன்னைய படிக்க வைக்க முடியாது. நீ இதுவரைக்கும் படிச்ச படிப்புக்கு தகுந்தார் போல ஒரு வேலையைத் தேடிக்கோ. உன்னைய இதுக்கப்புறம் கரை சேர்ப்பதற்கு என்னிடம் ஒண்ணுமே இல்ல” என்று சொல்லிவிட்டு பெரிய வீட்டிற்கு புறப்பட்டாள் நிச்சயலட்சுமி.

வாசலில் சைக்கிள் வந்து நின்றது. போஸ்ட் உமன் இறங்கினார்.

“இங்க யாருங்க நிச்சயலட்சுமி?”

வேலைக்கு சென்ற நிச்சயலட்சுமி நின்றாள்.

“ஏங்க நான் தான் …”

போஸ்ட் உமன் கையில் ஒரு கவரை கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிவிட்டு கிளம்பினார்.

நிச்சயலட்சுமி கவரை பிரித்தவரே வீட்டுக்குள் சென்று தன் மகள் ரூபியிடம் கொடுத்து “இது யார் கிட்ட இருந்து, எங்க இருந்து வந்திருக்குன்னு கொஞ்சம் படிச்சு சொல்லுமா” என்றாள்.

ரூபி முழுவதுமாக படித்துவிட்டு, “அம்மா அம்மா இது மத்திய அரசாங்கத்தின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. நீ ஏதும் போஸ்ட் ஆபீஸ் மூலமா செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஏதும் சேர்ந்து இருக்கிறயா?”

“ஆமாண்டி. ஆமா ஏன் அதற்கு என்ன? அது எதுவும் முடிந்து விட்டதா?” என்று கேட்டாள் நிச்சயலட்சுமி.

“அந்த சேமிப்பு திட்டம் நிறைவடைய நெருங்கிக் கொண்டு இருக்கிறதாம். இடையில் எதுக்காகவாவது படிப்புக்காகவோ கல்யாணத்துக்காகவோ ஊக்கத்தொகை ஏதேனும் தேவைப்பட்டால் தெரியப்படுத்தி பெற்றுக் கொள்ளவும்னு போட்டு இருக்குது.” என்றாள் ரூபி.

நிச்சயலட்சுமி வாழ்க்கையில் ஒளி பிறந்தது. ரூபியின் வாழ்க்கைக்கு வழி பிறந்தது.

நிச்சயலட்சுமி கண் கலங்கியவாறு தன் மனதுக்குள் நன்றி சொன்னாள் கடவுளுக்கு ….

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.