டெலி காலிங் – சிறுகதை

மகிழினி காலையில் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று மயங்கி விழுந்தாள்.

கீழே விழும்போது எதிரே இருந்த மேஜையில் தலைமோதி, முன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அப்பா, அம்மா, தங்கை மூவரும் அலறி அடித்து ஓடிவந்து தூக்கினார்கள். மகிழினி பேச்சு மூச்சற்று கிடந்தாள்.

அக்கம் பக்க மனிதர்கள் எல்லாம் கூடி ஆம்புலன்ஸில் ஏற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

“அய்யோ, மகமாயி தாயீ, எம்புள்ளைக்கு என்னாச்சு? இந்த சின்ன வயசுலேயே உழைச்சு குடும்பத்தை காப்பாத்திற‌ என் தங்கத்துக்கு என்னாச்சு?” என தேம்பி தேம்பி அழுத மகிழின் அம்மா கனகத்தை சின்ன மகள் யாழினி தாங்கி பிடித்து கொண்டிருந்தாள்.

மகிழின் அப்பா நமச்சிவாயம் பெரும் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார். அவருக்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை. மகிழினி,யாழினி என இரண்டு பெண் குழந்தைகள்.

மகிழினி பி.இ., வரை படித்து விட்டு, வீட்டருகில் உள்ள, இந்தியாவின் முதன்மையான வங்கியின், வீட்டுக் கடன் வாடிக்கையாளர் சேவை பிரிவில் டெலி காலிங் வேலை செய்கிறாள்.

வீட்டு வாடகை, தங்கை படிப்பு மற்றும் குடும்ப செலவுகளுக்கு அப்பாவின் சம்பளம் போதுமானதாக இல்லாததால், மகிழினி டிகிரி முடித்ததுமே இந்த வேலைக்கு போய்விட்டாள்.

மகிழினி மயக்கம் தெளிந்து கண் விழித்து விட்டாள். தலையில் அடிபட்ட இடத்தில் தையல் போட்டு கட்டு போட்டிருந்தார்கள். எக்ஸ்–ரே ரிபோர்ட்டும் நார்மல்.

டாக்டர் மகிழினியிடம் “என்ன நடந்தது?” என்று கேட்டார்

“சார் ஒரு வருடமாக இந்த கால் சென்டரில் வேலை செய்து, எனக்கு மண்டைக்குள் எப்போதும் யாரோ பேசிக் கொண்டிருப்பது போன்றே இருக்கிறது. வீட்டில் யாராவது பேசினால் கூட எனக்கு எரிச்சலாய் இருக்கிறது.

உறவினர்கள் நண்பர்கள் என்று யாரிடமும் பேச வெறுப்பாய் இருக்கிறது. தூக்கத்தில் கூட அதே மாதிரி பேச்சு ஓடுகிறது. அது தூங்குவது போன்றே இருப்பதில்லை.

அதுவும் கடந்த ஒருவாரமாக ரொம்ப அதிகமாகி விட்டது. இன்று காலையில் மயங்கி விழுந்து விட்டேன்.” என்று மகிழினி விபரம் சொன்னாள்.

“இது தொடர்ந்து தொலைபேசியில் பேசுவதால் (Radio-Frequency) ஏற்படும் மனஅழுத்தம் சம்பந்தப்பட்ட மயக்கம் தான்; பயப்பட வேண்டாம்.” என்று டாக்டர் ஆறுதல் சொன்னார்.

“கொஞ்ச நாளைக்கு லீவ் எடுத்துக்கம்மா. இல்லன்னா வேற ஏதும் வேலை பாரும்மா.” என்று அட்வைஸ் கொடுத்து மகிழை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.

நமச்சிவாயமும் கனகமும் அந்த பாழாப்போன டெலி காலிங் வேலையே நமக்கு வேண்டாம் என்று, மகிழை வேலையை விட்டே நிற்க சொல்லி விட்டார்கள்.

பரவாயில்லை கஷ்டத்தோட கஷ்டமா மேல் படிப்பு படிக்க வச்சு, வேற ஏதும் நல்ல வேலைக்கு அனுப்புவது என்று முடிவாகி விட்டது. மகிழும் சரியென்று சொல்லி விட்டாள்.

மகிழ் அண்ணா பல்கலையில் எம்.டெக் முதுகலை படிப்பில் சேர்ந்தாள். பிறகு அங்கேயே ஆராய்ச்சி படிப்பையும் முடித்து முனைவர் பட்டமும் வாங்கினார். தான் ஒரு கடின உழைப்பாளி, போராளி என்ற பெயரை நிலை நிறுத்திக் கொண்டாள்.

ஆனால் கையை மீறி கடன் வாங்கி, கல்யாணத்திற்கு சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த நகைகளை அடகு வைத்து படிப்பு செலவு செய்துதான் இந்த இருபெரும் படிப்புகளை படிக்க வேண்டியதாயிற்று. வேலைக்கு போய் எல்லாவற்றையும் மீட்டு விடலாம் என்ற அசாத்திய நம்பிக்கை மகிழுக்கு இருந்தது.

