தழுவல்கள் – கவிதை

எங்கே போனாளோ அம்மா
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்

படித்து பள்ளி விட்டு
வைத்த கண் சிமிட்டாமல்
வீடு வந்ததும்
வாரி எடுத்து அப்பா தரும்
அந்த தழுவல்
பெருமையூட்டும் ஆரத்தழுவல்

அடித்து புரண்டாலும்
அடியோடு விரட்ட நினைத்தாலும்
வேலை வரும் போது
வேண்டி தம்பியை தழுவும் தழுவல்
பசாங்கு அல்ல அது
பாசத்தழுவல்

முதல் வேலை கிடைத்ததும்
வேண்டா விருப்பாய்
வேறு வழியின்றி
வெளி ஊரோ, நாடோ செல்கையில்
அம்மா, அப்பா, அண்ணன், நண்பன்
பெருமையும் கவலையும் கூடி
ஒரு தழுவல்
நம்பிக்கையூட்டும் தழுவல்

புதிய நண்பன் கிடைத்த‌தும்
புதிய இடத்தில், புதிராய் இருக்கும் இடத்தில்
நமக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றே
புரிகின்றபோது
நண்பன் தரும் தழுவல்
பயம் போக்கும் தழுவல்

காதலோடு காமமுற்று
பழகலோடு ஊடலுற்று
பிறகுணர்ந்து ஆகா
இவன் / இவள் என்பதனை கடந்து
என்னை நேசிக்கின்றான் / ள்
என உணரும்து போது
காதல் தழுவல்

காதலோடு காமத்தோடு நில்லாமல்
அந்த அவனையே, அவளையே
துணையாக்கி அவனோடு
காமமுற்று கூடும்போது
அவள்ளுள்ளே அவன்
ஒருவர் உள்ளே ஒருவர்
ஈருடல் ஓர் உயிராகி
ஒரு தழுவல்
காமத்தின் இன்பத் தழுவல்

கூடி முடித்து முயங்க முயற்சிக்கும் போது
உலகை வென்றதாக
ஓர் உணர்வுடன் நினைப்புடன்
‘ஓர் நல்லவன் / ள் நம்மவன் / ள்’ என்றே
தழுவும் தழுவல்
அது தாம்பத்யத் தழுவலென்ற
அற்புதத் தழுவல்

காதலித்து காமமுற்றவள்
கருவுற்று பெருமையுடன்
அவனைக் காணும்போது
உன் குறும்பு நம் காமம்
இப்போது
நம் பெயர் சொல்ல
ஓர் விதையாய் என்னுள்ளே
என்று சொல்லும் போது
அவள் தரும் ஓர் தழுவல்
பெருமிதத் தழுவல்

இவளுக்கா ஒரு குழந்தை
இவளே ஓர் குழந்தை என்றே
ஓர் மலைப்புடன்
புது வரவோடு மகளே
எனத் தழுவும் அந்த தழுவல்
புளகாங்கிதத் தழுவல்

மூன்றாம் தலை முறையோடு
முறையாய் வாழ்கின்றோம்
இதுவே பெருமை என்றே
பயமறியாமல் ஓடுமந்த பச்சிளம் பேத்தியை
முடியாமல் ஓடி எடுத்து
தழுவுமந்த தழுவல்
எல்லா பேரின்பமும்
பெற்று விட்டேன்
என்கின்ற
பேரின்பத் தழுவல்

அலுவல்கள் மத்தியிலும்
ஆத்திரத்தின் உச்சியிலும்
பதவி உயர்வு கிடைத்தாலும்
கிடைக்காமல் போனாலும்
உன்னை கனிவோடு பார்க்குமந்த
சில உள்ளங்கள்
உனது வெற்றிக்கு
ஊக்கம் தரும்
அவர் தரும் தழுவல்
ஊக்கத் தழுவல்

உடல் தளர்ந்து உள்ளம் முதிர்ந்து
எல்லோரையும் கனிவுப் பார்வை பார்க்கும்
துணிவோடு
பாட்டனாகி
பாட்டியாகி
“விடமாட்டேன் உன்னை” என
அடித்து கொல்ல வந்த
அடுத்த வீட்டுக்காரனை
கைபிடித்து ஆரத்தழுவும் அந்த
கனிவுத் தழுவல்

காலன் வருகின்றான் என்று
காலம் சொல்கிறது
கோவம் கொண்ட மகனை
கூப்பிட்டு கூப்பிட்டு
தழுவத் தோன்றும்
ஏக்கத் தழுவல்

எல்லாம் போச்சே
அதைச் செய்தானே
இதைக் கொடுத்தானே
வாழ்ந்தானே
வாழ்ந்து கெட்டானே
கொடும்பாவியோ
கொல்லைகாரனோ
உன்னதமானவனோ
எல்லாம் போச்சே
இறந்து போனானே என்று
சொந்தங்கள் பந்தங்கள்
இறுதியாகத் தழுவும் தழுவல்
கண்ணீர் இரங்க
இரங்கல் இறுதித் தழுவல்

Dr. இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக்கல்வி)
மொழிக் கல்வித் துறை
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புதுதில்லி 110016
கைபேசி: 09968651815
மின்னஞ்சல்: rama_meganathan@yahoo.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.