தத்துப் பிள்ளை – சிறுகதை

ராஜன் அன்று ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்தார். பைக்கின் ஹாரன் சவுண்ட் கேட்டதும் அவரது மனைவி மாலதி வாசலுக்கு வந்தார்.

ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டுவிட்டு பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஹேண்ட் பேக்கை எடுத்து மாலதியின் கையில் கொடுத்தார்.

இருவரும் உள்ளே சென்றனர்.

ராஜன் கை.கால்களை அலம்பிவிட்டு வந்து சோபாவில் அமர, மாலதி அடுக்களையில் இருந்து காபி டம்ளருடன் வந்து கணவனுக்கு காப்பியை கொடுத்துவிட்டுத் தானும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தார்.

இருவரும் காபி குடித்தனர்.

மாலதி தான் பேச்சை ஆரம்பித்தார், “என்னங்க ஊரிலிருந்து மாமாவும் அத்தையும் போன் செய்து ஞாயிற்றுக்கிழமை வருவதாக சொன்னார்கள்.”

“ஏன் என்னவாம்? போன வாரம் தானே வந்துட்டு போனாங்க.”

“அது ஒன்னும் இல்லங்க. உங்க தங்கச்சி பிரியதர்ஷினி மூன்று மாதம் முழுகாமல் இருக்காளாம். மகளையும் மருமகனையும் பார்த்துவிட்டு அப்படியே நம்பளையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு போலாம்ன்னு வர்றதா சொன்னாங்க.”

ராஜன் “அப்படியா! பிரியதர்ஷினி முழுகாம இருக்காளா? சந்தோஷமான விஷயம்தான்.”

“பாவம் கல்யாணம் பண்ணி 3 வருடத்திற்கு பிறகு இப்போது தான் உண்டாகி இருக்கா.” என்று சொல்லிவிட்டு சந்தோசத்தில் துள்ளி குதித்தார் ராஜன்.

அவருக்கு கை கால் ஓடவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை.

உடனே “மாலதி அடுக்களையில் போய் கொஞ்சம் சீனி எடுத்துட்டு வாயேன். வேணாம் வேணாம் என்னோட ஹேண்ட்பேக்கை எடு.” என்றார்.

மாலதி எழுந்து சென்று ஹேண்ட்பேக்கை கொண்டுவந்து ராஜனிடம் கொடுக்க, ராஜன் அதை திறந்து அதில் இருந்த அல்வாவையும் மல்லிகைப்பூவையும் வெளியே எடுத்து மல்லிகைப் பூவை மாலதியிடம் தந்துவிட்டு அல்வா பொட்டலத்தை பிரித்து தன் கையால் எடுத்து மாலதியின் வாயில் கொஞ்சம் ஊட்டினார்.

மாலதி, “ம்.. ம்…ம்..” என்று சொல்லிவிட்டு அல்வாவை தன் கையில் வாங்கி கணவரின் வாயில் கொஞ்சம் ஊட்டினார்.

ராஜன் “போதும் போதும்” என்றார்.

இருவரும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

அதற்கு காரணம் இருந்தது.

ராஜன் மாலதி இருவருக்கும் திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் ஜாடைமாடையாக, ஏன் நேரடியாகவே பேசுபவர்களும் உண்டு.

அவர்களின் பேச்சை கேட்டு கேட்டு, இருவருக்கும் ரணமாகி போனது. அவர்களும் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை.

அவர்களின் மனதில் இப்போதுதான் தேன் ஊற ஆரம்பித்திருக்கிறது.

மாலதி தன் கணவன் துள்ளிக் குதிப்பதை கண்டு சந்தோசமாக இருப்பது போல் நடித்துவிட்டு அடுக்களைக்கு சென்று கண்ணீர் வடித்தாள்.

இயல்பு நிலைக்கு திரும்பிய ராஜன், தன்னருகில் மாலதி இல்லாததை கண்டார். அப்போதுதான் அவருக்கு புரிந்தது., மாலதியின் மனம் புண்பட்டது புரிந்தது.

அடுக்களைக்கு சென்றார்.

காலடி சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்த மாலதி கண்களைத் துடைத்துக் கொண்டு, “என்னங்க வேண்டும்? தண்ணீர் குடித்து விட்டு வரலாம் என்று வந்தேன்” என்றார்.

“சரி சரி எனக்கு தெரியும் எனக்கும் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் வந்து சோபாவில் அமர்ந்தார் ராஜன்.

தண்ணீருடன் வந்தாள் மாலதி.

எதையும் வெளியே காட்டிகொள்ளாமல் தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு மாலதியின் கையை பிடித்து இழுத்து தன் அருகே உட்கார வைத்தார்.

“சரி உன் மனசு வருத்தப்படுவது எனக்கு தெரியுது. இதுல நம்ம கையில என்ன இருக்கு. எதையும் நினைத்து மனசு வருத்தப்படாத.

கடவுள் நம்மளுக்கும் ஒரு குழந்தையை கண்டிப்பாக கொடுப்பார். நம்பிக்கை வை. அதுவரையில் நீ எனக்கு குழந்தை நான் உனக்கு குழந்தை” என்று சொல்லி விட்டு அருகில் இருந்த மல்லிகை பூவை எடுத்து மாலதியின் தலையில் வைத்தார்.

மறு நாள் காலை.

அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தவரை மொபைல் கூவி எழுப்பியது.

போன் செய்தி கேட்டதும் முகம் வாடிப் போனது.

‘என்ன?’ என்பது போல் மாலதி தலையை உயர்த்த,

“எங்க ஆபீஸ்ல வேலை பாக்குற பியூன் நெஞ்சுவலி வந்து இறந்துட்டானாம்.

பாவம்; அவன் மிகவும் ஏழைபட்டவன். அவனை நம்பித்தான் அவன் குடும்பமே இருந்துச்சு. அவனுக்கு ஒரு ஆம்பள புள்ள. அஞ்சாவது படிச்சுட்டு இருக்கிறான்.

இனிமே அந்த குடும்பத்தோட நிலைமை என்னன்னு தெரியல! என்ன செய்யப் போறாங்களோ? எப்படி பொழைக்க போறாங்களோ? வா நாம போய் பார்த்துட்டு வந்துடலாம்” என்றார் ராஜன்.

இருவரும் புறப்பட்டார்கள்.

துக்க வீட்டில் ராஜன் தன் கையில் வைத்திருந்த மாலையை நண்பனின் உடல் மேல் போட்டுவிட்டு திரும்ப,

நண்பனின் காலை பிடித்துக் கொண்டு “அப்பா! அப்பா! என்ன விட்டுட்டு போயிட்டியே! என்ன யாருப்பா பார்த்துப்பா. வேலை முடிந்து வந்ததும் என்ன உப்பு மூட்டை தூக்கிட்டு சுத்துவியே. இனிமே என்ன யாருப்பா கொஞ்சுவா” என்று கதறினான் ரமேஷ்.

ராஜனுக்கும் மாலதிக்கும் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது அடக்கிக் கொண்டார்கள்.

ஈமச்சடங்கு முடிந்ததும், ராஜன் புறப்பட, மாலதி சட்டென்று ஓடிச்சென்று ரமேஷ்சை இறுக கட்டிக் கொண்டார்.

ராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னங்க இனிமேல் இவன் தான் நம்ம புள்ள. இவங்கதான் என் அக்கா. இனிமே இவங்க தான் நம்மளுக்கு உறவு” என்று சொன்னார் கண்களை துடைத்தபடி மாலதி.

ரமேஷின் கையை பிடித்தபடி மூவரும் நடந்தார்கள்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.