டிரான்ஸ்பிளன்டேஷன் – சிறுகதை

வாட்சைப் பராமரிப்பதில் எனக்கு நிகர் நான் தான்! இடது கை மணிக்கட்டின் உட்புறமாகத்தான் வாட்சைக் கட்டுவேன்.

எங்கேயாவது உரசி கீறல் விழுந்து விடக்கூடாதே என்கிற முன்ஜாக்கிரதை உணர்வு. தூறல் விழுந்தால்கூட உடனே கர்சீப் எடுத்து இடது மணிக்கட்டைச் சுற்றிக் கட்டிக் கொள்வேன்.

அடிக்கொரு தடவை வாட்சைக் கழட்டி வியர்வையைத் துடைத்த பின் மீண்டும் கட்டிக் கொள்வேன். சாவி கொடுப்பதிலும் ஓர் வரைமுறை உண்டு.

தினம் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் 10 மணி அளவில் சாவி கொடுப்பேன்.

எக்காரணத்தைக் கொண்டும் எவருக்கும் இரவல் கொடுப்பதில்லை.

நான் டிகிரி முடித்தமைக்காக என் மாமா பரிசளித்த வாட்ச்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன், அகில இந்திய ரீதியில் பிரபலமடைந்திருந்த மிகச்சிறந்த, மிகவும் புகழ்பெற்ற கம்பெனி ஒன்றின் வாட்ச்!

வாட்சின் பெயர் சொன்னாலே போதும்! தரம் எளிதில் விளங்கிவிடும்!

இவ்வளவு அருமையும், பெருமையும் நிறைந்த சிறப்புமிக்க, மகத்துவம் வாய்ந்த நான் அணிந்திருந்த அந்த வாட்ச் சென்ற ஒருவார காலமாக சரியாக ஓடவில்லை. திடீர் திடீரென நின்றுவிடும்.

மனதுக்குச் சங்கடமாக இருந்தது. இவ்வளவு கவனமாகப் பராமரித்தும் பாதுகாத்தும் இப்படி ஆகிவிட்டதே என்னும் ஆதாங்கம் அதிகமாயிற்று.

‘எதற்கும் வாட்ச் ரிப்பேர் கடையில் கொண்டு போய் காட்டலாம்’ என நினைத்து டவுனிலிருந்த வாட்ச் ரிப்பேர் கடை ஒன்றில் கொடுத்துக் காண்பித்தேன்.

வாட்சைப் பிரித்து மேலோட்டமாக ஆராய்ந்த கடைக்காரர் “ஓவராலிங் செய்யணும்” என்றார்.

“வேறு ஒன்றுமில்லையே?” எனக் கேட்டேன்.

“ஓவராலிங் செய்தால் போதும். பழைய மாதிரி நன்றாக ஓடும்” என்றார்

“சரி செய்யுங்கள்” என்றேன்.

“உடனே கிடைக்காது. ஒரு வாரமாவது ஆகும்” என்றார்.

வேறு வழியின்றி அரைமனதுடன் சம்மதித்து வாட்சைக் கொடுத்தேன்.

ஒரு வாரத்திற்கு பிறகு, ஆவலுடன் வாட்சை வாங்கிவரச் சென்றேன்.

“ரெண்டு மூணு நாளா ஊரிலில்லை சார். அதனால் உங்க வாட்சைப் பார்க்க நேரமில்லை. ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன். தரேன்” என்றார் கடைக்காரர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்றேன். கடையில் வேறொரு பையன் இருந்தான்.

“முதலாளி சொந்த வேலையாகப் பெங்களுர் வரை போயிருக்கிறார் சார். வர பத்து நாட்கள் ஆகும். உங்க வாட்சை இன்னும் சரி செய்யவில்லை சார்’ என்றான்.

எரிசலாயிருந்தது எனக்கு.

“ரிப்பேர் பார்த்தது போதும். அதைக் கொடு” என்றான்.

“முதலாளி வரட்டும் சார். அவர் இல்லாத நேரத்தில் தான் தர முடியாது” என்றான்.

பத்து நாட்கள் கழித்து திரும்பவும் சென்றேன். முதலாளி வந்திருந்தான்.

“உங்க வாட்சைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். நாளைக்கு வந்தால் கண்டிப்பாக வாங்கிட்டுப் போயிடலாம்” என்றார்.

நம்பினேன்.

மறுநாள் சென்றேன்.

கடை மூடியிருந்தது.

ஆத்திரம், ஆத்திரமாய் வந்தது எனக்கு.

அதன்பிறகு பல ஜோலிகள் நிமித்தம் ஒருவாரமாக என்னால் மறுபடியும் போக முடியாமல் போயிற்று.

கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது!

ஆத்திரம், கோபம், எரிச்சல் எனப் பல்வேறு உணர்வுகளுடன் மீண்டும் ஒருநாள் சென்று கடுகடுப்புடன் வாட்சைக் கேட்டேன்.

நல்லவேளை! இம்முறை என் வேகத்தைக் கிளப்பாமல் என்னைக் கண்டதும் ரெடியாக இருந்த வாட்சை எடுத்து என்னிடம் தந்தார் கடைக்காரர்.

