தன்வினை – சிறுகதை

காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.

போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,

“அடுத்த புதன் அன்னிக்கு சென்னைக்கு முக்கிய வேலையாய் வரேன். பஸ் விட்டு இறங்கினதும் உனக்கு போன் பண்றேன்.

நீ வந்து என்னை பிக்கப் செய்து நான் சொல்ற இந்த அட்ரஸ்ல விட்டுடு, சரியா?

அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ, உன்னை நம்பித்தான் கிளம்பறேன் மறந்துடாத” என்று சொல்லியிருந்தான் பாபு,

மறக்கவில்லை செந்தில், அதனால்தான் போனை ஆஃப் செய்து வைத்தான். பாபு சொன்ன அட்ரஸ் இங்கிருந்து தொலைவு தான்.

எப்படியும் பெட்ரோல் செலவு 200 ரூபாயைத் தாண்டும். எதுக்கு வெட்டிச் செலவு. ஏதாவது ஆட்டோ பிடித்து போகட்டும். மனதில் எண்ணியவனாய் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரியவில்லை. ஆட்டோ உறுமலில் தூக்கம் கலைந்தான்.

ஜன்னலில் பார்த்தபோது, ஆட்டோவில் இருந்து மல்லிகாவும் குழந்தைகளும் இறங்குவதைக் கண்டான்.

‘சனியன் பிடித்தவள் நாளைக்குத்தானே வருவதா சொன்னா, திடீர்ன்னு வந்து இறங்குறா. அதுவும் ஆட்டோவுல’ சுள்ளென்று எழுந்த கோபத்தோடு வெளியே வந்தான் செந்தில்.

அவனைவிட அதீத கோபத்தில் கத்தினாள் அவனது மனைவி மல்லிகா.

“நீங்க எல்லாம் எதுக்கு போனுன்னு வெச்சிருக்கீங்க, காலையில் இருந்து டிரை பண்றேன், சுவிட்ச் ஆப்னே வருது. வேற வழியில்லன்னு ஆட்டோவுல வந்தேன். போய் ஆட்டோவுக்கு 300 ரூபாய கொடுத்து அனுப்புங்க.”

“நாளை தான வர்றதா சொன்ன?” பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.

“ஏன் இன்னைக்கு வரக்கூடாதா?”

இடுப்பில் கை வைத்தபடி கண்களை விரித்து அவள் கேட்டவிதத்தைப் பார்த்து, அவளோடு மல்லுக்கட்ட தன்னால் முடியாது என உணர்ந்த செந்தில் ஆட்டோவுக்கு தண்டம் கட்டச் சென்றான்,

‘தன்வினை தன்னைச் சுடும்’ எப்பொழுதோ படித்த பொன்மொழி, சிந்தையில் மின்னலாகவோ நக்கலாகவோ ஏதோ ஒன்றாக வந்து மோதியதை உணர்ந்தான் செந்தில்.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

One Reply to “தன்வினை – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.