சைக்கிளின் வாடகை – சிறுகதை

சைக்கிளின் வாடகை என்ற கதை ஒரு புத்திசாலி வியாபாரியையும், அவரை எதிர்கொள்ளும் புத்திசாலி வாடிக்கையாளரையும் எடுத்துக் காட்டுகின்றது.

வாசு சுறுசுறுப்பான இளைஞன். ஒவ்வொரு ஊருக்கும் சென்று அவ்வூரில் உள்ள இடங்களைப் பார்ப்பதில் வாசுவிற்கு விருப்பம் அதிகம். அதனால் புதிது புதிதாக வெவ்வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.

ஒருசமயம் பம்பையூர் என்ற ஊருக்குச் சென்றான். அவ்வூரில் உள்ள சைக்கிள் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவ்வூரைச் சுற்றிப் பார்க்க எண்ணினான்.

அவ்வூர் சைக்கிள் கடைக்காரனிடம் சென்று “ஐயா, நான் இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும். ஆதலால் எனக்கு ஒருநாளைக்கு ஒரு சைக்கிளை வாடகைக்கு தாருங்கள்” என்று கேட்டான்.

அதற்கு சைக்கிள் கடைக்காரன் “உன்னை எனக்கு முன்பின் தெரியாது. உன்னை யாருக்காவது இந்த ஊரில் தெரியுமா?” என்று கேட்டான்.

அதற்கு வாசு “இல்லை இந்த ஊரில் உள்ள யாருக்கும் என்னைத் தெரியாது.” என்றான்.

“அப்படியா, சரி. இந்த ஊரில் உள்ளோருக்கும் உன்னை யார் என்று தெரியாது என்கிறாய். உனக்கும் இந்த ஊரில் உள்ள யாரையும் தெரியாது என்கிறாய்.

ஆதலால் இந்த சைக்கிளின் விலையான ரூபாய் 1000-த்தைக் கொடுத்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொள். நீ திரும்பி வந்ததும் நான் உன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.” என்றான்.

அதற்கு வாசுவும் சரி என்று சம்மதம் தெரிவித்தான். பின்னர் ஒருநாள் முழுவதும் சைக்கிளில் ஊரை சுற்றிப் பார்த்தான். பின்னர் சைக்கிள் கடைக்காரனிடம் வந்து சைக்கிளை ஒப்படைத்து தான் கொடுத்த பணத்தை திருப்பிப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

வாசுவைப் பார்த்து “தம்பி, நில், சைக்கிளின் வாடகை பணத்தை நீ கொடுக்காமல் புறப்படுகிறாய்” என்று சைக்கிள் கடைக்காரன் கேட்டான்.

அதற்கு வாசு “நான் இந்த சைக்கிளின் விலையைக் கொடுத்து, சைக்கிளைப் பெற்றுக் கொண்டேன். அப்போதே அது என்னுடைய சொந்த சைக்கிள் ஆகி விட்டது.

இப்போது என்னுடைய சைக்கிளை உங்களிடம் விற்று, அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டேன்.

ஆதலால் நான் வாடகை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

சைக்கிளின் வாடகை கொடுக்காமல் சென்ற வாசுவைப் பார்த்து  சைக்கிள் கடைக்காரன் திகைத்து நின்றான்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.