தனி மரம் – சிறுகதை

ஒரு பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கருப்பசாமி. நான் பக்கத்தில் போனேன்.

“வாடா சாப்பிடாலாம்னு” சொன்னான். “பரவாயில்லை வேணாம்” என்றேன்.

கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒரே வகுப்பில் படித்தோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனைச் சந்திக்கிறேன்.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் ஒரு பேராசிரியர் வந்தார்.

“எல்லோரும் ஆளுக்கொரு வெள்ளைக் காகிதம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான ஒரு ஓவியத்தை ஐந்து நிமிடத்தில் வரைந்து தாருங்கள்.” என்றார்.

கத்தி, கோடாரி, கார், விமானம், கப்பல் என வரைந்திருந்தனர்.

கருப்பசாமி மட்டும் ஒரு குடிசை வீடு, சுற்றிலும் நிறைய மரங்கள், காய்கறித் தோட்டம்,நெல்வயல், குளம், பனைமரம், மழைச்சாரல், மேகங்கள் என வரைந்திருந்தான்.

எல்லா ஓவியங்களையும் மாணவர்களின் பெயர்களோடு வாங்கி, கையில் வைத்துக் கொண்டார் பேராசிரியர்.

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி தீவில் சிக்கிக் கொள்கிறீர்கள். அங்கு எந்த வசதியும் கிடையாது. நீங்கள் வரைந்த ஓவியம் மட்டும் உங்களுடன் உண்மையாகவே இருக்கும். அதை வைத்து எப்படி உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வீர்கள்? என்று எல்லோரும் அவரவர் வரைந்த ஓவியங்களுடன் வகுப்பறையில் பேச வேண்டும்” என்றார்.

‘விமானத்தில் பறந்து வீட்டுக்கு போய்விடுவேன். நீச்சல் தெரியும் தப்பித்து விடுவேன்’ என்றவர்களில் ஒருவர் கூட அங்கு இருந்து உயிர் வாழும் சாத்தியங்களைப் பற்றி பேசவில்லை.

கருப்பசாமி நினைத்துப் பார்க்கவில்லை நாம் வரைந்த ஓவியம் பேசுவதற்கு இவ்வளவு சாதகமாக இருக்கும்மென்று.

பத்து நிமிடங்கள் பேசினான்.

“மரங்கள், வீடு, காய்கறித் தோட்டம் நெல் வயல் மற்றும் நீர் ஆதாரம் உள்ளது. இதைவிட எனக்கு என்ன வேண்டும் உயிர் வாழ்வதற்கு. அந்த தீவை விட்டு நான் ஏன் தப்பிக்க வேண்டும்?” என‌ பேராசிரியரின் கேள்விக்கு அற்புதமாக உணர்ச்சிவசமாக பேசிய கருப்பசாமி முதல் நாளிலேயே எல்லா மாணவர்களின் கவனத்தை பெற்றான்.

அன்று தொடர்ந்த வைராக்கியம் இன்றும் தொடர்கிறது கருப்பசாமியின் வாழ்க்கையில். கிராமத்தில் தன்னந்தனியாக வாழும் வைராக்கியம்.

சாப்பிட்டு கை கழுவி, வீட்டு வேலியோரத்தில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டும் கருப்பசாமியிடம் ஒன்றைக் கேட்டேன்.

அப்படி நான் வேறொன்றும் கேட்கவில்லை. “மரம் நடுறேன்னு ஏண்டா வெயில்ல சுத்திக்கிட்டு திரியிறேன்னு?” மட்டும் கேட்டேன்.

“போடா வேலையை பாத்துக்கிட்டு. அடுத்தவன் கொடுக்கும் பட்டியலை நிறைவேத்த நெனச்சோம்னா நம்ம தனித்தன்மையை இழந்து நிக்கணும். ஆமா! ஞாபகம் வச்சுக்கோ” என்றான்.

அதோடு நான் சும்மாயில்லாமல் “மரம் வெட்டப் போனா மாசம் பத்தாயிரம் சாம்பாதிக்கலாம்னு” சொல்லிப்புட்டேன்.

“மரம் வெட்டப் போனா மாசம் பத்தாயிரம் சாம்பாதிக்கலாம். ஆனா பத்து லட்சம் செலவு பண்ணி ஒரு மரத்தை உன்னால ஒரு மாசத்திலே உருவாக்க முடியுமா?” என்றான்.

கருப்பசாமியின் காரசாரமான பேச்சுக்களைக் கேட்கும் போதே எனக்குள் நம்பிக்கை ஊற்றெடுக்கும். அவன் பட்டியலிடும் ஏராளமான வசனங்களும் செயல்களும் என்னை எழுதத் தூண்டின. தனிமரம் எனும் கருப்பசாமியின் தன்னம்பிக்கை கதையை.

