சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் இறைவனான சொக்கநாதர் தன் பக்தனான சுந்தரரேச பாத சேகரபாண்டியனைக் காக்க சோழனை விரட்டியடித்ததைப் பற்றிக் கூறுகிறது.

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.

பாண்டியனுடனான சோழனின் போர்

இராசேந்திர பாண்டியனின் வழித்தோன்றலான சுந்தரரேச பாத சேகரபாண்டின் என்பவன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவனாக இருந்தான். எனவே அவன் தன் படைபலத்தைக் குறைத்துக் கொண்டான்.

படைபலத்தைக் குறைத்துக் கொண்டதால் படைகளுக்கு செலவிடும் தொகையும் குறைத்தது. அத்தொகையைக் கொண்டு சிவாலயங்களைப் புதுப்பித்து சிவதொண்டு செய்து வந்தான்.

பாண்டியன் படைபலத்தைக் குறைத்ததை ஆயிரம் பரிக்கோர் சேவகன் என்ற சோழ அரசன் ஒற்றர்களின் மூலம் அறிந்தான். இதுவே பாண்டிய நாட்டினைக் கைப்பற்ற சரியான தருணம் என்று எண்ணி பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான்.

சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவதை அறிந்த சுந்தரரேச பாத சேகரபாண்டியன் திருக்கோவிலை அடைந்தான்.

“இறைவா, பாண்டிய படையின் பலத்தினைக் குறைத்ததை அறிந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். சோழனிடமிருந்து பாண்டிய மக்களைக் காப்பாற்று.” என்று மருகி வழிபட்டான்.

பாண்டியனின் முறையீட்டினைக் கேட்டதும் இறைவனார் “சுந்தரரேச பாத சேகர பாண்டியா, நீ கலங்காதே, உன் படையைத் திரட்டி சோழனை எதிர்கொள். யாமும் சோழனுடன் போரிட்டு வெற்றியை உனதாக்குவோம்.” திருவாக்கு அருளினார்.

இறைவனின் திருவாக்கினைக் கேட்டதும் சுந்தரரேச பாத சேகரபாண்டியன் தெளிந்த மனத்துடன் தனது படைகளைத் திரட்டி சோழனை எதிர்க்க போர்க்களம் சென்றான்.

இறைவனார் சோழனுடன் போரிடுதல்

இறைவனார் வேடுவ வடிவம் கொண்டு போர்களத்திற்குச் சென்றார். பாண்டியனின் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். ஆயிரம் பரிக்கோர் சேவகனின் முன்னால் சென்று நின்றார்.

அதனைக் கண்ட சோழன் சினந்து “நான் ஆயிரம் குதிரைகட்கு ஒரு வீரனாகி நான் இங்கு போரிட வந்தேன்” என்று கூறினான்.

அதனைக் கேட்டதும் சொக்கநாதர் “எண்ணில்லாத குதிரைகளுக்கு ஒரே வீரனாகி நான் இங்கு போரிட வந்தேன்” என்று கூறி சோழனுடன் போரிட்டார்.

வேடுவனின் தாக்குதலை சமாளிக்க இயலாது சோழன் குதிரையில் ஏறி போர்களத்தை விட்டு ஓடினான்.

நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருருந்த பாண்டியன் வேடனாக வந்திருப்பது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்.

சிறிது நேரத்தில் வேடனான சொக்கநாதர் அங்கிருந்து மறைந்தார். சோழனை விரட்டி பாண்டியன் அவனைத் தொடர்ந்து சென்றான்.

சிறிது நேரம் கழித்து சோழன் திரும்பிப் பார்த்தான். தன்னை துரத்திய வேடனைக் காணாது பாண்டியன் துரத்துவதை கண்டான். பயம் தெளிந்த சோழன் பாண்டியனை துரத்தத் தொடங்கினான்.

போர்க்களத்தை நோக்கி பாண்டியன் ஓடினான். அப்போது பாண்டியன் எதிரில் மடு (குளம்) ஒன்று இருப்பதைக் கவனியாது அதனுள் வீழ்ந்தான்.

பாண்டியனைத் துரத்திய சோழனும் மடுவினுள் வீழ்ந்தான். சோழன் வீழ்ந்த இடத்தில் சுழல் இருந்ததால் சோழன் மடிந்தான்.

பாண்டியன் இறைவனின் கருணையால் உயிருடன் மடுவில் இருந்து மீண்டான். பின்னர் சோழபடையை வெற்றிக் கொண்ட பாண்டியன் அவற்றின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சிவாலயத் திருப்பணிகள் செய்து இறைவனின் அருளுக்கு பாத்திரமானான்.

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் கூறும் கருத்து

இறைபணியில் ஈடுபடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை இறைவனார் காப்பார் என்பதே சோழனை மடுவில் வீழ்த்திய படலம் கூறும் கருத்தாகும்.

-வ.முனீஸ்வரன்

முந்தைய படலம் இரசவாதம் செய்த படலம்

அடுத்த படலம் உலவாக் கோட்டை அருளிய படலம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.