படிப்புக்கேற்றார் போல் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிக்கு சேர்ந்தாள். சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவயில்லை மனதுக்கு நிறைவான வேலை என்று அவளும் மகிழ்ந்தாள்.

அவளை விட அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஓர் அளப்பரிய சந்தோஷம். பெரிசா ஏதும் படிக்காத எங்களுக்கு பொண்ணா பிறந்து, கல்லூரி வாத்தியார் ஆனது உலகத்தையே வென்றதற்கு சமமாக கருதினார்கள். எல்லோரிடமும் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்கள்.

முதல் நாள் மகிழினி சீராக புடவை கட்டி, ஒரு கம்பீர ஆசிரியையாக கல்லூரிக்கு போனபோது அவள் அம்மா ஆனந்தத்தில் அழுதே விட்டாள்.

மகிழினி எல்லா பாடத்திட்டத்தின் விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தாள்.

நிறைய புத்தகங்கள், குறிப்புக்கள் என்று படுபிரமாண்டமாக தயாராகி, ஒரு அறிவு ஜீவியாகவே துறை தலைவர் முன் போய் ரிப்போர்ட் செய்து கொண்டாள்.

துறை தலைவர் மகிழ் வைத்திருந்த நோட்ஸை வாங்கி பார்த்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அவளுக்கான வேலையை விளக்கினார்.

“உனக்கு கீழ் ஐம்பது மாணவர்கள் வருவார்கள். அவர்கள் வருகையை ஒவ்வொரு பீரியடிலும் கவனித்து அவர்கள் வகுப்புக்கு வரவில்லை என்றால், அவர்களுக்கு போன் செய்து விபரம் கேட்க வேண்டும்.

பின் அவர்கள் பெற்றோர்களுக்கு போன் செய்து அந்த விபரத்தை சொல்ல வேண்டும். இரண்டையும் சரி செய்து இரண்டுக்கு தரப்புக்கும் மறுபடியும் போன் செய்து உண்மையை விளக்க வேண்டும்.

ஐம்பது மாணவர்களின் பெற்றோருக்கும் சைக்கிள் டெஸ்ட் தேதியை போனில் சொல்ல வேண்டும்.

மாணவர்கள் சைக்கிள் டெஸ்ட் எழுதவில்லையென்றால், விபரம் கேட்டு மறுபடியும் பெற்றோர்களுக்கு போன் செய்து, அந்த விபரத்தை சொல்ல வேண்டும்,

அதில் தோல்வி அடைந்தவர்களுக்கு தனியாக சொல்ல வேண்டும். பின் எல்லோருக்கும் அவர்கள் எடுத்த மார்க்கை போனில் சொல்ல வேண்டும்,

சைக்கிள் டெஸ்ட் முடிந்தவுடன் பல்கலை தேர்வு பற்றி பெற்றோர்கள், மாணவர்கள் இருவருக்கும் தனித்தனியே போனில் சொல்ல வேண்டும். எக்ஸாம் பீஸ் கட்ட சொல்லி தினமும் இருமுறை போன் செய்ய வேண்டும்.

அதுபோல் செமஸ்டர் பீஸ் கட்டாத மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தினமும் காலை மாலை இருமுறை போன் செய்ய வேண்டும்.

எல்லா மாணவர்கள் மற்றும் அவர்கள் போன் செய்து கேட்கும் விபரங்களை சொல்ல வேண்டும்.

நேரம் கிடைக்கும் போது படிப்பு முடித்துவிட்டு போன பழைய மாணவர்களுக்கும் போன் செய்து பேசி, அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா என்று கேட்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் தனித்தனியே வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பிக்க வேண்டும்.

இதுதவிர தினமும் 50 பள்ளிக்கூட மாணவர்களிடம் நம் கல்லூரியின் அருமை பெருமைகளை சொல்லி, அடுத்த வருட அட்மிஸ்னுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே போனார்.

மகிழுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

‘அடகடவுளே! மறுபடியும் டெலி காலிங் வேலையா?’

மகிழினிக்கு ‘வாத்தியார் வேலைதானே இது! நம்ம தப்பா வந்திட்டோமா?’ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

துறை தலைவரிடம், “சார் வகுப்பு எடுப்பது, சப்ஜெக்ட் எல்லாம் எப்படி சார்?” என்று தயங்கி தயங்கி கேட்டாள் .

“அதெல்லாம் ஒன்னும் பெரிசா இல்லம்மா. கிளாஸ் எங்கேஜ் பண்ணி வச்சிருந்தா போதும்மா” என்றார்.

“சார் போன், ரீ சார்ஜ் எல்லாம் எப்படி சார்?”

