தன் வினை தன்னைச் சுடும் – கதை

மங்களுரில் ராமு என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு நன்னன், பொன்னன் என இரு மகன்கள் இருந்தனர்.

நன்னன் பெயரில்தான் நன்னனே தவிர தந்திரம் நிறைந்தவன். ஏமாற்றுக்காரன். பொன்னன் நல்லவன். சூதுவாது தெரியாதவன்.

ராவிடம் ஒருகாரை வீடு, ஒருகூரை வீடு என இரு வீடுகளும், ஒரு கறவை மாடு, ஒரு மலட்டு மாடு என இரு மாடுகளும், நன்செய், புன்செய் என இருநிலங்களும் இருந்தன.

பெரியவர் தன் இருமகன்களிடம் தன்னுடைய காலத்திற்கு பின் சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொள்ளும்படி கூறியிருந்தார்.

சிறிது காலத்தில் பெரியவர் மறைந்தார். நன்னன் தந்தையின் சொத்தில் நல்ல பலன் தருபவைகளைத் தான் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டான்.

தன் தம்பி பொன்னனிடம் “தம்பி நீ கூரைவீடை வைத்துக் கொள். அது வெயில் காலத்தில் குளுமையாகவும், பனி காலத்தில் பனியிரங்காமலும் உன்னைப் பாதுகாக்கும்.

எனக்கு காரை வீடு.

நீ மலட்டு மாட்டை வைத்துக் கொள். மாட்டிலிருந்து பால் கறக்கும் வேலை உனக்கு மிஞ்சும். நான் கறவை மாட்டை வைத்துக் கொள்கிறேன்.

நன்செய் நிலம் எனக்கு. புன்செய் நிலம் உனக்கு.’ எனக் கூறி பாகம் பிரித்தான்.

அப்பாவியான பொன்னன் “அண்ணா, உனக்கு எது நல்லது என்று படுகிறதோ அதைச் செய். நீ கொடுத்த சொத்துக்கள் எனக்குப் போதும்” என்று கூறி நன்னன் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டான்.

பொன்னன் கூரை வீட்டிற்கு குடியேறினான். புன்செய் நிலத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்து வாழ்ந்து வந்தான்.

சிறிது நாட்கள் கழித்து பொன்னனின் மலட்டு மாடு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது.

பொன்னன் மலட்டு மாட்டின் தோலில் டமாரம் ஒன்றைச் செய்து கொண்டான். டமாரத்தை எடுத்துக் கொண்டு பக்கத்து நகரத்தில் சென்று விற்க எண்ணினான்.

நகரத்திற்குச் செல்ல வழியில் இருந்த அடர்ந்த காட்டினைக் கடக்க வேண்டும். காட்டினைக் கடந்து நகரத்திற்கு பொன்னன் சென்றபோது இருட்டிவிட்டது.

காட்டில் இருந்த விலங்குகளுக்குப் பயந்து பொன்னன் டமாரத்தோடு உயர்ந்த மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

பயத்தில் பொன்னனுக்கு உறக்கம் வரவில்லை. நடுஇரவில் நான்கு திருடர்கள் அம்மரத்திற்கு அடியில் வந்து அமர்ந்தனர்.

தாங்கள் கொள்ளையடித்தப் பொன்னையும் பொருட்களையும் பங்கு வைக்கத் தொடங்கினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பொன்னனின் கையிலிருந்து டமாரம் கீழே விழுந்தது. டமாரம் மரத்தின் கிளைகளில் மோதி ‘டமால் டுமீல்’ என பெருத்த ஓசையை உண்டாக்கியது.

திருடர்கள் டமாரத்தின் சத்தத்தைக் கேட்டதும் தங்களை யாரோ பிடிக்க வந்துள்ளனர் என்று எண்ணி கொள்ளையடித்தவற்றை அப்படியே போட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்தனர்.

‘தன்னுடைய டமாரம் உடைத்து விட்டதோ?’ என்று எண்ணிய பொன்னன் மரத்திலிருந்து மெதுவாகக் கீழே இறங்கினான்.

மரத்தின் அடியில் கிடந்த டமாரத்தை எடுக்கக் குனிந்தான் பொன்னான்.

டமாரத்தின் அருகில் பொன்னும் பொருளும் இருப்பதைப் பார்த்தான். ‘இப்பொருட்களை எப்படி எடுத்துச் செல்வது?’ என்று எண்ணிய பொன்னனின் கண்ணில் திருடர்கள் கொள்ளையடித்தவற்றை கட்டி எடுத்து வந்த சாக்கு கண்ணில் பட்டது.

அங்கே இருந்த பொருட்களை சாக்கில் மூட்டையாகக் கட்டி டமாரத்துடன் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

லேசாக விடியும் நேரத்தில் மரத்தில் இருந்து இறங்கி மூட்டையுடனும் டமாரத்துடனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

நன்கு விடிந்த பிறகு மரத்தடிக்கு திருடர்கள் திரும்பி வந்தனர். தங்களுடைய பொருட்களைக் காணாது “நம்மிடமே பொருட்களை கொள்ளையடித்தவனை கண்டுபிடித்து அடித்து நொறுக்க வேண்டும்” என்று கூறியபடி பெரும்கோபத்துடன் அங்கிருந்து சென்றனர்.

கூரைவீட்டிற்குள் பொன்னன் தங்கக்காசுகளை எண்ணிக் கொண்டிருப்பதை சன்னல் வழியே பார்த்த நன்னன் வீட்டிற்குள் சென்று தங்கக்காசு பற்றி விசாரித்தான்.

நடந்தவற்றைக் கூறிய பொன்னன் “உனக்கு வேண்டுமானால் இதில் பாதியை எடுத்துக் கொள்” என்று கூறினான்.

“இது எனக்கு வேண்டாம். நானும் உன்னைப் போலவே என்னுடைய மாட்டின் தோலில் டமாரம் செய்து கொண்டு நீ செய்தபடி திருடர்களிடமிருந்து பொருட்களை எடுத்து வந்து முழுவதையும் நானே வைத்துக் கொள்வேன்.” என்று கூறிச் சென்றான்.

தன்னுடைய கறவை மாட்டைக் கொன்று தோலை எடுத்து டமாரம் செய்து கொண்டு பொன்னன் கூறிய அடையாளங்களை வைத்து காட்டிற்குச் சென்று மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் நன்னன்.

நள்ளிரவில் திருடர்கள் திருடிய பொருட்களின் மூட்டையுடன் மரத்தடிக்கு வந்தனர். சிறிது நேரத்தில் நன்னன் டமாரத்தை நழுவ விட்டான். அது பெருத்த ஓசையை எழுப்பியபடி கீழே விழுந்தது.

திருடர்கள் சுதாரித்துக் கொண்டு பந்தத்தை பொருத்தி, மரத்திலிருந்த நன்னனைப் பிடித்து அடித்து நொறுக்கிவிட்டு திருடிய பொருட்களுடன் அங்கிருந்து சென்றனர்.

நன்னன் மிகுந்த வேதனையுடன் வீடு வந்து சேர்ந்தான். தன் வினை தன்னைச் சுடும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.