தண்டியடிகள் நாயனார் – இறையருளால் கண் ஒளி பெற்றவர்

தண்டியடிகள் நாயனார் இறையருளால் பிறவிக்குருடு நீங்கி கண் ஒளி பெற்றவர். கண் இல்லாத போதும் திருகோவிலின் திருக்குளத்தை சீரமைக்கும் திருத்தொண்டினைச் செய்தவர்.

சோழநாட்டில் இருந்த திருவாரூரில் தண்டியடிகள் என்னும் சிவனடியார் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது.

புறக்கண்ணால் உலகத்தைக் காண இயலாத அவர் தன்னுடைய அகக்கண்ணால் இறைவனாரின் திருவடிகளைக் கண்டு இன்புற்றுக் கொண்டிருந்தார்.

நாள்தோறும் திருவாரூரின் புற்றிடங்கொண்ட நாதரை வழிபட்டு ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவருடைய காலத்தில் திருவாரூரில் சமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அவர்கள் திருவாரூரின் கமலாலயத் திருக்குளத்தின் கரையைச் சுற்றிலும் தங்களுடைய பாழிகளை அமைத்தனர். அதனால் குளத்தின் நீர் கொள்ள‌ளவு குறைந்தது.

கமலாலயத்தில் தினமும் நீராடும் தண்டியடிகள் இதனை உணர்ந்து கொண்டார். ஆதலால் குளத்தினை சீரமைத்து அதனுடைய கொள்ள‌ளவை அதிகரித்து திருத்தொண்டு புரிய ஆவல் கொண்டார்.

எனவே குளத்தினுள்ளும் குளத்திற்கு வெளியே கரையிலும் கம்புகளை நட்டு, குளத்தின் எல்லையை வரையறுத்து, கம்புகளில் கயிற்றினைக் கட்டிக் கொண்டார்.

வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இருந்த மேட்டுப்பகுதிகளை மண்வெட்டியால் வெட்டி, மண்ணைக் கூடையில் நிரப்பி, கயிற்றைப் பிடித்துக் கொண்டே நடந்து சென்று குளத்திற்கு வெளியே கொட்டினார்.

தண்டியகள் குளத்தினை சீரமைப்பதைக் கண்ட சமணர்கள் வெகுண்டனர்.

அவரை அணுகி “குளத்தின் உள்ளே உள்ள மண்ணை வெட்டுவதால் மண்ணில் உள்ள உயிரினங்கள் அழிந்து விடும். ஆதலால் குளத்தினை சீரமைப்பதை நிறுத்து.” என்று கூறினர்.

அதனைக் கேட்ட தண்டியடிகள் “கல்லில் உள்ள தேரைக்கும், கருவில் உள்ள உயிருக்கும் நல்லுணர்வு தந்து காக்கும் ஈசனுக்கு மண்ணில் உள்ள உயிர்களையும் பாதுகாக்கத் தெரியும். ஆதலால் நான் செய்யும் திருக்குளத்தை சீரமைக்கும் பணி மண்ணுயிர்களுக்கு மட்டுமல்லாது தங்களும் எவ்வித தீங்கும் செய்யாது.” என்றார்.

“நாங்கள் எடுத்துச் சொல்லும் தருமத்தை நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உனக்கு காதும் மந்தமோ?” என்று எதிர்க் கேள்வி கேட்டனர்.

“மந்தமான அறிவும், கேளாத செவியும், காணாத கண்ணும் உங்களுக்கே உள்ளன. நான் அகக்கண்ணால் இறைவனின் திருவடிகளையே காண்கின்றேன் அன்றி மற்றவற்றைக் காண்பதில்லை. மற்றவர்களைப் போல நான் எல்லாப் பொருட்களையும் காண வல்லேனானால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

“நீ உன்னுடைய இறைவனின் அருளால் கண்ணொளி பெற்றால் நாங்கள் இவ்வூரில் இராமல் ஓடிவிடுகிறோம்.” என்று கூறி எள்ளி நகையாடினர்.

பின்னர் வல்லுக்கட்டாயமாக முளைக்கம்புகளையும், கயிற்றையும், மண்வெட்டியையும் பிடுங்கி எறிந்தனர்.

நடந்தவைகளை நினைத்து தண்டியடிகள் மிகவும் வருந்தினார்.

கண்ணொளி பெறுதல்

திருவாரூர் கோவிலை அடைந்து புற்றிடங்கொண்ட நாதரிடம் “ஐயனே, சமணர் பாழிகளால் மேவிய கமலாலயத் திருக்குளத்தை சீரமைக்கும் பணியைத் தொடங்கினேன். சமணர்கள் அதற்கு இடையூறு விளைவித்ததுடன் எள்ளி நகையாடிகின்றனர். நீரே எம்முடைய மனவருத்தத்தைப் போக்கியருள வேண்டும்.” என்று பணிந்து வேண்டினார்.

அன்றிரவு தண்டியடிகளின் கனவில் தோன்றிய இறைவனார் “தண்டியடிகளே, கலங்காதிரு. உமக்கு உண்டான வருத்தத்தை துடைப்போம்.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

பின்னர் சோழ அரசனின் கனவில் தோன்றி இறைவனார் “நம்முடைய பக்தனான தண்டியடிகள் செய்யும் கமலாலய திருப்பணிக்கு ஊறு விளைவிக்கும் சமணர்களின் வழக்கினை முடித்து வை.” என்று கட்டளையிட்டார்.

இறையாணையைக் கேட்டதும் சோழ அரசன் கண்விழித்து திருவாரூரை அடைந்தான். தண்டியடிகளைச் சந்தித்து நடந்தவைகளைக் கேட்டறிந்தான்.

பின்னர் சமணர்களை அழைத்து விசாரித்தான். சமணர்கள் இறையருளால் தண்டியடிகளுக்கு கண்ணொளி கிடைத்து விட்டால் திருவாரூரைவிட்டு வெளியே செல்வதாக தெரிவித்தனர்.

மறுநாள் இருத்தரப்பினரையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு வந்தான் சோழ அரசன். தண்டியடிகள் இறைவனை மனத்தால் வழிபட்டு திருவைந்தெழுத்தை ஓதியபடி குளத்தில் மூழ்கினார்.

குளத்தில் இருந்து எழுகையில் இறையருளால் அவரின் பிறவிக்குருடு நீங்கி கண்ணொளி கிடைத்தது. அதே சமயம் எள்ளி நகையாடிய சமணர்களுக்கு கண்பார்வை பறி போனது. அவர்கள் தட்டுத் தடுமாறினர்.

எனினும் சோழ அரசன் அவர்களின் கூற்றுப்படி திருவாரூரிலிருந்து அவர்களை வெளியேற்றினான்.

த‌ண்டியடிகள் புறக்கண்ணால் புற்றிடங்கொண்ட நாதரை கண்குளிர வழிபட்டார். பல்வேறு திருதொண்டு ஆற்றி இறுதியில் இறைபதம் பெற்றார்.

தண்டியடிகள் நாயனார் குருபூஜை பங்குனி மாதம் சதயம் நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

இறைவன்பால் கொண்டிருந்த பேரன்பினால் கோவிலின் திருக்குளத்தை சீரமைக்கும் பணியைச் செய்து இறையருளால் கண் ஒளி பெற்ற தண்டியடிகள் நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.