அந்த ஊரில் யாரும் கருப்பசாயிடம் பேசுவதில்லை. பைத்தியக்காரன்; மனநலம் சரியில்லாதவன் மரத்துக்கு தண்ணீ ஊத்திக்கிட்டு அவன் பாட்டுக்கு அலைவான் என்பது அவர்களின் கருத்து. எழுத்தாளன் என்கிற முறையில் நான் வித்தியாசமான‌ மனிதனாக அவனை உணர்ந்தேன்.

கட்டுக்கோப்பான கருத்த உடம்பு கருப்பசாமிக்கு. மிதிவண்டியில் நான்கு நான்கு குடமாக தண்ணீர் கொண்டு வந்து மரக்கன்றுக்கு ஊற்றுவான். தினமும் பத்து மரக்கன்றுகளையாவது நடுவது, குறிப்பிட்ட உயரம் அல்லது மரக்கன்றின் தன்மையைப் பொறுத்து சில அடிகள் வளர்ந்தவுடன் அதை விட்டு அடுத்த பணிகளை செய்வது.

மரக்கன்று வாங்க நிதி திரட்டுவது. விவசாயிகளிடம், தனியார் அமைப்புகளிடம், அரசிடம் கொஞ்சம் கொஞ்சமாக விதையாகவோ, மரக்கன்றாகவோ, பணமாகவோ பெற்று தன் வாழ்நாள் முழுவதும் மரம் நட்டு பராமரிப்பை மேற்கொண்டான். பசுமையான இலைகளை பார்க்கும் போது கருப்பசாமி பச்சைக் குழ‌ந்தையாய் மாறி விடுவதுண்டு.

மழை பெய்தால் கூட புதிதாக நட்ட மரக்கன்றுகளிடம் உட்கார்ந்து நனைந்து கொண்டே, வளர்ந்து பெரிய மரமாய் நிற்பதாய் கனவு காண்பது.

இப்படி கனவு காணும் இடைவெளியில் எழுத்துப்பணி காரணமாக சென்னை வந்து விட்டேன்.

முப்பது வருடங்கள் கடந்து விட்டன.

கருப்பசாமியின் முப்பது ஆண்டு உழைப்பு சாதாரண பணி அல்ல. இயற்கையை நேசிக்கும் நண்பர்களின் உதவியுடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ள கருப்பசாமி, தனது அறுபத்தைந்து வயதிலும் அந்த குடிசை வீட்டில் தான் வாழ்ந்துள்ளார்.

அவர் வீட்டில் சென்று பார்க்கும் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. அதில் பாதிக்கும் மேல் விவசாயம், மரங்கள், பறவைகள், விலங்குகள் உயிரினங்கள் சம்பந்தப்பட்டது. சிறுகதை, நாவல் என இலக்கிய புத்தகங்களும் இருந்தன.

அவர் புத்தகம் வாசித்து நான் ஒரு முறை கூட பார்த்ததில்லை. பிறகு தெரிந்தது அவர் இரவு மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். நீங்கள் கேட்கலாம் முப்பது ஆண்டுகள் கழித்து அவர் வீட்டுக்கு சென்றது ஏனென்று.

காரணமாக உண்டு. அதுதான் அந்தக் கிராமத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகள்.

குளிர்சாதன வசதி பொருந்திய கருப்பு நிற மகிழுந்தில் கிராமத்திற்குள் நுழைகையில் சாலையின் இரு புறங்களிலும் கைகோர்த்து நிற்கும் மரங்கள்.

அதில் பூக்கும் மரங்களும் உண்டு. அதுமட்டுமல்ல நானூறு ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அந்தக் கிராமம் முழுவதும் சுற்றிப் பார்த்தேன். பசுமையின் அடையாளம் இந்த கிராமம் என உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள். பறவைகளின் பாடல்களை கேட்க முடிகிறது.

முப்பதாண்டு நகர வாழ்க்கையில் நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை. சிறு வயதிலேயே நானும் கருப்பசாமியுடன் உழைத்து இருந்தால், இன்னொரு கிராமமும் பசுமையாக மாறியிருக்கும் அல்லவா. என் எழுத்துப்பணியைவிட‌ இது உயர்ந்ததாகப் பட்டது.

நான் நடத்தி வந்த “கிராம வாசிகள் ” என்ற இதழில் “நந்தவனத்தின் நாயகன் கருப்பசாமி” என்ற கட்டுரையை எழுதினேன். அடுத்த முயற்சியாக அவரை நேர்காணல் செய்ய முடிவு செய்தேன்.


இதற்குள் ஓராண்டு கடந்து விட்டது.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது நேர்காணல் செய்ய அவர் வீட்டுக்கு போனபோது உடல் நலமின்றி கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்.

