ஞாபகம்

சின்ன வயசுல சுத்தி திரிஞ்சத

இன்னும் மறக்கல மனசு – அதை

எண்ணிப் பார்க்கையில் இன்னும் இனிக்குது

எந்தன் நெஞ்சிலந்த நெனப்பு

 

ஆடுமாட நாம மேய்ச்சி வந்ததும்

ஆல மரத்துல தூளி போட்டதும்

ஓடத் தண்ணியில முங்கி குளிச்சதும்

ஓணாணனைப் பிடிச்சி பேயாட வச்சதும்   (எண்ணிப்)

 

கம்மங் கதிரை நாம ஊதி தின்னதும்

கஞ்சி குடிக்க நீ வெல்லம் தந்ததும்

தென்னங் கீத்துல பீப்பி செஞ்சதும்

நெதமும் சுகமாய் ஓடித்திரிஞ்சதும்   (எண்ணிப்)

 

கனிஞ்ச கொடிக்காயைக் கொண்டு வந்ததும்

காஞ்ச ஓலையில காத்தாடி செஞ்சதும்

துணிஞ்சு ஓடுற பாம்பை அடிச்சதும் – அதை

தூக்கி எலியோட பொந்தில் போட்டதும்   (எண்ணிப்)

 

நாட்டை பார்த்து ஊரு நசிஞ்சி போனாலும்

நயவஞ்சகக் கூட்டம் பெருகிப் போனாலும்

ஏட்டிக்கிப் போட்டியா எல்லாமே ஆயினும்

எங்குமே நல்லவை இல்லாம போயினும்

 

சின்ன வயசுல சுத்தி திரிஞ்சத

இன்னும் மறக்கல மனசு – அதை

எண்ணிப் பார்க்கையில் இன்னும் இனிக்குது

எந்தன் நெஞ்சிலந்த நெனப்பு

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)