சேப்பங்கிழங்கு – வெப்பமண்டலத்தின் உருளை

சேப்பங்கிழங்கு நம்முடைய உடல் நலம் பேணும். எனவே தான் நம் முன்னோர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர்.

குழந்தைகளுக்கு இதனை அவித்து தோலுரித்து அப்படியே உண்ணக் கொடுப்பவர். இம்முறை நம்முடைய கலாச்சாரத்தில் பராம்பரியமானது.

சிலர் இதனுடைய வழுவழுப்புத் தன்மையால் இதனை வெறுப்பர். ஊட்டச்சத்து மிகுந்த இதனை அடிக்கடி நம்முடைய உணவில் பயன்படுத்துவது அவசியம்.

இக்கிழங்கினைப் பற்றிய முக்கியச் செய்தி இது தென்னிந்தியாவைத்
தாயகமாகக் கொண்டது என்பது தான்.

உருளைக்கிழங்கினைப் போன்ற சுவையுடன் சத்துக்களையும் கொண்டு வெப்பமண்டலங்களில் அதிகமாகக் காணப்படுவதால் இது வெப்பமண்டலத்தின் உருளை என்று அழைக்கப்படுகிறது.

இது ஆசியா, பசிபிக் நாடுகள், மேற்கு ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவின் அமேசான் பகுதிகள் ஆகிய இடங்களில் இது பராம்பரிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர் கொலோக்காசியா எஸ்குலென்டா என்பதாகும்.

சேப்பங்கிழங்கின் அமைப்பு மற்றும் வளரியல்பு

சேப்பங்கிழங்கு ஸ்டார்ச்சினை அதிகமாகக் கொண்டுள்ள நீண்ட உருளை வடிவ தண்டுக் கிழங்காகும். இது பெரிய செடிவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

இத்தாவரம் சுமார் 5-6 அடி வரை வளரும். இச்செடியில் இலைகள் தரைப்பகுதியிலிருந்து தோன்றுகின்றன.

இதனுடைய இலைகள் யானையின் காதுபோல் நீண்டு இதய வடிவில் காணப்படும். எனவே இது யானைக்காது கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

 

சேப்பங்கிழங்கு இலை
சேப்பங்கிழங்கு இலை

 

இச்செடி நன்கு வளர ஈரப்பதமான மண்வளமும், வெப்பமும் தேவை. நீர்நிலைகளுக்கு அருகில் நன்கு வளரும் தாவரங்களுள் இதுவும் ஒன்று.

இத்தாவரத்தில் பூக்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கும்.

 

சேப்பங்கிழங்குப்பூ
சேப்பங்கிழங்குப்பூ

 

சேப்பங்கிழங்கு தரைக்கு அடியில் நீண்ட உருளைவடிவில் காணப்படும். கிழங்கின் மேற்புறமானது கடிமான வளையங்களைப் போன்ற அமைப்புடன் பழுப்புநிறத்தில் 35 செமீ நீளத்திலும், 15 செமீ குறுக்களவு கொண்டும் இருக்கிறது.

 

சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு

 

சேப்பங்கிழங்கானது பயிர் செய்து 8-10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இச்செடியின் இலைகள் பழுத்து உதிர ஆரம்பிக்கும்போது அறுவடையை தயார்நிலையில் இருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

கிழங்கின் உட்புறமானது பயிரிடப்பட்டிருக்கும் கிழங்கின் வகையைப் பொறுத்து வெள்ளை, ஊதா, வெளிர் மஞ்சள், இளம்சிவப்பு நிறங்களில் இருக்கும்.

இக்கிழங்கு லேசான இனிப்பு சுவையினைப் பெற்று இருக்கிறது. இக்கிழங்கு வரலாற்றுக்கு முந்திய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று.

சேப்பங்கிழங்கின் வரலாறு

சேப்பங்கிழங்கின் தாயகம் தென்இந்தியா என்று கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து இது சீனா, மியான்மார், இந்தோனேசியா நாட்டிற்குப் பரவியது.

அங்கியிருந்து ஜப்பான், ஹவாய், மெலனேசியா, பொலினேசியா ஆகிய இடங்களுக்குப் பரவியது. வரலாற்று காலத்தில் இது எகிப்து, மத்தியதரைக்கடல் நாடுகள், ஆப்பிரிக்கா, கரீபின், பாப்பு நியூகினிவா உள்ளிட்ட இடங்களுக்குப் பரவியது.

வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் இது செழித்துப் பரவியது. இன்றைக்கு இது மேற்கு இந்திய தீவுகள், மேற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய சீனா ஆகிய இடங்களில் இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

இந்தியாவின் குறைந்த இடங்களில் மட்டும் பயிர் செய்யப்படுகிறது. பசிபிக் தீவுகள் மற்றும் பாப்பு நியூகினியாவில் இது நிரந்தர உணவாக உள்ளது.

சேப்பங்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சேப்பங்கிழங்கில் விட்டமின்கள் இ மற்றும் பி6 (பைரிடாக்ஸின்) அதிகளவும், விட்டமின் ஏ,சி, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவையும் உள்ளன.

இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன.

இக்கிழங்கில் அதிகளவு கார்போஹைட்ரேட்டும், நார்ச்சத்தும் உள்ளன. மேலும் இதில் புரதச்சத்து காணப்படுகிறது. பீட்டா கரோடீன், கிரிப்டோசாந்தைன் போன்ற பைட்டோ-நியூட்ரியன்கள் இதில் உள்ளன.