ஆனால் அவரின் கம்பீரமான பேச்சு மாறவில்லை. புகைப்படக் கலைஞரைக் கொண்டு நேர்காணலோடு அந்தக் கிராமம் முழுவதும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

நேர்காணலில் அவர் சொன்னவை. “நான் வாழும் உலகத்தை நான் செதுக்கிக் கொண்டேன். இதமான காற்று மரத்தடியில் படுத்துறங்கும் சுகம் வேறு எங்கு கிடைக்கும்.

மனிதனை விட ஏராளமான விலங்குகளும் பறவைகளும் பல ஆயிரம் விதைகளையும் தாவரங்களையும் பரப்புகின்றன.

விலங்குகளின் எச்சங்களில் இருந்துதான் நிறைய தாவரங்கள் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இன்று முப்பது ஆண்டுகள் வளர்த்த மரங்களை முப்பது விநாடிகளில் சாய்த்து விடுகிறோம்”.

மரம் தன் வாழ்நாளில் தூய்மையான காற்றையும் மழைவளத்தையும் மண் வளத்தையும் தருகிறது” என ஏராளமான மரங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக அவர் தெரிவித்த விருப்பம் நான் இறந்த பிறகு நானூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இருனூறு வகையான மரங்களின் நடுவே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான்.

அவரே விளக்கமும் சொன்னார். கோடிக்கணக்கில் மணிமண்டபம் கட்டுவதை விட, இயற்கைக்கு நான் கொடுத்த சிறிய நந்தவனத்தில் மரணத்திற்கு பிறகு நிம்மதியாக உறங்க விரும்புகிறேன் என்பதுதான்.

இன்னும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.”என் உழைப்பின் தொடர்ச்சியாக பறவைகளும், விலங்குகளும் இன்னும் பல ஆயிரம் தாவரங்களையும் இது போன்ற‌ நந்தவனங்களையும் உருவாக்கும்” என்றார்.

பக்கத்து கிராமத்தில் விசாரித்துப் பார்த்தேன். கருப்பசாமியை நாயகனாக கொண்டு சில தன்னார்வ இளைஞர்கள் மரம் நடும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது தெரிய வந்தது.

அவருக்கு பண உதவி செய்து கொடுத்தேன். மாநில அரசுக்கு கருப்பசாமியின் சாதனைகளை தொகுத்து கடிதம் எழுதினேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு மாநில அரசு உயர்ந்த விருதுகளை அளித்து சிறப்பித்து. அதன் பிறகு தன்னார்வ அமைப்புப்புகளும் தனியார் நிறுவனங்களும் பல விருதுகளை வாரி வழங்கின.

ஆனால் இந்த விருதுகள் எல்லாம் எதிர்காலத்தில் இந்த வனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமா ? என்கிற கேள்வி அவருள் இருந்துகொண்டேயிருந்து.

தன் சொந்த கிராமத்தில் இந்தப் பணியை துவங்கிய போது பைத்தியக்காரன் என்றார்கள். பத்து கிராமம் தள்ளி ஊரின் ஒதுக்குப்புறமாக தங்கி தன் பணியை துவங்கியவர். என்னைக் கூப்பிட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை பள்ளிகளுக்கு கொடுத்து விடு என்றார்.

சில வருடங்களில் அவர் இயற்கையில் முழுவதும் இணைந்து விட்டார் மரணம் என்கிற புள்ளியில். கிராமத்திற்கு செல்லும் போதொல்லாம் அந்த வனத்திற்கு செல்வதுண்டு.

உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு மரமும் கரும்பச்சை நிறத்துடன் கருப்பசாமியின் சாயலாகவே இருகின்றன. தனிமரம் தோப்பாகாது. ஆனால் தனி ஒரு மனிதன் ஒரு வனத்தையே உருவாக்கியிருக்கிறான்.

கருப்பசாமியின் அத்தனை அவமானங்களும் நம்பிக்கையும் பச்சை மரங்களாக உயர்ந்து நிற்கின்றன.

தனித்தீவில் சிக்கிகொண்ட கருப்பசாமியின் வாழ்க்கை. கல்லூரியின் முதல் நாள் வகுப்பில் அவர் பேசிய தன்னம்பிக்கை. கிராமம் எனும் தனித் தீவிலும் தன்னம்பிக்கையாக வாழ்ந்துள்ளார். இன்று ஒரு கிராமமே கருப்பசாமியின் பெயர் சொல்லும் அளவுக்கு காடுகளின் நாயகனாக மாறி இருக்கிறார்.

இதுவரை அவர் நட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது ஆகும்.

நீங்கள் கேட்கலாம் இன்னும் ஒரு மரம் இருந்தால் இரண்டு லட்சம் மரங்கள் ஆகியிருக்கும் அல்லவா என்று? அந்த ஒரு மரம்தான் அத்தனை மரங்களுக்கும் நடுவே நந்தவனத்தின் நாயகனாக உறங்கும் கருப்பசாமி என்கிற “தனி மரம்”

ப. கலைச்செல்வன்

One Reply to “தனி மரம் – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.