தண்ணீர்விட்டான் கிழங்கு – மருத்துவ பயன்கள்

தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.

முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட கொடி வகையைச் சார்ந்தது. மலர்கள், வெண்மையானவை, சிறியவை, தொகுப்பானவை. காய்கள் பச்சையானவை, கனிகள் சிவப்பு நிறமானவை.

விதைகள் கருப்பானவை. வேர்க்கிழங்குகள் சதைப்பற்றும், நீர்த்தன்மையும் அதிகமாகக் கொண்டவை. பெரும்பாலும் இயற்கையாக, காடுகள், பாழ்நிலங்களில் வளர்பவை.
இதன் மருத்துவ உபயோகங்களுக்காக தற்போது பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது.

வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.

அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை.

உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.

ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.

கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்: பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.

Comments are closed.