ஸ்பிரிங் ஒன்று பழுதடைந்திருந்ததாகவும், அந்த குறிப்பிட்ட கம்பெனி வாட்சுக்குரிய அப்பாகம் கிடைப்பதில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டதாகவும் தாமதத்திற்குக் காரணம் கூறி, ஓவராலிங் எல்லாமாகச் சேர்த்து நூறு ரூபாய வரை வாங்கிவிட்டார் கடைக்காரர்.

‘எப்படியோ வாட்ச் நன்றாக ஓடினால் சரி’ என நினைத்துக் கொண்டு கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு வாட்சை வாங்கிக் கொண்டேன்.

பதினைந்து நாட்களே ஆகியிருந்தன. வாட்ச் மீண்டும் மக்கர் செய்ய ஆரம்பித்தது. முழுசாக நூறு ரூபாயை வழங்கியும் சரியாக ஓடாததைக் கண்டு மனதுக்குள் பொருமினேன்.

மறுபடியும் அதே கடையில் கொடுத்து விஷயத்தைச் சொல்லலாம் என்றால் மனம் இடம் கொடுக்கவில்லை.

‘மறுபடியும் வாட்சைக் கொடுத்தால் இன்னும் எவ்வளவு நாட்கள் இழுத்தடிப்பார்களோ?’

அலுவலக நண்பன் மூலமாக அவனுக்குத் தெரிந்த மற்றொரு கடையில் வாட்சைக் கொடுத்துப் பிரச்சினைகளைக் கூறினேன்.

பதினைந்து நாட்கள் முன்பு ஓவராலிங் செய்து வாங்கியதைப் பற்றியும் சொன்னேன்.

வாட்சைப் பிரித்து சோதித்தவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

“என்ன சார்? வாட்ச் பார்ட்ஸ் எல்லாம் மாற்றப்பட்டிருக்கே? இந்த வாட்சுக்குரிய பார்ட்ஸ் இல்லை போலிருக்கே?”

தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

“என்ன சொல்றீங்க?” பதறினேன்.

“இந்த வாட்சுக்குரிய பார்ட்ஸை எல்லாம் எடுத்துட்டு அதற்குப் பதிலாக வேறொரு மூன்றாம்தர வாட்சின் பார்ட்ஸைப் பொருத்தி நல்லா ஏமாற்றியிருங்காங்க சார்.”

அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு.

“எந்த கடையிலேடா கொடுத்தாய்?” நண்பன் கேட்டான். சொன்னேன்.

“அடக்கடவுளே! போயும் போயும் அந்தக் கடைதான் கிடைச்சுதா உனக்கு? முதல்லேயே எங்கிட்டச் சொல்லியிருந்தா உன்னோட வாட்ச் இந்தக் கதிக்கு ஆயிருக்காது”

ரத்தம் கொதித்தது எனக்கு. கோபம் தலைக்கேறியது.

“ராஸ்கல், இப்படி ஏமாற்றி விட்டானே?” என ஆத்திரம் பொங்க, அந்த நிமிடமே வாட்சை வாங்கிக் கொண்டு, “அவனை என்ன செய்கிறேன் பார்” எனக் கறுவியவாறே விரைவாக முன்பு வாட்சைக் கொடுத்த அக்கடைக்குச் சென்றேன்.

கடை மூடியிருந்தது.

முகத்தில் கோபம் தாண்டவமாட அக்கடையின் அருகிலிருந்த பெட்டிக் கடைக்காரரிடம்,

“கடை மூடியிருக்கே, எங்கே அந்த ஆள்?” ஆத்திரத்துடன் கேட்டேன்.

“அந்த ஆள் இனி வரமாட்டார் சார். அவருக்கு கிட்னி டிரபிள் இருந்ததனால மெட்ராசுக்கு கொண்டு போனாங்க. கிட்னி மோசமாகி டிரான்ஸ்பிளன்டேஷன் செஞ்சாங்க. ஆப்பரேஷன் ஃபெயிலாகி இறந்துட்டாரு”

பெட்டிக்கடைக்காரர் கூறியதைக் கேட்டதும் அவர் அருகிலிருந்த என்னைப் போல் ஏமாந்திருந்த மற்றொரு நபர் சொன்னார்.

“செய்யும் தொழில்ல திறமையை செல்வமா நினைக்காம, வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பிழைச்சுக்கிட்டிருந்தான் மனுஷன்.

எந்தத் தொழிலா இருந்தா என்ன சார்? ஒரு நேர்மை, நாணயம் இருக்க வேண்டாமா? தகாத முறையில, முறைக்கேடா நடந்துக்கிட்டா இந்தக் கதிதாங்க.

வாடிக்கைகாரங்க வாட்ச் பாகங்களையெல்லாம் டிரான்ஸ்பிளான்ட் பண்ணி எத்தனை நாட்கள் காலம் தள்ள முடியும்? எல்லோருடைய வயிற்றெரிச்சலும், சாபமும் சும்மா போகுமா என்ன?”

என்னையறியாமல் வாட்ச் கடைக்காரர் மீது பரிதாபம் தோன்ற அமைதியாக அங்கிருந்து கிளம்பினேன்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.