“எல்லாம் உங்க போன்தான்மா.” என்றார்

ஸ்டாப் ரூமுக்கு போய் பார்த்தாள். எல்லா பேராசிரியர்களும் போனும் கையுமாய் ஸ்டாப் ரூம் முழுவதும் ஒரே சத்தம்.

பாவம்! இவர்கள் யாருக்கும் டெலி காலிங் பயிற்சி இல்லை, ஹெட் போன் இல்லை. உட்கார ஒழுங்கா ஒரு நாற்காலி கூட இல்லை. கால் சம்பளமும் அரை சம்பளமுமாய் நிலைமை மிகவும் கவலைக்கிடமாய் இருந்தது.

‘அட பாவிங்களா! இதுக்கு எதுக்குடா பி.எச்.டி, வெங்காயம் எல்லாம் கேட்டீங்க? இதுக்கு போய் நகையெல்லாம் அடகு வைத்து படித்தேனே?

நான் ஏசி ரூமில ரொடேட்டிங் குஷன் நாற்காலியில், அவங்க கொடுக்குற போன்ல, நல்ல சம்பளத்துல ஒரிஜினல் டெலி காலிங் வேலையை பார்த்துகிட்டு இருந்திருப்பேனே!’ என்று மகிழினி உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள்.

மகிழினிக்கு மாணவர்களும் பெற்றோர்களும் இடைவிடாது போன் செய்து கொண்டேயிருந்தார்கள்.

அவர்கள் வருகை கணக்கு, பீஸ் கட்டிய, கட்டப்போகும் விபரம், பீஸ் கட்டும் வழிமுறை, பீஸ் கட்டாதவர்கள் காரணம் என 24X7 முறையில் எல்லா நாட்களும் அவளுடைய போன் ஒலித்து கொண்டே இருக்கிறது.

என்ன இதற்கு முன் செய்த ஒரிஜினல் டெலி காலிங் வேலையில், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் தொலைபேசியில் பேசுவது போன்ற பிரமை மட்டும்தான் இருக்கும். இப்போது பிரமை எதுவுமில்லை; நிஜமாகவே பேச வேண்டியதாயிருக்கிறது.

மகிழினி கண்ணாடியில் தன் முன்மண்டையில் உள்ள அடிபட்ட தழும்பை பார்த்தாள். இந்த முறை மயக்கம் வரும் போது மண்டையில் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

5 Replies to “டெலி காலிங் – சிறுகதை”

  1. இக்கதையின் கருப்பொருள் யதார்த்தமான தற்போதைய அவல நிலையை மிகவும் சீராக உடைப்பதுடன் அதனை எதிர்த்து நின்று கண்டிக்கவும் செய்கிறது.

    அறப்பணி என்று சொல்லி சொல்லி சிறிதும் அறமும் இன்பமும் அண்டாத பணியாக இதனை மாற்றி விட்டோம். இந்த நிலை மாற வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு அவர்களின் உன்னத பணிக்காக அங்கீகாரம் கிடைத்தல் வேண்டும்.

  2. உங்கள் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் காயங்கள், அதன் வலிகள் எல்லாவற்றையும் கதைகளாக மாற்றி படிப்பவர்கள் மீது பாரத்தை ஏற்றி நீங்கள் லேசாகி விடுகிறீர்கள்.

    அதுபோல்தான் இந்த கதையும்…

  3. இக்கதையின் கருப்பொருள் யதார்த்தமான தற்போதைய அவல நிலையை மிகவும் சீராக உடைப்பதுடன் அதனை எதிர்த்து நின்று கண்டிக்கவும் செய்கிறது.

    அறப்பணி என்று சொல்லிச் சொல்லிச் சிறிதும் அறமும் இன்பமும் அண்டாத பணியாக இதனை மாற்றி விட்டோம். இந்த நிலை மாற வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு அவர்களின் உன்னத பணிக்காக அங்கீகாரம் கிடைத்தல் வேண்டும் என்று Kavinraj Krishnamoorthy அவர்கள் மிகச் சரியாக விமர்சித்துள்ள்ளர்கள்.

    காலம் ஆசிரியர்களை இப்படி ஆக்கி உள்ளது. எடுப்பார் கைப்பிள்ளையாக, அடிமையாக, எவ்வித வளர்ச்சியும் இல்லாது குனிந்து குனிந்து சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் வாழ்ந்து எதோ சாதித்து விட்டதைப் போல் காணாமல் போய் விடுகின்றனர் ஆசிரியர்கள்.

    இளைய‌ தலைமுறை ஆசிரியர்களின் வெறுப்பால் கட்டாயம் பாதிக்கப்படும்; தலைமுறை சீர்கெட்டு, நிலை மாறிப் போகும் என்பதை உளவியலாளர்கள் தெரிவித்தும் சமூகம் இன்னும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

    காலத்தால் தான் அதை உணர முடியும்.

    காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.

    சிறுகதை உள்ளத்தைக் கிளறி விட்டிருக்கிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.