சேப்பங்கிழங்கு – மருத்துவப் பண்புகள்

செரிமானம் நன்கு நடைபெற

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் உள்ளது. இந்நார்ச்சத்தானது சிறுகுடலால் செரிக்கப்படுவதில்லை. பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நார்ச்சத்து உணவாவதுடன் அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

மேலும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் சீரான உடல்வளர்ச்சிதை மாற்றம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, செரிமானம், இதயநலம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

மேலும் நார்ச்சத்தானது கழிவுகளை சேகரமாக்கி வெளியேற்றவும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அதிகப்படியான வாயு போன்றவைகள் ஏற்பாடமல் நார்ச்சத்தானது நம்மைப் பாதுகாக்கிறது.

இதயநலத்தை மேம்படுத்த

சேப்பங்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சவ்வு மற்றும் திசுக்களுக்கு இடையில் திரவப்பரிமாற்றம் நடைபெற உதவுகிறது.

மேலும் பொட்டாசியமானது குழல்விரிப்பியாக செயல்பட்டு இரத்தக்குழாய்கள் மற்றும் இரத்தநாளங்களில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கிறது.

இதனால் இரத்த அழுத்தம் சீராகிறது. சீரான இரத்த அழுத்தத்தால் இதயநலம் மேம்படுகிறது.

பார்வை நலத்திற்கு

சேப்பங்கிழங்கில் உள்ள பீட்டா கரோடீன், கிரிப்டோசாந்தைன் உள்ளிட்ட பைட்டோ-நியூட்ரியன்கள் பார்வை நலத்தினை மேம்படுத்த உதவுகின்றன.

மேலும் கண்தசை அழற்சி நோய்க்கு காரணமான ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து கண்ணினைப் பாதுகாக்கின்றன.

சருமப் பாதுகாப்பிற்கு

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் ஏ மற்றும் இ சருமத்தினைப் பாதுகாக்க உதவுகிறது. இவ்விட்டமின்கள் காயங்களை விரைந்து ஆற்றுவதோடு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. இவ்விட்டமின்கள் சருமத்திற்கு பளபளப்பையும் உண்டாக்குகின்றன.

நோய் எதிர்ப்பாற்றலை வழங்குதல்

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கின்றன.

இவை இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலுக்குள் நோய்க்கிருமிகள் செல்வதைத் தடைசெய்கின்றன.

கேசப் பராமரிப்பிற்கு

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் இ-யானது சுற்றுசூழல் மாற்றத்தால் கேசம் உதிர்வதைத் தடைசெய்கிறது.

மேலும் இது கேசத்திற்குத் தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து கேசத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கச் செய்கிறது.

விட்டமின் இ-யானது இயற்கை ஈரப்பதத்தை கேசத்திற்கு வழங்கி கேசம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

சேப்பங்கிழங்கில் உள்ள இரும்பு மற்றும் செம்புச்சத்துகள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் உடலின் வளர்ச்சிதை மாற்றம், புதிய செல்களின் வளர்ச்சி ஆகியவை மேம்படும். அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் வராமல் இக்கிழங்கு தடுக்கிறது.

எலும்புகளைப் பாதுகாக்க

சேப்பங்கிழங்கில் உள்ள செம்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், மாங்கனீசு உள்ளிட்டவைகள் எலும்புகள் தேய்மானம் அடைவதையும், ஆஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம் நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.

இதில் காணப்படும் செம்புச்சத்து ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.

நினைவாற்றலை அதிகரிக்க

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் பி1(தயாமின்) கவனம், ஆற்றல் ஆகியவற்றை அதிகரித்து, நாள்பட்ட மனஅழுத்தம், மறதி ஆகியவற்றைத் தடைசெய்கிறது.

கற்றல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை விட்டமின் பி1 அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இக்கிழங்கினை உண்டு நினைவாற்றலை அதிகரிக்கலாம்.

சேப்பங்கிழங்கினைப் பற்றிய எச்சரிக்கை

சேப்பங்கிழங்கினை அப்படியோ பச்சையாக உண்ணக் கூடாது. இதனை அவித்தோ உண்ண வேண்டும். இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதனை அளவாக உண்பது நலம்.

சேப்பங்கிழங்கினை வாங்கும் முறை

சேப்பங்கிழங்கினை வாங்கும்போது புதிதான, விறைப்பான, கனமானதாக உள்ளவற்றை வாங்க வேண்டும்.

மேற்புறத்தில் வெட்டுக்காயங்கள், கீறல்கள், தொட்டால் மென்மையா உள்ளவை மற்றும் முளைத்தல் உள்ளவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இதனை குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.

சேப்பங்கிழங்கானது அவித்து பயன்படுத்தப்படுகிறது. கேக்குகள், சிப்ஸ்கள், ஐஸ்கிரீம்கள், இனிப்புகள், சூப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

 

பிசைந்த சேப்பங்கிழங்கு
பிசைந்த சேப்பங்கிழங்கு

 

சேப்பங்கிழங்கு சூப்
சேப்பங்கிழங்கு சூப்

 

 

சேப்பங்கிழங்கு வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்

 

 

வெப்பமண்டலத்தின் உருளை சேப்பங்கிழங்கினை அடிக்கடி உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

–வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.